”இது சிங்கள-பெளத்த நாடு என்ற நிலை மாற வேண்டும்”: சமந்தா பவரிடம் மனோ கணேசன் தெரிவிப்பு

69 Views

பொருளாதார நெருக்கடிக்கு  மூல காரணம், இந்நாட்டில், இன்னமும் தீராமல் இருக்கும், தேசிய இனப்பிரச்சினை ஆகும். இதற்கு பிரதான காரணம், இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்ற நிலைப்பாடு மாறாமல் இருப்பதே  என சர்வதேச அபிவிருத்திக்கான(USAID) அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவருடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சர்வதேச அபிவிருத்திக்கான(USAID) அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா  பவருக்கும், இலங்கையின் ஏழு எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், “இன்று இந்நாட்டில் ஏற்பட்டிருப்பது பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. அதையும் மீறிய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடி ஆகும். இதற்கு மூல காரணம், இந்நாட்டில், இன்னமும் தீராமல் இருக்கும், தேசிய இனப்பிரச்சினை ஆகும். இதற்கு பிரதான காரணம், இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்ற நிலைப்பாடு மாறாமல் இருப்பதே ஆகும்.

பல மொழி, பல இனம், பல கலாச்சாரம் என்ற கொள்கை முற்று முழுதாக ஏற்கப்படும் வரை உள்நாட்டில் நிலைமாற்றம் ஏற்படாமல் தொடர்கிறது. அதேபோல் வெளிநாட்டு மட்டத்தில், இலங்கை கடலில் இந்திய-சீன முரண்பாடு தீவிரமடைகிறது.” என சமந்தா பவரிடம் மனோ எடுத்து கூறியுள்ளார்.

நேற்று சர்வதேச அபிவிருத்திக்கான(USAID) அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவருடன் நடந்த சந்திப்பில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாச, மனோ கணேசன், எம். ஏ. சுமந்திரன், ரவுப் ஹகீம், தயாசிறி ஜயசேகர, ரிசாத் பதுர்தீன், ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் மேலும் மனோ கணேசன் கருத்து வெளியிடுகையில், இலங்கை பன்மை கலாச்சார நாடக அதிகாரபூர்வமாக உருவாவதற்கு அமெரிக்கா துணை இருக்க வேண்டும். இதன் மூலம் இனப்பிரச்சினை தீரும் வாய்ப்பு ஏற்படும். அது இலங்கை மக்களது நலனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா, இந்தியா நலன்களுக்கும் வாய்ப்பானது.

நிர்க்கதியான மக்கள்

இலங்கையில் எல்லா காலத்திலும் மிகவும் நிர்க்கதியான பிரிவினராக தோட்ட தொழிலாளர்களே வாழ்கின்றனர். வறுமை, போசாக்கின்மை, சுகாதாரம், கல்வி, சிறுவர் தொழிலாளர், பெண்கள் மீதான அதீத சுமை ஆகியவை தொடர்பான புள்ளி விபரங்கள் தோட்ட தொழிலாளர் மத்தியிலேயே அதிகமாக இருக்கின்றன. இன்றைய நெருக்கடி நிலைமை அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளது.

நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச நிர்வாக இயந்திரம் பாரபட்சமாக நடக்கிறது. எமக்கு அதன்மீது நம்பிக்கையில்லை. அங்கே அரசியலும், இனவாதமும் இருக்கின்றன. தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்ற காரணத்தால், அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைப்பதில்லை.

ஆகவே அமெரிக்கா உட்பட இலங்கைக்கு உதவிடும் நாடுகள் இதை கவனத்தில் எடுக்க வேண்டும். இலங்கைக்கு வழங்கும் உதவிகளை சிவில் நிறுவனங்கள் மூலம் வழங்குங்கள். அதுவும் கண்காணிக்கப்பட வேண்டும். உதவி பெறும் பிரிவினர் யார் என்பதை சரியாக அடையாளம் காண வேண்டும்.

இலங்கையில் உரம் வாங்கி மக்களுக்கு வழங்க யூஎஸ்எய்ட் நமது நாட்டு அரசுக்கு வழங்கும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு நன்றி. ஆனால், இந்த 40மில்லியன் உதவி தொகையில் நமது மக்களுக்கு ஒரு டொலரும் கிடைக்காது. ஏனென்றால் தோட்ட தொழிலாளர்கள் விவசாய தொழிலாளர்கள் என்றாலும், சொந்த நிலம் இல்லாதவர்கள்.

தமிழ் அரசியல் கைதிகள்

பயங்கரவாத தடை சட்டத்தை வாபஸ் பெற சொல்வது நல்லதே. ஆனால், இந்த சட்டத்துக்கு பதில் இன்னொரு சட்டத்தை கொண்டு வந்த பின்னரே அரசாங்கம், பயங்கரவாத தடை சட்டத்தை வாபஸ் பெரும். ஆகவே உடன் தேவை, சட்டத்தை வாபஸ் பெற சொல்வதை விட, சட்டத்தின் அமுலாக்கலை இடை நிறுத்தம் செய்ய கூறுவதாகும்.

இன்று சில வாரங்களாக கைது செய்யப்படும், அரகல போராட்டக்காரர்களை விடுதலை செய்ய நாமும் கோருகிறோம். இவர்கள் சில வாரங்களாக கைது செய்யப்படுகின்றவர்கள். ஆனால், அதைவிட தமிழ் அரசியல் கைதிகள் நிலைமை படுமோசம். தமிழ் கைதிகள் 5,10,15, 20 வருடங்களாக சிறையில் இருக்கின்றவர்கள். சிலர் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அனுபவிக்கிறார்கள். இன்னும் சிலர் வழக்குகளை எதிர்நோக்கி உள்ளனர். இன்னமும் சில தொடர்ந்து தடுப்பு காவலில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். மீண்டும் வழக்குகள் தொடர கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply