“மேதகு 2 திரைக் கதையை மக்களிடம் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழருடைய கடமையாகும்“

WhatsApp Image 2022 08 05 at 8.31.21 AM  “மேதகு 2 திரைக் கதையை மக்களிடம் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழருடைய கடமையாகும்“

மேதகு 1 திரைப்படம் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றிருந்த நிலையில், மேதகு 2 திரைக்கதை உருவாக்கப்பட்டு திரைப்படமாக வெளிவரவுள்ளது. முன்னதாக குறித்த படத்தின் பாடல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இத் திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் இரா.கோ.யோகேந்திரன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி,

கேள்வி:

மேதகு இரண்டு திரைப்படத்தின் வெற்றி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை உலக மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு தளம். அதற்கான பங்களிப்பை உலகத் தமிழ் மக்களிடம் நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள்?

“தமிழ்நாட்டில் நிலவுகின்ற அரசியற் சூழலில் தலைவர் அவர்களைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் ஒரு திரைப்படத்தை எடுத்து அதனை வெளியிடுவது என்பது பெரும் சவால்கள் நிறைந்த ஒன்று. இதற்கு முன்னர் இயக்கம் சார்ந்த திரைப்படங்களை எடுத்தும் அவற்றை வெளியிட முடியாத சூழலே இருந்தது. அப்படியிருந்தும், மேதகு திரைக்களமானது அத்தனை இடர்பாடைகளையும் எதிர்கொண்டு, அவற்றைத் தகர்த்தெறிந்து பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகத் தமிழர்களின் பேராதரவோடு பொருளியல் சிக்கலைச் சமாளித்தும், நடைமுறையில் வரும் சிக்கல்களைக் களத்தில் எதிர்கொண்டும் மேதகு திரைக்களமானது பெருமுயற்சியையும் உழைப்பையும் செலுத்தியதன் பயனாக மேதகு 2 வெளிவருகிறது. எனவே, புலம்பெயர்ந்த தேசங்களில் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் முயற்சியில் திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தைப் பார்த்து ஆதரவு வழங்குவதோடு தளத்தில் வெளியாகும் போது அதனை அனைவரிடமும் சென்றடையச் செய்யுமாறு மக்களை வேண்டிக்கொள்கிறோம். இத்திரைப்படத்தைப் பேசுபொருளாக்கி எமது போராட்டத்தின் அறத்தையும் தலைவரின் புரட்சிகர வாழ்வையும் பிற தேசிய இனங்களிடமும் கொண்டு சேர்க்க உலகத் தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும்“.

கேள்வி:

ஆயிரம் வருடங்கள் காத்திருந்தாலும் கிடைக்காத ஒரு தலைவரின் கதையை படமாக்குவதில் நீங்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியதாக அறிந்தோம். உலகில் உள்ள செல்வந்த இனங்களில் ஒன்றான தமிழ் இனத்தின் தலைவர் தொடர்பான கதையை படமாக்குவதில் நீங்கள் எதிர்கொண்ட நிதி நெருக்கடி தொடர்பில் கூற முடியுமா?

“நிதிநெருக்கடி என்பது ஒரு இயக்குநராக என்றைக்குமே என்னைப் பாதித்ததில்லை. அப்படிப் பாதிக்கும் அளவிற்கு மேதகு திரைக்களம் விடவில்லை. அயர்லாந்தில் வசிக்கும் திரு அண்ணன் உலகத் தமிழர்களிடம் நிதிதிரட்டி தேவையான பொருளாதாரத்தை எங்களுக்குக் கொடுத்தார். டென்மார்க்கில் வசிக்கும் சுமேஸ்குமார் அண்ணன் நிதிதிரட்டுவது மற்றும் அவற்றை முறைப்படி மேலாண்மை செய்வது என நிதி தொடர்பான விடயங்களைப் பார்த்துக் கொண்டார்கள். தஞ்சை குகன்குமார் அவர்கள் களத்தில் அவற்றை நேரில் நின்று சேர்ப்பித்து மேற்பார்வை செய்தார்.

