வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் | பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

5 1 வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் | பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

அனைத்துலக பாராளுமன்ற நாள்

வரும் 30ம் திகதி நினைவு கூரப்படவுள்ள அனைத்துலக பாராளுமன்ற நாளை (International Day of Parliamentarism)முன்னிட்டு  பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள், ஈழத் தமிழ் இளைஞர்களின் பாராளுமன்ற பங்களிப்புக்கு  உள்ள தடைகள் குறித்து இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்புச் செவ்வி,

அரசியல் செயற்பாட்டில் இளையோர்களின் ஈடுபாடு தொடர்பான உரையாடல் சர்வதேசரீதியாக சமகாலத்தில் முதன்மை பெறுகிறது. எனினும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில், குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற தென் பூகோள நாடுகளில் இளையோரின் அரசியல் பங்குபற்றல் என்பது கலந்துரையாடல்களின் கருப்பொருளாகவே மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகிறது. இவ்வொழுங்கிலேயே இப்பிராந்தியத்தின் தேசிய இனமாகிய தமிழ்த்தேசிய இனத்திலும் அரசியல் பங்குபற்றலில் இளையோர்களின் பங்களிப்பு என்பது அரிதாகவே காணப்படுகின்றது.

பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலில் அரசியல் பங்குபற்றல் பாராளுமன்ற அரசியல் நகர்வுகளிலேயே அளவிடப்படுகின்றது. ஈழத்தமிழரசியலின் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலிலேயே இளையோருக்கு ஒதுக்கப்பட்ட பிரதிநிதித்துவம் மிக மிக சொற்பமாகவே காணப்பட்டது.

இலங்கையின் இன்று நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில், அரசாங்கத்தின் ஆளுமையற்ற நிர்வாகத்திற்கு எதிரான போராட்டக்களத்தில் முன்னிலை வகிப்பவர்களாக இளையோரே காணப்படுகிறார்கள். அத்துடன், இலங்கையில் எழுபது மற்றும் எண்பதுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி-இன் சோசலிச புரட்சியிலும் இளையோர்களின் முற்போக்கு சிந்தனைகளே ஆதிக்கம் செலுத்தியது. அவ்வாறானதொரு வரலாறே ஈழ்த்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திலும் காணப்படுகிறது.

சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கெதிரான ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் அஹிம்சை வடிவிலிருந்து உத்வேகமான ஆயுதப்போராட்டத்திற்கு பரிணாமம் பெற்றதில் அன்றைய ஈழத்தமிழ் இளையோரின் வகிபாகம் முதன்மையாக காணப்பட்டது. இளையோர் புரட்சிகர முற்போக்கு அரசியலில் பெறும் வகிபாகம் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலின் அதாவது தேர்தல் களங்களில் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.

ஈழத்தமிழர்கள் உரிமைக்காக போராடும் தேசிய இனம் என்றரீதியில் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல் களத்தையும் புரட்சிக்களமாகவே பயன்படுத்த வேண்டும். எனினும் ஈழத்தமிழர்களின் அரசியலில் எண்பதுகளில் வலுப்பெற்ற ஆயுதப்போராட்டத்தில் இளையோர் வெளிப்படுத்திய அரசியல் பங்குபற்றல் போக்கு பாராளுமன்ற அரசியலில் காண இயலாத நிலை துயரமானதாகவே உள்ளது.

