இடைக்கால அரசும் மகிந்தரின் பதவி விலகல் அறிவிப்பும் – இரா.ம.அனுதரன்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலக வலியுறுத்தி ‘கோ கோம் கோட்டா’ என்ற முழக்கத்தோடு மக்களின் தன்னெழுச்சி போட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மக்களின் தன்னெழுச்சி போராட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஒருபக்கமிருக்க, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையை பதவி விலகவும் இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்தி வருகின்றனர்.

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கும் சுதந்திர கட்சி உள்ளிட்ட கூட்டுக் கட்சிகளும் நிலையான முடிவெதனையும் வெளிப்படுத்தாது உள்ளே – வெளியே ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் இடைக்கால அரசில் பங்கேற்பதற்கு தமது அரசியல் எதிர்காலம் கருதி தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மகிந்த பதவி விலகியே ஆகவேண்டும் என்ற கருத்து ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. நாளை திங்கட் கிழமை (09) நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்திவிட்டு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலக உள்ளதாக, குறித்த அமைச்சரவை கூட்டத்தை அடுத்து செய்தி வெளியாகியிருந்தது.

இதேபோன்று, கடந்த செவ்வாய்க் கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த விசேட உரையினை நிகழ்த்த உள்ளதாகவும் அதன்போது தனது பதிவி விலகல் அறிவிப்பை விடுப்பார் எனவும் முன்னதாக செய்திகள் வெளிவந்த போதிலும் இதுவரை பிரதமரின் பதவி விலகல் தொடர்பில் உறுதியான நிலைப்பாடு எதுவும் வெளியாகி யிருக்கவில்லை.

இந்நிலையில் தான், பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மீண்டும் கடிதம் ஒன்றை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

நாட்டில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்ரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வகட்சி இடைக்கால அரசு தொடர்பான பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்து சூடுபிடித்துள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் (08) கொழும்பில் பல முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள யோசனை என்பன தொடர்பில் இன்று இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதற்கிடையில் சுயாதீன பாராளுமன்ற குழுவும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதுதவிர சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை (09) முற்பகல் விசேட உரை நிகழ்த்தி தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இடைக்கால அரசு தொடர்பான கலந்துரையாடல்கள் வேகமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News