நிதிநெருக்கடி என்று சொல்லுவதானால், முதலில் இத்திரைப்படத்தைச் சின்னதாக எடுக்கலாம் என முடிவுசெய்தோம். படப்பிடிப்பைத் துவங்கிய பின்னர் போகப்போக அந்தக் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க எடுக்கலாம் என மேதகு திரைக்களம் கூறியது. உண்மையில் நடந்த வரலாற்றை அப்படியே காட்சிப்படுத்துவதானால் அது பிரமாண்டமாகவே செய்ய வேண்டியிருக்கும். சுதுமலைப் பிரகடணமாக இருக்கட்டும், தாக்குதற் காட்சிகளாக இருக்கட்டும்… இவற்றையெல்லாம் முறையாகக் காட்சிப்படுத்துவதென்பது பெரும் பொருட்செலவுக்கு இட்டுச்செல்லும். அதனால் செலவுகள் கையை மீறிப்போக நிதிநெருக்கடி ஏற்பட்டது. ஒரு 5- 6 நாட்கள் படப்பிடிப்புச் செய்வது என்று திட்டமிட்டு ஒரு இடத்திற்குப் போவோம். ஆனால், குறித்த நேரத்தில் நிதி வந்து சேராமையால் ஒரு 3 நாட்களுக்குள் படப்பிடிப்பை இடைநிறுத்தி விட்டுப் பின்னர் நிதி வந்ததும் தொடர்வோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் படபிடிப்பை மேற்கொண்டோம். இதனால் நிதிநெருக்கடி ஏற்பட்டது. ஆனால், இயக்குநருக்கோ அல்லது ஏனைய தொழினுட்பக் கலைஞர்களுக்கோ எந்தவொரு அயர்ச்சியும் ஏற்படாதவாறு மேதகு திரைக்கள அண்ணன்கள் திருக்குமரன், தஞ்சை குகன்குமார் மற்றும் சுமேஸ் ஆகியோர் பார்த்துக்கொண்டனர்“.

 கேள்வி:

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு தேசத்தின் விடுதலைப் போராளியும் தலைவருமான மேதகு பிரபாகரன் அவர்களின் படத்தை வெளியிடுவதில் தமிழ் இனத்தின் ஊடக பங்களிப்பு எவ்வாறு உள்ளது?  

“ஒரு திரைத்துறையைச் சேர்ந்த ஒருவனாகச் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் முழுக்க முழுக்க ஊழல்மயப்பட்டவை. காசு வாங்காமல் எந்தச் செய்தியையும் வெளியிடமாட்டார்கள். பெரும் தொகை கொடுத்துத் தான் ஊடகங்களில் செய்தியாக்க முடியும். விஜய், ரஜனி போன்ற ரசிகர்களை அதிகமாகக்கொண்ட நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் என்றால், அந்த ரசிகர்களின் ஆதரவு ஊடகங்களுக்குத் தேவையென்பதற்காக அது கொடர்பான செய்திகளை வெளியிடுவார்கள். மற்றப்படி, செய்தி வெளியிடமாட்டார்கள். அப்படியிருந்தும், மேதகு- 1 இற்கு நிறையப்பேர் செய்திகளைப் பகிர்ந்தும் நேர்காணல்கள் மூலமாகவும் ஊடகங்கள் ஆதரவு தெரிவித்தன. மேதகு- 2 இற்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. சமூகவலைத்தளங்களில் எப்படி எம்மை ஒடுக்குகிறார்கள் என்றால், முகநூலிலோ அல்லது இன்ஸ்ரொகிராமிலோ இயக்கத்திற்கு ஆதரவான செய்திகளைப் பகிர்ந்தால் கணக்குகளை முடக்குகிறார்கள். எனது கணக்குட்பட பல பேருடைய கணக்கை முடக்கினார்கள், முடக்கப்போவதாக எச்சரிக்கைப் பட்டியலில் வைத்துள்ளார்கள். அதனால் எமது செய்திகளைப் பகிர பல பிரபலங்கள் தயங்குகிறார்கள்.

