நீதிபதிகளின் ஓய்வு வயது உயர்வு விவகாரம்: விரிவான ஆலோசனைக்கு வலியுறுத்தல்!

அனுபவமிக்க மற்றும் அறிவுள்ள நீதிபதிகளின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறி அரசாங்கம் அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதிகளின் தற்போதைய ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக கடந்த 2026 ஜூலை 27 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய ஹரால்ட் அந்தோனி ஆண்டகை மற்றும் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய அன்டன் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் நீதித்துறையின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வுக் கொள்கை என்பன எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது

சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன தமக்கிடையே சரியான தொடர்பைப் பேண வேண்டும் என்பதை கத்தோலிக்க திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்வதுடன், நீதித்துறை தனது பொறுப்புகளைச் சுயாதீனமாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் நீதி, மனிதக் கண்ணியம், அடிப்படை உரிமைகள் மற்றும் பொதுநலனைப் பாதுகாப்பதற்குச் சுயாதீனமான நீதித்துறை ஒரு அத்தியாவசியக் கவசமாகும். எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் முதன்மை இலக்கு நீதித்துறையின் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைய வேண்டும்.

அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வது, நீதிமன்றங்களில் நிலவும் நீதித்துறை அதிகாரிகளின் பற்றாக்குறைக்கு வினைத்திறனான தீர்வுகளைக் காண்பது மற்றும் வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பது ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இத்தகைய முக்கிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உரிய கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்றுள்ளது.