‘தமிழர்களை கொல்ல வேண்டும்’ என்று கூறிய தேரரை கைது செய்ய தொடரும் விசாரணைகள்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி  காவல் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
இனங்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் ‘ தமிழ் மக்களை கொலை செய்ய வேண்டும்’ போன்ற கருத்துக்களைத் தெரிவித்தமை தொடர்பில் மட்டக்களப்பு அம்பிட்டிய சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை நேற்று (15) பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன் தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மட்டக்களப்பு நீதவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.