ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம்

311 Views

 ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம்

இலக்கு மின்னிதழ் 147 இற்கான ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலை மோசமடைகிறது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை என்பதால், ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா குறித்துக் கடுமையான கண்காணிப்புக்களை மேற்கொண்டு, ஏற்புடைய வளர்ச்சிகளைச் செய்ய சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமென இவ்வாரத்தில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

செப்டெம்பர் 13ஆம் திகதி சபையின் இவ்வாண்டுக்கான அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், உறுப்புரிமை நாடுகள் கோத்தபாயா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் சுயாதீனமான அரச நிறுவனங்களையும், மக்களுடைய சிவில் அரசாங்கத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் வன்முறைப்படுத்திப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளன. இந்த நாடுகள் சிறிலங்கா மனித உரிமைகள் குறித்த அனைத்துலக தரத்தைப் பேணுவதற்கான பொறுப்புக்களை நிறைவேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் கோத்தபாயாவின் தலைமையிலான ஆட்சி ஆரம்பமான 2019 முதல்  முன்னைய சிறிய அளவிலான வன்முறைப்படுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்டனவும் நிறுத்தப்பட்டு, எல்லாமே பழைய நிலைக்குக்  மீளவும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அனைத்துலகத்தின் தொடர்ச்சியான கவனிப்பும், அழுத்தங்களும்தான் அங்குள்ள சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அஞ்சி வாழ்தலில் இருந்து விடுபடுவதற்கு உதவ முடியும்.

2021ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமை வன்முறைகள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து பொறுப்புக் கூறலை முன்னேற்றுவதற்கான முக்கிய தீர்மானமான 46/1 தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஒழுங்கான முறையில் அறிக்கை சமர்ப்பிக்கவும் சபைக்கு அதிகாரம் அளித்தது. ஆயினும் 2020 முதலே ராசபக்ச அரசாங்கம் முன்னைய நிர்வாகம் மனித உரிமைகள் ஆணையகத்துடன் நீதியை ஏற்படுத்தி, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர எடுத்த பங்களிப்புக்களையும் நிராகித்து வருகிறது.

இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தினர் தப்பியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனித உரிமைகளை மேம்படுத்தாதவாறு அவர்களைத் தமது படைகளைக் கொண்டும் புலனாய்வுத் துறையினரைக் கொண்டும் அச்சப்படுத்தி வருகின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் பேசுகையில், அவர்கள் தாங்கள் எந்நேரமும் எதற்காகவும் கைது செய்யப்படலாம் என்கின்றனர். வடக்கு கிழக்கில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இதையே சொல்கின்றனர்.

அதிகாரிகள் தமிழ் சிறுபான்மையினரையும், முஸ்லீம்களையும் கொடுமையான பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கண்மூடித்தனமாகக் கைதாக்குவதன் மூலம், நீதிக்கான குரலை மௌனமாக்குகின்றனர்.

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரெட்ன 2019ஆம் ஆண்டின் கொடூரமான ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பாக 311 பேரைக் கைதாக்கியிருப்பதாகச் சொல்கின்றார். இவர்களில் பலர் இரண்டு வருடத்திற்கு மேலாக கைதிகளாக உள்ளனர். ஆயினும் இதுவரை இவர்கள் குறித்த வழக்கு விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப் படவில்லை.

அமைதியீனங்களை ஏற்படுத்துபவர்களாகக் கருதப்படுபவர்களை இரண்டு வருடங்கள் விசாரணையின்றி புனர்வாழ்வு அளித்தல் என்ற பெயரில் தடுத்து வைக்கும் கட்டளையினை வழங்கியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொடுமையான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகளுடன், பொலிஸ் தடுத்து வைத்தல் மையம் ஒன்றைக் கொழும்பில் புதிதாகத் திறந்துள்ளமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான மனித உரிமைகள் வன்முறையை அதிகப்படுத்தப் போகிறது. இது 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதாக அரசாங்கம் வெளிநாடுகளுக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிராக உள்ளது.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரை 18 மாதங்கள் நீதிமன்றத்துக்கு முன் கொண்டு வராது, தடுத்து வைக்கும் அதிகாரம் நிலை நிறுத்தப்படுகிறது. அரசாங்கத்தின் நியமனமான மூன்று அங்கத்தவர் ஆலோசனைச் சபையும் வன்முறைப் படுத்தல்களுக்கு எதிரான எந்த உருப்படியான சட்டப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு என்னும் ஆங்கிலத்தில் டி. ஜ. டீ எனப்படும் பகுதி சமூகத்திற்குக் கால்கட்டுப் போடும் தன்மையாதானதாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒழுங்காக அரச சார்பற்ற அமைப்புக்களுக்குச் சென்று நிதி அறிக்கைகளைப் பெற்றும், தொண்டர்கள் பணியாளர்கள் பட்டியல்களையும், அலைபேசி இலக்கங்களையும் பெற்று அவர்களை அச்சப்படுத்துகின்றனர். இது திட்டமிட்ட வகையில் ஒழுங்காக நடைபெறுகிறது.

கூடவே ஆகஸ்ட்டு 31இல் தூதரகங்களுக்கு அமைதியை நிலைநாட்டவும், புனர்வாழ்வு அளிக்கவும் வளர்ச்சிகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஆதாரங்களற்ற அறிக்கையினை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

சிறிலங்காவின் நீதி அமைச்சர் 500 அமெரிக்க டொலர்களை, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர் இறந்து விட்டதை ஏற்றுக் கொண்டால், புனர்வாழ்வு பெறலாமென்று இவர்களின் நீதிக்கான குரலை மௌனிக்க வைக்க முயன்று வருகிறார்.

இந்தத் தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு இவ்வாரத்தில் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணிகளுடன் பிரதமர் இத்தாலிக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். அரசஅதிபர் ஐக்கிய நாடுகள் சபை தொடக்க நாளுக்கு நியூயோர்க் செல்லவிருக்கின்றார்.

இவைகளை எல்லாம் கவனத்தில் எடுத்து, புலம்பதிந்த தமிழர்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகளை மனித உரிமைகள் ஆணையகம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் காலமாக இந்தவாரம் தொடங்கவுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply