இலங்கையை சுரண்டி தேசிய நலனில் அக்கறை செலுத்தும் சர்வதேசம் – கலாநிதி ரமேஷ்

இலங்கையின் தவறான வெளிநாட்டுக் கொள்கை,  ஊழல்கள் எனப்பலவும் இன்று நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவராக்கியுள்ளன. இதனால் இலங்கை பலவீனமடைந்துள்ள நிலையில் ஏனைய நாடுகள் உதவி என்னும் போர்வையில் உட்புகுந்து இங்குள்ள வளங்களைச் சுரண்டி தமது தேசிய நலன்களை நிறைவேற்றிக்கொள்ள முற்படுகின்றன. இந்தியா, சீனா, அமெரிக்கா  உள்ளிட்ட எந்தவொரு நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதனிடையே இந்தியாவின் அதானி மற்றும் அம்பானி கம்பெனிகளின் உள்நுழைவும் சுயநலத்தை மையப்படுத்தியுள்ள நிலையில் மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று இலங்கை, பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி  இரா.ரமேஷ் தெரிவித்தார்.

 அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் பிராந்தியத்தில் உள்ள பலமான அரசுகள்  உட்புகுந்து தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முற்படுகின்றன.தென்னாசியப் பிராந்தியத்தில் சீனா இம்முயற்சியில் ஒரு கட்டமாக சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும், கடன் உதவிகளை வழங்குவதிலும்  ஈடுபட்டு வருகின்றது.

சர்வதேச அரசியலில் தேசிய நலன் என்பதுதான் முக்கியமானது. தமது தேசிய நலன்களுக்கு குந்தகம் ஏற்படாதவாறு இந்நாடுகள் மிகவும் அவதானமாகவே செயற்படுகின்றன. இலங்கையை இன்று பல நாடுகள் தமது தேசிய நலனுக்காக பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.

இலங்கையின் அமைவிடம் இதற்கு முக்கிய  ஏதுவாகியுள்ள நிலையில் ஒவ்வொரு நாடும் தமது செல்வாக்கினை நிலை நிறுத்திக் கொள்வதில் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் அதானி மற்றும் அம்பானி போன்ற கம்பெனிகள் இலங்கையில் உட்புகுந்து ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இதனைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இக்கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்து அதன்மூலம் தமது தேசிய நலன்களை பாதுகாத்துக் கொள்ள முனைகின்றன. ஒரு அரசு பலவீனமடையில் இத்தகைய செயற்பாடுகள் இயல்பானதேயாகும். ஆபிரிக்காவில் பல நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அத்துமீறிப்போயுள்ளது.

இலங்கையில் பொருளாதார, மனித நெருக்கடி பெருமளவில் ஏற்பட்டுள்ள நிலையில் முதலாளித்துவ கொள்கையை பின்பற்றுகின்ற நாடுகள் தமது அழுத்தத்தைப் பிரயோகித்து காரியத்தை சாதித்துக் கொள்ள முற்படுகின்றன.இதிலிருந்து இலங்கை விடுபடுவது இலகுவானதல்ல.

இலங்கையின் தவறான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் ஊழல்கள் இன்று நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவராக்கியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கண்டனங்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் உரியவாறான வெளிநாட்டு கொள்கை மறுசீரமைப்பு மற்றும் தந்திரோபாயங்கள் என்பவற்றை முன்வைத்து செயற்படாவிட்டால் இலங்கையின் அழிவை தடுத்து நிறுத்த முடியாது.ஒரு நாடு பலமிழக்கும்போது சர்வதேசம் குறித்த நாட்டினை எவ்வாறு ஆட்டிப் படைக்கின்றது என்பதற்கு இலங்கை ஒரு உதாரணமாகும்.

இந்த பின்புலத்திலேயே மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரியசக்தி மின்னுற்பத்தி திட்டங்களை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்வைப்புகள் இடம்பெற்று வருகின்றன. எது எவ்வாறெனினும் எல்லா நாடுகளினதும் இறுதி இலக்கு தமது தேசிய நலனே என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தலை மேற்கொள்ள வேண்டும்.எனினும் இன்றைய  நிலையில்அரசாங்கத்தின் பலவீனம் வெளிச் சக்திகளின் ஊடுருவலுக்கே வாய்ப்பாகியுள்ளது என்றார்.

Tamil News

Leave a Reply