கிழக்கு மாகாணத்தின் தொன்மையும்; வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும் | மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தின் தொன்மை

கிழக்கு மாகாணத்தின் தொன்மையும்; வரலாறும் பாதுகாக்கப்படவேண்டும்

நீண்ட வரலாற்றினைக்கொண்ட கிழக்கு மாகாணத்தின் தொன்மையும் வரலாறுகளும் பாதுகாக்கப்படவேண்டும். கிழக்கு மாகாணத்தின் தொன்மைகள் குறித்த வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் வலுவாக எழுந்துள்ளதைக் காணமுடிகின்றது.

அண்மையில்  திருகோணமலை மாவட்ட இளைஞர்களினால் திருகோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதில் கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பாகவுள்ள வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகளைக் கொண்டு தொல்பொருள் அருங்காட்சியம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்;கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் வரலாறுகள் காட்சிப் படுத்தப்படாமல் எங்கோ ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவே இன்றைய தமிழர்கள் நம்புகின்றனர். தமிழர்களின் வரலாறுகள் எதிர்கால சமூகத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பதை இலக்கு வார இதழ் ஊடாக நாங்கள் வலியுறுத்திவருகின்றோம்.

வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களின் கலைகலாசாரம், வரலாறுகள், தொன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை இன்றுதான் தமிழர்கள் உணரும் நிலை காணப்படுகின்றது. கடந்தகாலங்களில் தமிழர்களின் வரலாறுகளைப் பாதுகாப்பதைத் தவறவிட்டதன் காரணமாகவே இன்று சிங்கள தேசத்தினால் தமிழர்களின் வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டுவருகின்றன.

இதற்குச் சிறந்த உதாரணமாக அண்மையில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவன் ஆலயத்தினை அழித்து பௌத்த விகாரை கட்டும் முயற்சினை கூறமுடியும். கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் கிழக்கில் தமிழர்களின் கூட்டு இருப்பையும், இருப்பின் பூர்வீகத்தையும் சிதைத்தல் ஒட்டுமொத்த ஈழத் தமிழரின் இன அடையாளத்தை இல்லாமற் செய்தலேயாகும். அவர்களின் முயற்சியில் அணுவும் பிசகாது அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  இம்முன்னெடுப்புகளுக்கு எதிர்ப்புகள் எழாத வண்ணம் தமிழர்களைப் பிரித்து ஆளுவதன் மூலம் ஒற்றுமை பலவீனமாக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணம் என்பது இலங்கையின் நீண்ட வரலாற்றுச்  சிறப்பினைக்கொண்ட பகுதியாகும். தற்போது முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் மனிதர்கள் ஆதியாக வாழ்ந்த பகுதி கிழக்கு மாகாணம் என்பது தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  அதிலும் அந்த ஆதி மனிதர்கள் தமிழர்களாகயிருந்தார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வரலாறுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தாலும் சிங்கள தேசம் அவற்றினை மறைத்துள்ளது என்பதே காலம் கடந்து தமிழர்கள் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் பூர்வீகக்குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும்.

மட்டக்களப்பு,  கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லை வரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.

வரலாற்றுக்காலத்தில் அம்பாறை மாவட்டம், உரோகணப் பகுதியுடன் இணைந்து காணப்பட்டது. இங்கு அமைந்திருந்த தீர்த்தவாவி (இன்று திகவாவி) அல்லது நாக்கை எனும் விகாரம், தமிழ் – சிங்கள பௌத்தர் போற்றிய பழம்பெரும் வழிபாட்டுத்தலமாகும்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின், இன்றைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உருவாகிய முக்குவர் வன்னிமைகள், மட்டக்களப்புத் தேசத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றின. இன்றைய சம்மாந்துறையே அன்றைய மட்டக்களப்புத் தேசத்தின் தலைநகராக விளங்கியது. திருக்கோவில் முருகன் கோயில், கிழக்கின் தேசத்துக் கோவில்களில் முதன்மையானதாகத்  திகழ்ந்தது.

கண்டியின் செனரத் மன்னன் காலத்தில் குடியேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் சோனகர், இன்றைய அம்பாறை மாவட்டத்திலேயே குடியேறினர்.  பதினாறாம் நூற்றாண்டில், இன்றைய தமணை, உகணை, இறக்காமப் பகுதிகளில் சீதாவாக்கை நாட்டிலிருந்து சிங்களவர் குடியேறியதை நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு விவரிக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் நாடு சுதந்திரம்பெற்ற காலம் தொடக்கம் திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழர்களின் வரலாற்று பாரம்பரியங்களை அழித்தன. அம்பாறை நகரில் உள்ள பழம்பெரும் ஆலயமொன்று தமிழர்களின் தொன்மையினை இன்றும் சுமந்து நிற்கின்றது.

1961 ஆம் ஆண்டு வரை இன்றைய மட்டு – அம்பாறை மாவட்டங்கள், ஒரே மாவட்டமாகவே இணைந்து காணப்பட்டன. சுதந்திரத்தின் பின், தென்கிழக்கிலங்கையின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க, கல்லோயாத் திட்டம், இலங்கை அரசால் முன்மொழியப்பட்டது.