அப்படியிருந்தும், தமிழினத்திற்காகவும் எமது மக்களுக்காகவும் எதிர்நின்ற எத்தனையோ நாடுகளை எதிர்த்தும் எத்தனையோ உலகச் சூழ்ச்சிகளை எதிர்கொண்டும் கடைசிவரை கொண்ட கொள்கையில் விட்டுகொடுப்பின்றி உலகம் வியக்கக் களத்தில் நின்ற தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்வை காட்சிப்படுத்தும் இத்திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மனச்சான்றுள்ள ஊடகங்கள் முன்வருகின்றன. என்னதான் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பல ஊடகங்கள் இருந்தாலும், மனச்சான்றுள்ள ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவை எம்முடன் கூட நிற்கின்றன. இப்போது மேதகு 2 இற்கு ஒரு மக்கள் தொடர்பாளர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். எந்தவொரு பணம் சம்பாதிக்கும் நோக்கமுமின்றி உழைக்கிறார்கள். திரைத்துறையில் யாரும் அப்படி நிதி ஆதாயம் இல்லாமல் பகிரமாட்டார்கள். நான் திரைத்துறையில் உள்ளவனாகச் சொல்கிறேன்… இது தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் மீதான பற்றினால் மட்டுமே சாத்தியமாகிறது“.

கேள்வி:

மேதகு இரண்டு படம் உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எம்மைபோன்றவர்களிடம் ஏக்கமாக உள்ளது. அதனை நிறைவேற்ற நீங்கள் என்ன உதவியை தமிழ் மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள்?

“உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தாம் வாழும் அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேதகு 2 இனைத் தங்களால் திரையிட முடியுமென்றால், மேதகு திரைக்கள அண்ணன்களைத் தொடர்புகொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிறிய நாடுகளாக இருந்தால் கூட அங்குள்ள தமிழ் அமைப்புகள் அந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஏனெனில், மேதகு திரைக்களம் இதனை இலாபநோக்கிற்காகச் செய்யவில்லை. ஒரு இயக்குநராகச் சொல்கிறேன்… தமது கைக்காசை இழந்து பற்றுறுதியோடு இந்த வேலையைச் செய்கிறார்கள். இது மேதகு திரைக்களத்தோடு முடிந்து போகும் கடமையல்ல. இதைக்கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழருடையதும் கடமையாகும். அதனால் இந்தப் படத்தை திரையரங்குகளை வாடகைக்கு எடுத்தோ அல்லது வேறுவழியிலோ திரையிட மேதகு திரைக்களத்தினரைத் தொடர்புகொள்ளலாம்.

இப்படியாக அந்தந்த நாடுகளில் இத்திரைப்படம் வெளியாகும் போது, உங்கள் குடும்பத்தினருடன், அடுத்த தலைமுறையினருடன் சென்று பார்வையிடுங்கள். உங்களுடன் அரசியற் தர்க்கம் புரியும் மாற்றார்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்துங்கள். இத்திரைப்படத்தை ஒரு அரசியற் கருவியாகப் பயன்படுத்துங்கள். நாம் நாதியற்றுப் போன இனமல்ல என்ற வேகத்துடன் இத்திரைப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள். வரலாற்றைக் கற்றுக்கொள்வதன் இன்றியமையாமை பற்றித் தலைவர் சொல்லியிருக்கிறார். புராண, இதிகாசங்களில் தலைவர்களாகக் கூறப்படவர்களிடத்தில் கூட குறைகள் இருக்கும். எம் கண்முன்னே எமக்காகப் போராடிய ஒரு மாசற்ற தலைவன் எமக்காகக் கிடைத்திருக்கிறார், அவரது வழியில் தமிழினம் எவ்வாறு பேரெழுச்சி கொண்டது என்ற வரலாற்றை அடுத்தா தலைமுறைக்குக் கடத்திக்கொண்டே இருங்கள்.  அதற்கான வலிமையான கருவியாக மேதகு 2 திரைப்படத்தைப் பயன்படுத்துங்கள்“.