பார்த்தீபன் கனவு பலிக்க வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – ICET

அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச்செய்யும் போராட்டமாக இந்தியாவின் தேசபிதா என்று கருதப்படும் மகாத்மா காந்தியினால் தோற்றுவிக்கப்பட்டது தான் உண்ணாநோன்புப் போராட்டம் எனத் தெரிவித்திருக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, தர்மத்தைப் போதித்த இந்திய தேசத்திடம் நியாயம் கிடைக்கும் என்றே ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து நீதி கிடைக்காமல் தனது இன்னுயிரை நீர்த்தான் வீரமறவன் பார்த்தீபன் என்று தெரிவித்துள்ளது.

தியாகி தீபம் திலீபன் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை(International Council of Eelam Tamils) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

15.09.87 காலை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் முன்றலில் ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்தார்,

 ஐந்தம்சக் கோரிக்கை:

  1. தமிழ் மண்ணிலிருந்து சிங்கள ராணுவம் வெளியேற வேண்டும்.
  2. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
  3. தமிழ் பிரதேசத்தில் சிங்கள காவல் நிலையம் திறக்கப்படுவது நிறுத்த வேண்டும்.
  4. தமிழ் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தப்பட வேண்டும்
  5. வட-கிழக்கில் இடைகால ஆட்சி உடனே நிறுவ வேண்டும்.

மக்களின் ஆதரவு அலையென மோதியது. காந்திதேசம் என்று கருதப்படும் இந்தியாவிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த தியாக தீபம் திலீபன் 14வது நாள் அதாவது 1987 செப்டம்பர் 26ந் தேதி நல்லூர்க் கந்தனின் வேலில் மக்கள் கண்ணீர் மல்க அறையப்பட்டார் (வீரமரணமடைந்தார்). தமிழீழத் தேசமே அதிர்ந்தது. கிளர்ந்தெழுந்த மக்கள் இந்திய இராணுவமே வெளியேறு என்று இந்திய இராணுவத்தைத் தாக்கினர்.

“என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன்……. நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். இது தான் எனது இறுதி ஆசை’’ தியாகி திலீபனின் இறுதி உரையின் வரிகள் மக்களை புரட்சிக்குத் தயாராகுங்கள் என்று கூறியவண்ணம் அமைதியானது. தியாகி திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ” என்ற பாடலைக் கேட்டுக் கொண்டே கோமா நிலைக்குச் சென்றார். சனநாயக விழுமியங்களை மதித்து தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் மற்றும் சனநயக உரிமைகளை முன்வைத்து நீர் ஆகாரமின்றி உண்ணா நோன்பிருந்து தமிழ் மக்களுக்காக உயிர்நீர்த்த மாவீரன், மக்கள் மனதில் என்றென்றும் அகிம்சையின் சின்னமாக விளங்கும் விடுதலை இயக்கத்தின் அன்றைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தீயாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பேரினவாத சிங்கள பௌத்த அரசின் நீதித்துறை தடை விதித்துள்ளதென்பது அடக்குமுறையின் மிக உச்சக்கட்ட வெளிப்பாடே.

தியாக தீபம் திலீபன் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் என்று புனையப்பட்ட மகாவம்ச மனநிலையின் உச்சத்தில் நின்று தமிழர்களைக் கொன்றுகுவித்த பௌத்த பேரினவாதியான கமால் குணரத்தினவின் கீழ்தரமான கூற்றை விடுதலை வேண்டி விற்கும் எந்த இனமும் ஏற்றுக்கொள்ளாது. விடுதலை வேண்டி இன்னுயிர் நீத்த ஒரு மாவீரனின் மரணத்தைக் கொச்சைப்படுத்திய ஈனப்பிறவி கமால்குணரத்தினவை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறை வல்லுநரும் ஆகிய அரிஸ்டோட்டல் இருவிதமான அரசியல் புரட்சி பற்றி கோட்பாட்டு ரீதியாக பின்வருமாறு விளக்கியுள்ளார்.

1.ஓர் அரசியல் அமைப்பிலிருந்து இன்னுமொன்றுக்கு பூரணமாக மாற்றுவது.

2.இருக்கும் அரசியல் அமைப்பைத் திருத்துவது.

அரிஸ்டோட்டலின் இரண்டாவது விதியின்படி தமிழருக்குத் தீர்வு கிடைக்காது என்பது வரலாறு எமக்குக் கற்றுத்தந்த பாடம். வரலாற்றுப் பாடங்களின் படிப்பினையை உணர்ந்தே மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது விதியையே தேர்ந்தெடுத்தார். சிங்கள ஏகாதிபத்திய அரசியலமைப்பிலிருந்து விலகி தமிழ்மக்களுக்கான எம்மை நாமே ஆழும் சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதற்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். இதை நன்குணர்ந்த திலீபன் மக்கள் புரட்சி ஏற்படவேண்டும் என்ற பாரிய சிந்தனையுடன் தேசியத்தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்க முனைப்புடன் பாடுபட்டார். விடுதலைப்பலிகள் இயக்கத்தில் பெண்கள் இணையவேண்டும் என்ற சிந்தனையையும் தியாகி திலீபன் அவர்களே மக்கள் மத்தியில் விதைத்து வெற்றியும் கண்டார்.

ருசியப் புரட்சியாளன் லெனினின் கூற்றுப்படி “புரட்சி தானாக நிகழ்வதில்லை அதனை நிகழ்த்த வேண்டும்”. திலீபனும் தமிழீழப் போராட்டத்தை விரிவுபடுத்தி ஒரு பெரும் மக்கள் போராட்டமாக விரிவுபடுத்த விரும்பினார். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த பார்த்தீபனின் கனவு பலிக்க வேண்டுமானால் தமிழீழமக்கள் திரண்டெழுந்து சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறைகூவல் விடுக்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-