பாராளுமன்ற அரசியலில் ஈழத்தமிழ் இளையோர்களின் பங்குபற்றல் இன்மைக்கு இளையோர்கள் சமகாலத்தில் அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமின்றி உள்ளார்கள் என பலரும் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை வரிசைப்படுத்த முயலுகின்றார்கள். எனினும், ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டங்களில் தொடர்ச்சியாக இளையோரின் பிரசன்னம் அதிகமாகவே இருந்து வருகின்றது. எழுக தமிழ் எனும் ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்கள் தொடக்கம் பொத்துவில்-பொலிகண்டி போராட்டம் வரை அதற்கு சான்றாக இளையோரின் பங்கு அமைந்திருந்தது. அத்துடன் இன்றுவரை ஈழத்தமிழரசியலில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் செயற்பாடு தவிர்க்க இயலாத நிலையை பெறுகின்றது. போராட்ட அரசியலில் அதிக ஈடுபாட்டை வெளிப்படுத்தும் தமிழ் இளையோர்களின் பாராளுமன்ற அரசியலுக்கு தடையாக உள்ள காரணங்களை நுணுக்கமாக அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.

முதலாவது, ஈழத்தமிழ் இளையோர்களின் பாராளுமன்ற பங்களிப்பில் உள்ள தடையினை வடக்கு-கிழக்கு பிராந்திய மட்டத்தில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகளை அவதானிக்க வேண்டியதாகவுள்ளது. வடக்கு-கிழக்கில் ஈழத்தமிழர் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க்கட்சிகள் முழுமையாக முதியோர் இல்லங்களாகவே காட்சியளிக்கிறது. கட்சி நிர்வாகத்திலும் பாராளுமன்ற அரசிலையும் முதியோர்களே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலுகின்ற போக்கை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கட்சிகளுக்குள் இளைஞரணி கட்டமைப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் குறித்த இளைஞர்களே தங்கள் கட்சியின் உயர்பீட எண்ணங்களுடன் முரண்படுபவர்களாகவே உள்ளனர். எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் உட்கட்சி ஜனநாயகத்தை பேணுவதில்லை என்பதனால் இளைஞரணிகளின் முரண்பாட்டு எண்ணங்கள் கட்சிகளுக்குள் நிராகரித்து செல்லப்படும் நிலையே காணப்படுகின்றது.

அத்துடன் இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கு வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையும் காரணமாகிறது. பெண்கள் இன்று கல்விகற்று உயர்நிலைகளுக்கு சென்றுள்ள போதிலும், சமூகம் தனது பழமைவாத சிந்தனைக்குள் பெண்களை முடக்க முயலுவது போன்றே, இளையோர் தொடர்பிலும் ‘சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராதெனும்’ தப்பெண்ணத்திலேயே காணப்படுகின்றார்கள். மேலும் சாதியம் மற்றும் மதங்களின் தாக்கமும் பிராந்திய அளவில் காணப்படுகின்றது. பொதுப்பரப்பில் சாதியம் மற்றும் மதம் தொடர்பான பாகுபாட்டு உரையாடல்கள் அற்றுப்போனாலும், கட்சிக்கட்டமைப்புக்குள் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படுகையில் சாதியம் மற்றும் மதப்பாகுபாடு பார்க்கப்படும் நிலைகளே நிலவுகின்றது. ஆதலால், சாதியம் என்ற சகதிக்குள் நின்று புரட்சிகரமாக முன்னேறி வரும் இளையோரை நீர்த்;துப்போகச்செய்யும் நிலை ஒட்டுமொத்த தழிழரது அரசியலிலும் காணாமல் போவதை அவதானிக்க முடிகிறது.

இரண்டாவது, தமிழ் இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றலுக்கான தடையை இலங்கைத்தீவு பரப்பில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்தகாலங்களில் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவங்களை வெளிப்படுத்தி சிங்கள தேசத்துக்கு சேவை புரிந்த முதுமையான தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் செயற்பாடுகளை தொடரக்கூடிய வகையில் தென்னிலங்கைக்கு விருப்பமாக செயற்படக்கூடிய அரசியல் பிரதிநிகளையே தமிழரசியலில் நிறுத்த முற்படுகின்றார்கள். மாறாக முற்போக்கான இளைஞர்களை முன்னிறுத்துகையில் தங்களின் கடந்த கால அரசியல் வங்குரோத்து செயல்களை வெளிப்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசியல் தரப்பும் வடக்கு-கிழக்கிலிருந்து தங்களுக்கு சேவை செய்யக்கூடிய பிரதிநிதித்துவங்களிலேயே அதிகம் நாட்டம் கொள்கிறது. மாறாக முற்போக்கான மற்றும் யதார்த்தமான அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் இளைஞர்களை ஏற்றுக்கொள்ளாது அத்துடன் முற்போக்காக தீவிரத்தன்மையுடன் எழுச்சியுறும் இளைஞர் திரளை அரச பயங்கரவாத கட்டமைப்புக்களூடாக முடக்கும் செயற்பாட்டையே தென்னிலங்கை அரசியல் முன்னிலைப்படுத்துகிறது.

