கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே; கஜேந்திரகுமார்

469 Views

குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே
“கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே” என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார்.

நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதி அமைச்சு மீதான வரவு செலவுதிட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“திருகோணமலையில் சிங்களவர்களுக்காக தனிச் சிங்களத்தில் வழக்கு நடாத்துவதற்காக தனியான நீதவான் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்கள் வாழும் கந்தளாய் நீதிமன்றில் நீதிமன்றப் பதிவுகள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்து. கொழும்பில் 50 வீதமான வழக்குள் தமிழர்கள் தொடர்புடயவையாக இருந்தபோதும், சிங்களத்திலேயே அனைத்து ஆவணங்களும் பேணப்படுகின்றன. திட்டமிட்ட இனவாதமே காரணமாகும்.

நீதி அமைச்சு மீதான விவாதத்தில் எனது உரையை ‘இந்நாட்டின் நீதித்துறைக்கு இருக்கின்ற மதிப்பு குறித்த ஒரு உதாரானத்துடன் ஆரம்பிக்கின்றேன். மிருசுவிலில் நடந்த கொடூரமான படுகொலையின் குற்றவாளியாக இந்த நாட்டின் அனைத்து சட்ட நடைமுறைகளின் ஊடாகவும், இந்த நாட்டின் அதி உயர் நீதிமன்றின் ஊடாகவும் குற்றவாளியாக இனங் காணப்பட்ட ஒருவரை, ஜனாதிபதி தலையிட்டு அவரைபொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்து அனுப்புகின்ற அளவுக்குத்தான் இந்த நாட்டின் நீதித்துறையின் மதிப்பு இருக்கிறது.

தெரிந்தவர்கள் நண்பர்கள் கொலையாளிகள் போன்றோர்கள் மன்னிப்பளித்து இலகுவாக விடுதலை செய்யப்படுகிறார்கள்.உண்மையில் பொதுமன்னிப்பு என்பது, ஒரு நாட்டில், ஏற்கனவே இருக்கின்ற சட்டமானது குறித்த ஒரு வழக்கில் உண்மையான நீதியை வழங்க முடியாதவாறு ஒரு நிரபராதி பாதிக்கப்பட்டிருக்குமிடத்து, அதனால் எதிர்காலத்தில் அந்த சட்டம் மாற்றத்துக்குள்ளாக வேண்டிய நிலை இருக்குமிடத்து, அந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவரை தண்டனையில் இருந்து மன்னிப்பளிப்பதற்காகவே இந்த பொதுமன்னிப்பு என்பது பாவிக்கப்படுவது உலக வழமை என்பது நீதி அமைச்சருக்கு நன்கு புரியும்.

ஆனால் அது உலக வழக்கு மட்டும் தான், இலங்கைக்கு அது மறுபக்கமாக செயற்படுகிறது. அதாவது இலங்கையில் கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் குற்றமிழைத்த உங்கள் நண்பர்களையும் அல்லது உங்கள் இனத்தவர்களையும் விடுவிக்க மட்டுமே இந்த பொதுமன்னிப்பு வழங்கப்ப்படுகிற மோசமான நிலமைகாணப்படுகிறது.அதே போல, நீங்கள் சிறைச்சாலை மறுசீரமைபுக்கென ஒரு இராஜாங்க அமைச்சரை வைத்திருக்கிறீர்கள். சிறைக்கைதிகள், குற்றவாளிகளோ அல்லது குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்களோ என்பதற்கு அப்பால், அவர்கள் முற்று முழுதாக அரசின் பாதுகாப்பில் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் . அவர்களை பராமரிப்பதற்கென ஒரு தனியான அமைச்சு இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த குறித்த சிறைச்சலை மறுசீரமைப்பு சிறைக்கைதிகள் நல்வாழ்வு அமைச்சர் சிறைச்சாலைகளுக்குள் தன்னிச்சையாக நுழைந்து சிறைக் கைதிகளை அச்சுறுத்தி இருந்தார். அதனையடுத்து அந்த இராஜாங்க அமைச்சர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு குறித்த அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது. ஆனால் தனது அமைச்சுப் பதவியைப் பாவித்து இத்தைகைய குற்றத்தை இழைத்தமையை ஒப்புக்கொண்ட பின்னரும் குறித்த இராஜாங்க அமைச்சர் இந்த அரசில் ஏனைய துறைகளுக்கான இராஜாங்க அமைச்சராக தொடர்ந்தும் இருக்கிறார். அதுமட்டுமல்லாது, இனறு நீதித்துறை குறித்து இந்த சபை விவாதித்துக் கொண்டிருக்கின்ற, இந்த சமயத்திலே குற்றம் இழைத்த குறித்த இராஜாங்க அமைச்சர் திமிருடன் இந்த சபைக்கு வந்ததோடல்லாது நீதித்துறைக்குப் பொறுப்ப்பான அமைச்சருக்கு அருகிலேயே உட்கார்ந்துமிருந்தார்.

