உலகம் முழுவதும் உயிர்ப்பலி பதிவாவதால் இனியும் ஒமைக்ரானை லேசானதாகக் கருதினால் அது தவறு என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில்,
“உலகம் முழுவதும் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவிவருகிறது. முந்தைய டெல்டா வைரஸை அடக்கி இதன் பரவல் மேலோங்கி வருகிறது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டாவை ஒப்பிடும்போது சற்றே மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட முற்றிலுமாகவே இந்த வைரஸை மிதமானது என்று வகைப்படுத்திவிடக்கூடாது. இதற்கு முந்தைய திரிபுகளைப் போல் ஒமைக்ரானாலும் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதியாகிறார்கள். உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், சுனாமி போல் உலகை ஒமைக்ரான் அச்சுறுத்தி மருத்துவக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மட்டும் உலகம் முழுவதும் 9.5 மில்லியன் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரம் பதிவான கரோனா தொற்றைவிட 71 சதவீதம் அதிகமாகும்” என்றார்.