அகதிகளை மீட்பது போல அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் பாசாங்கு செய்கிறதா? முன்னாள் அகதி எழுப்பும் கேள்வி 

73 Views

பிரியா-நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தின் அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் விடுதலை செய்தத அவுஸ்திரேலியாவில் புதிதாக பொறுப்பேற்ற தொழிற்கட்சி அரசாங்கம் எடுத்த முதல் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் மற்றும் அமைச்சர்கள் தமிழ் அகதி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட படங்கள் ஊடகங்களில் பளிச்சிட்டன. இது பொதுவெளியில் பெரிதும் வரவேற்கப்பட்ட ஒரு விடுதலையாக இருந்தது. 

அதே சமயம், தொழிற்கட்சி அரசாங்கம் படகு வழியாக வரும் அகதிகள் தொடர்பிலான அவுஸ்திரேலியாவின் குரூரமான குடிவரவுக் கொள்கையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் முன்பு ஆட்சியிலிருந்த லிபரல் அரசாங்கத்தின் மோசமான கொள்கையால் இந்த அகதி குடும்பம் பாதிக்கப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இன்றும் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்களில் 200க்கும் மேற்பட்ட அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பது என்பது ஒரு முரண்பாடான நிலையினை உணர்த்துகிறது என்ற கருத்தை முன்வைத்துள்ளார் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்த முன்னாள் அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி.

தி கார்டியன் ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கருத்துக் கட்டுரையில், ‘இந்த குறிப்பிட்ட தமிழ் அகதி குடும்பத்தின் கதை பரவலாக மக்களுக்கு தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடுதலையை பொதுமக்கள் சாதனையாக கொண்டாடினார்கள், ஆனால் எவ்வித அடிப்படை மாற்றமும் நிகழவில்லை. பிற அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்படவில்லை. அரசின் கொள்கை மாறவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முரண்பாடு வெள்ளை மீட்பர் கலாச்சாரத்தின் அடிப்படை அம்சமாகும். கருப்பினத்தவர்கள் அல்லது பிற இனத்து மக்களை காப்பாற்றும் மீட்பர்களாக வெள்ளையர்கள் தங்களை தாங்களே கருதிக்கொள்வதே வெள்ளை மீட்பர் கலாச்சாரம் எனப்படுகிறது. இந்த கலாச்சாரம், தொடரும் ஆஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது முன்னாள் அகதி பெஹ்ரூஸ் பூச்சானி விமர்சித்திருக்கிறார்.

Leave a Reply