மூன்றாவது, தமிழ் இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றலுக்கான தடையை சர்வதேச பரப்பினை வைத்து கொண்டும் அவதானிக்கலாம். சர்வதேச நிகழ்ச்சி நிரலுடன் பயணிக்கக்கூடிய வகையிலான புலமைசார் இளையோர் தமிழ் அரசியல் பரப்பில் அரிதாகவே காணப்படுகின்றார்கள். சமூக விஞ்ஞானக்கற்கையே சமூக ஈடுபாட்டை வளப்படுத்துகிறது. எனினும் வடக்கு-கிழக்கு தமிழ் சமூகத்தில் சமூக விஞ்ஞானக்கற்கையை தரக்குறைவாக மதிப்பீடு செய்யும் மனோநிலை காணப்படுகின்றது. ஆதலால் புலமைசார் இளையோர் பொறியியில் துறை மற்றும் வைத்திய துறை போன்ற இயற்கை விஞ்ஞானப்பாடங்களில் அதிக நாட்டத்தை வெளிப்படுத்துவதனால் தமிழ் இளையோர் பரப்பில் உருவாகும் புலமைத்தளத்தில் சமூக ஈடுபாடு அரிதாகி போகின்றது. அதலால் புலமைசார் இளையோர்களின் அரசியல் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமிழ்ப்பரப்பில் காணப்படுகின்றது. இது தமிழ் சமூகத்தை சர்வதேச ஒழுங்குக்கு ஏற்ப நகர்த்தக்கூடிய ஆற்றலாளர்களின் பங்குபற்றலை குறைக்கிறது.

எனவே, ஈழத்தமிழ் அரசியலை பொறுத்தவரை அரசியல் பங்குபற்றலில் இளையோர்களின் ஈடுபாடு தொடர்ச்சியாக நிலைபெறுகின்ற போதிலும், தமிழ் அரசியல் கட்சிகள் இளையோருக்கான போதிய வாய்ப்புக்களை வழங்க தவறி வருகின்றது. தமிரசியலில் கட்சிகளின் முதுமையான தலைமைகள், தமது பலவவீனமான அரசியல் போக்கை மறைப்பதற்கும், தமது சுயஇலாப அரசியல் நலன்களை பாதுகாப்பதற்கும் வினைத்திறனான முற்போக்கான தமிழ் இளைஞர்களின் அரசியல் பங்குபற்றல்களை உள்ளூராட்சி கட்டமைப்புக்குள்ளேயே முடக்கி பாராளுமன்ற பிரசன்னங்களை நிராகரித்து வருகின்றனர். பாராளுமன்றத்துக்கு தமக்கு இசைவானதும் தென்னிலங்கை விரும்பக்கூடியதுமான பிரதிநிதிகளையே தொடர்ச்சியாக பேணும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றனர். தென்னிலங்கை அரசியல் கட்டமைப்புக்கு எதிராக எழுச்சி பெற்ற கோதா கோகம போன்றதொரு இளையோர் எழுச்சி தமிழ் பரப்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராக திரட்டப்படுகையிலேயே தமிழ் இளையோருக்கு பாராளுமன்ற பங்களிப்பில் உள்ள தடைகள் தகர்த்தப்பட வாய்ப்பு உருவாகும்.

Tamil News