ஐநாவின் பெண்கள் உரிமைகள் அமைப்பான, பெண்கள் அந்தஸ்துக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு (UNCSW) எனும் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் முறைப்பாட்டையடுத்து, புதன்கிழமை (14) நடைபெற்ற வாக்கெடுப்பில், ஈரானை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டது.
ஐநா பொருளாதார மற்றும் சமூக பேரவையின் (ECOSOC) கீழ், பெண்கள் அந்தஸ்துக்கான ஐநா ஆணைக்குழு செயற்படுகிறது (United Nations Commission on the Status of Women – UNCSW)). 54 நாடுகள் அங்கம் இப்பேரவையில் வகிக்கின்றன. சுழற்சி முறையில் இதற்கான அங்கத்துவ நாடுகள் தெரிவு செய்யப்படும்.
2026 ஆம் ஆண்டு வரையான காலத்துக்கான புதிய அங்கத்துவ நாடுகளில் ஈரானும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், ஈரானில் பெண்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் ஒடுக்கப்படும் விதம் குறித்து முறைப்பாடு அமெரிக்கா, மேற்படி அமைப்பிலிருந்து ஈரானை நீக்க வேண்டும் எனக் கோரியது.
இதையடுத்து, ஈரானை நீக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஐநா பொருளாதார மற்றும் சமூக பேரவையின் புதன்கிழமை (14) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ரஷ்யா, சீனா ஆகியன எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் ஈரானை நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் எதிராக வாக்களித்தன. 16 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. இதையடுத்து, மேற்படி ஆணைக்குழுவிலிருந்து ஈரானின் அங்கத்துவம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவிலிருந்து ஈரானை வெளியேற்றுவதற்கு ஏனைய நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயற்படும் என அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரீஸ் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இவ்வாக்கெடுப்பானது ஈரான் தொடர்பில் பொதுவான சர்வதேச அபிப்பிராயம் வளர்வதற்கும் பொறுப்புடைமை கோரிக்கைக்குமான மற்றொரு அறிகுறியாகும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலீவன் தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனைத் தளமாகக் கொண்ட ஈரானி மனித உரிமைகள் அமைப்பான அப்தோர்ரஹ்மான் போரோவ்மன்ட்டின் இணை ஸ்தாபகர் ரோயா போரோவ்மன்ட்டும் மேற்படி வாக்கெடுப்பு வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.