அது இந்த நாட்டின் நீதித்துறையின் நிலைமையை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. குற்றம் பகிரங்கமாக உறுதிப்படுத்தபட்ட குற்றவளிகள் இன்று வெளியே விடப்பட்டு இருக்கிறார்கள். அனால் இந்த நாட்டில் நீங்கள் கொண்டு வந்த சட்டங்கள் மூலம் கூட குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட முடியாதவர்கள், பயங்கரவாத தடை சட்ட சந்தேக நபர்கள் இன்று நீண்டகாலமாக சிறைகளுக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பயங்கவாத தடைச் சட்டம் சர்வதேச நியமங்களுக்கேற்ப மாற்றி உருவாக்கப்பட்டால் கூட பயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ், இங்கு ஒரு கைதியையும், சந்தேகநபராகக்கூட தடுத்துவைக்கபட்டிருக்க முடியாது. அனைவருமே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நீங்கள் உருவாக்கிய சட்டத்தின் மூலமே குற்றவாளியாக இனம் காணப்படாதவர்கள் உள்ளே, ஆனால் குற்றவாளிகள் என இனங்காணப்பட்டு இந்த சபைக்குள்ளே வருவதற்கே அருகதையற்ற குற்றாவாளிகள் உள்ளே இருக்கிறார்கள்! இது தான் இந்த நாட்டின் நீதியின் நிலமை. இதை நீதித்துறை அமைச்சரும் நன்கு அறிவார். அடுத்து,இந்த நாட்டிலே கைதிகளை பராமரிப்பதற்கென 10 வேலை முகாம்களும், அதில் இரண்டு திறந்த வெளி முகாம்களும், இளைஞர்களுக்கான சீர்திருத்தப் பள்ளிகளும் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட வடக்கு கிழக்கில் இல்லை. நான் அண்மையில் ஒய்வுபெற்ற சில தமிழ் நீதிபதிகளுடன் நீதித்துறை குறித்த அவர்களின் கரிசனைகள் கவலைகள் குறித்து சில தெளிவுபடுத்தல்களை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுடன் உரையாடியிருந்தேன்.

திருகோணமலையில் ஆரம்பகாலத்திலிருந்து, ஒரு நீதிவான் நீதிமன்று மட்டுமே இருந்தது, பின்னர் அது இரண்டாக அதிகரிக்கப்பட்டது. இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட நீதிமனறு சிங்களத்தில் மட்டும் இயங்குகின்ற ஒரு நீதிமன்றம். அங்கு குறித்தளவு சிங்களவர்கள் இருப்பதால் அந்த சிங்கள நீதிமன்று அங்கு தேவையென நியாயப்பப்டுத்தப்பட்டது.அது போலவே வடக்கு கிழக்கு தமிழர் பகுதியில் அமைந்திருப்பதால் தமிழில் இயங்கி வந்த கந்தளாய் நீதிமன்று, இப்போது சிங்கள நீதிமன்றாக இயங்குகிறது. அங்கு இருக்கின்ற அனைத்து பதிவுகளும் சிங்கள மொழியிலேயே மேற்;கொள்ளப்படுகிறது. கந்தளாயில் சிஙக்ளவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்வதால் அது சிங்கள மொழியில் இயங்குவதாக காரணம் கூறப்பட்டது. காலங்காலமாக அரச குடியேற்றத் திட்டங்கள் மூலம் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காக அந்த நீதிமனறு தமிழ் மொழியில் இருந்து சிங்கள மொழிக்கையாளுகைக்கு மாற்றப்பட்டது.