1949இல் ஆரம்பித்த அத்திட்டம், 1953இல் முடிவடையும் வரை, பெருமளவான சிங்களக் குடியேற்றம், தென்மட்டக்களப்புப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டது. 1959 தேர்தல்தொகுதி மீள்நிர்ணயப் பரிந்துரைகளின் கீழ், பழைய நாடுகாட்டுப் பகுதியில், 19.03.1960 அன்று, “அம்பாறை” எனும் புதிய தேர்தல் மாவட்டம் உருவானது. எனவே, 1960இன் இறுதியில், மட்டக்களப்பின் தென்பகுதியில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை எனும் நான்கு தேர்தல் மாவட்டங்கள் அமைந்திருந்தன.

10.04.1961 அன்று இந்நான்கு தேர்தல் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது.

1978 இலங்கைச் சட்டத் திருத்தத்துக்கு அமைய, இந்த நான்கு ஓரங்கத்தவர் தேர்தல் மாவட்டங்களும் அகற்றப்பட்டு, பல்லங்கத்தவர் தெரிவாகும் “திகாமடுல்ல” தேர்தல் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. பதுளைக்குரிய “தெகியத்த கண்டி” பிரதேசமும் பிற்காலத்தில், அதனுடன் இணைக்கப்பட்டு, இன்றைய அம்பாறை மாவட்டம் முழுமை பெற்றது.

இதேபோன்று திருகோணமலை மாவட்டத்திலும் சிங்கள குடியேற்றங்கள் அக்காலப்பகுதியில் கந்தளாய் குளத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டன.. திருகோணமலை மாவட்டத்தில் மகாவலி திட்டங்கள் ஊடாகவே இந்த சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்மூலம் தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பல பகுதிகளைச்  சிங்களவர்கள் கைப்பற்றும் நிலையேற்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் குமரேசன் கடவை என்னும் பிரதேச செயலகப்பிரிவு தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகும். இன்று இப்பகுதி சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாற்றப்பட்டுள்ள கோமரன்கடவல என்று குமரேசன் கடவை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று முதலிக்குளம் என்னும் பிரதேசம் மொரவெவ என்னும் பெயர்மாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள தமிழர்கள் விரட்டப்பட்டு அது சிங்களப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் கந்தளாய்ப் பிரதேசமும் தமிழர்கள் தமது கலைகலாச்சார பண்பாடுகளுடன் வரலாற்றுரீதியாக வாழ்ந்த பகுதியாகவுள்ள போதிலும் மகாவலி திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் காரணமாக அப்பகுதி பெரும்பான்மை சிங்கள பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டம் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வரலாற்று தடயங்கள் அதிகமாகவுள்ள மாவட்டங்களில் ஒன்றாக காணப்பட்ட நிலையில், அங்கு அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டால் தமிழர்களின் நிலங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினாலேய இந்த சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்காமல் போனதற்கான காரணங்கள் சிங்கள பகுதிகளை எல்லைகளாக கொண்ட பகுதிகள் மிகவும் குறைந்தளவில் இருந்த காரணத்தினாலாகும். ஆனாலும் இங்கும் பல இடங்கள் பறிபோயிவிட்டன.

தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள ஆடகசௌந்தரி என்னும் அரசிய ஆண்ட பகுதி இன்று முற்றுமுழுதாக பௌத்தர்களின் பகுதியாக மாற்றப்பட்டுவருகின்றது. அப்பகுதியில் விகாரைகள் அமைக்கப்பட்டு அங்கிருந்த பல்வேறு தொல்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழர்களின் தொல்பொருட்கள் பௌத்தமாக மாற்றப்பட்டுவருகின்றன.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தின் வரலாறு அதன் தொன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். தற்போதுள்ள எஞ்சிய வரலாற்று பொக்கிசங்களையாவது பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லவேண்டிய பாரிய கடமை அனைவருக்கும் உள்ளது.
மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டங்களில் கிழக்கு மாகாண தமிழர்களின் தொல்பொருள்கள,; வரலாற்று ஆய்வுகள் காட்சிப் படுத்தப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்குரிய வரலாற்றுரீதியான செப்பேடுகள் இன்று கொழும்பிலும் கண்டியிலும் உள்ள தொல்பொருள் அருங்காட்சியத்தில் உள்ளதாக தெரியவருகின்றது. அவை மீளக் கொண்டுவரப்பட்டு அதன் வரலாறுகள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்படவேண்டும்.
அத்துடன் கிழக்கில் காணப்படும் தமிழர்களின் தொல் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இந்திய தமிழ்நாட்டு தொல்லியலாளர்களின் உதவியுடன் தமிழ் தொல்லியலாளர்களினால் ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்குரிய தொல்லியல் செயலணியொன்றை தமிழ் தேசிய கட்சிகள் உருவாக்கி அதன் மூலம் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். இல்லாது விட்டால் இன்னும் 10வருடங்களில் தமிழர்களின் அடையாளம் இல்லாத மாகாணமாக கிழக்கு மாகாணம் மாறிவிடும்.

Tamil News