வவுனியா தொல்பொருள் தள வழிபாட்டிடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

வவுனியா மாவட்ட தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர ஆகியோரின் தலைமையில் குறித்த  கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.

வவுனியா நெடுங்கேணி நைனாமடு காட்டில் அமைந்துள்ள வெடுக்குநாரிமலை தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் கொண்ட காணியில் நடைபெறவுள்ள ‘ திருவிழா’வின் போது பக்தர்களுக்கு ஏற்படும் சட்டப்பூர்வ தடைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

நூற்றாண்டுகள் பழமையான இத்தொல்பொருள் மையத்திற்கு பல்வேறு தரப்பினரும் வருகை தந்து வழிபாடுகளை நடத்துவதால் தொல்பொருள் இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதுடன், அவ்விடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வெடுக்குநாரிமலை கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் தெற்கில் இருந்து வருகை தரும் சில தரப்பினர் வவுனியா தமிழ் மற்றும் சிங்கள மக்களின் நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக சுட்டிக்காட்டிய கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர், அதுகுறித்து அவதானமாக இருந்து தொல்பொருள் மையங்களை வழிபடுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தொல்பொருள் மையங்கள் தமிழ் அல்லது சிங்கள மக்களுக்கு என தனியாக பிரிக்கப்படவில்லை என்பதால், அவ்விடங்களை பாதுகாத்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நைனாமடு வெடுக்குநாரிமலை இந்து கோவிலின் வழிபாடுகள் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் வவுனியா, மன்னார் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரி விக்ரமசிரி பியதாச, மேலதிக மாவட்ட செயலாளர் ந.கமலதாசன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், வெடுக்குநாரிமலை கோவிலின் தலைவர் வி. பூபாலசிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.