ஆனால் கொழும்பில் உள்ள நீதிமன்றுகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழ்ர்கள் சம்பந்தப்பட்டவையே. ஆனால் கொழும்பு நீதிமன்ற நடைமுறைகள் பதிவுகள் உட்பட அனைத்தையுமே சிங்களத்திலேயே நடைபெறுகின்றது. கொழும்பு, கல்கிசை மட்டுமல்ல, நுவரெலியா அவிசாவளை, ஹட்டன், வலப்பனை போன்ற இடங்களில் அநேகமாக முழுவதுமே தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் கூட நீதிமன்ற நடைமுறைகள் தனிசிங்களத்யில் மட்டுமே நடைபெறுகின்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்ற நடைமுறைகள் தமிழில் நடைபெறவேண்டியதாக இருக்கையில், வடக்கு கிழக்கில் குடியேறியுள்ள சிங்களவர்களின் வசதிக்காக சிங்கள் மொழி மூல நீதிமன்றங்களை உருவாக்கி இருக்கிறீர்கள். அப்படியாயின் அதே நியாப்படுகளின் அடிப்படையில் தெற்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழர்களின் வசதிக்காக ஏன் தமிழ் மொழி மூல. நீதிமனறுகளை நீங்கள் உருவாக்கவில்லை? ஆனால் அப்படிச் செய்ய மாட்டீர்கள். ஏனெனில் இதன் பின்னால் உங்களுக்கு ஒரு நீண்டகால திட்டம் இருக்கிறது, அதன் அடிப்படையிலேயே நீங்கள் இவ்வாறாக செயற்படுகின்றீர்கள்.

வடக்கு கிழக்கில் இருக்கும் நீதிமன்றுகளில் திட்டமிட்டப்பட்ட வகையில் சிஙகளவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். வவுனியா நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பணியாளர்களாக சிங்களவ்ர்களே பெருமளவில், நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அங்கிருக்கும் நீதிபதி தமிழ் மொழி பேசுபவர், ஆனால் பெரும்பாலான நீதிமன்ற, உத்தியோகத்தர்கள் சிங்களம் பேசுபவர்களாக இருப்பதால், நீதிமன்ற குறிப்புகளையும் தீர்ப்புகளை சிங்கள் மொழியிலும் எழுதுமாறு அந்த தமிழ் பேசும் நீதிபதி கேட்கபடுகிறார். இது ஒரு திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுகின்ற செயற்பாடு.

இங்கு, நீதிக்கு பொறுப்பான அமைச்சே நீதியற்ற முறையில் செயற்படுகிறது. இவற்றையெல்லாம் எப்போதாவது திருத்தியமக்க முடியுமென்றால் அது தனிப்பட்ட ரீதியில், அலி சப்ரி போன்றவர்களால் தான் முடியுமே தவிர அரச இயந்திரத்தின் மூலம் அரச அமைச்சு மூலம் ஒருபோதும் திருத்த முடியாது, ஏனெனில் இது திட்டமிடப்பட்ட ஒரு செயன்முறை. அரச நீதி சேவை ஆணைக்குழுவானது வடக்கு கிழக்குக் கூட, அனைத்து சுற்றறிக்கைகளையுமே சிங்கள மொழியிலேயே அனுப்புகிறது. இப்படியாக நீதித் துறையனது வெளிப்படையாகவே இரட்டை நிலைப்பாடு எடுத்து செயற்படுகின்றமை மிக தெளிவானது எனக்குறிப்பிட்டாா்

ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே; கஜேந்திரகுமார்

Leave a Reply