மட்டக்களப்பில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றவர்கள் மீது விசாரணை

மட்டக்களப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் வரை சென்ற இருவரின் வீடுகளுக்குச் சென்ற புலானாய்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொத்துவில் தொடக்கம்  முள்ளிவாய்க்கால் வரை இனப்படுகொலைக்கு நீதி கோரி சென்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்றிய இருவர் மீதே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

மட்டகளப்பு  கிரான் பிரதேசத்தின் எத்தலை மேட்டுக்காடு பகுதியில் வசித்துவரும் செல்வநாயகம் நேசன். மற்றும் தங்க ரூபன் ஆகிய இருவரையும் அவர்களது வீடுகளுக்கு தேடிச் சென்ற சந்திவெளி காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடாத்தியுள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை  இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய சென்ற  பயணத்தில் பங்குபற்றி நேரலையில் தொகுத்து வழங்கிய  செல்வநாயகம் நேசன் மற்றும்  சமூக ஆர்வளர் தங்க ரூபன்  இருவரையும் பேரணியில் பங்குபற்றியமை தொடர்பாக இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அவர்களது வீடுகளுக்கு சென்ற புலனாய்வு அதிகாரிகள் இருவர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனால்  அவர்கள் கைது செய்யப்படுவார்களோ என்ற அச்சத்தில்  குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை  அனுஸ்டிப்பதற்கு தடை இல்லை என ஒரு புறம் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். ஆனால்  நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மக்களின் விடுகளுக்கு சென்று புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடாத்தி அச்சுறுத்தும் செயல்களை பார்க்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவை பாதுகாப்பு தரப்பினர் கணக்கில் எடுக்காது அவர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil News