குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

ஏழு மாதங்கள், பதினேழு லட்சம் நோயாளர், ஆறு லட்சத்து எழுபதினாயிரம் இறப்புக்கள் என்று தொடரும் கோவிட்டின் தாக்கம் இவ்வருட குளிர்காய்ச்சல் (INFLUENZA) பரம்பலில்  எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதே இன்றைய  மருத்துவ உலகின் பேசு பொருளாக உள்ளது.

வருடம் தோறும் ஏற்படும் குளிர் காய்ச்சலானது இன்புளுவன்சா A, B வகை வைரசுக்களின் தாக்கத்தால் ஏற்படுகிறது. இவ்வைரசுக்கள் பல்வேறு உப பிரிவுகளை கொண்டுள்ள போதும் கடந்த வருடங்களில் H1N1,H3N2 ஆகிய இன்புளுவன்சா A வைரசுக்களினதும் விக்டோரியா B வகை இன்புளுவன்சா வைரசுக்களினதும் தாக்கமே பரவலாக காணப்பட்டது.

ஆனால் இன்புளுவன்சா வைரசுக்கள் காலத்திற்கு காலம் மாற்றம் பெற்று வருவதும், வீரியம் பெற்று வருவதும் அதன் காரணமாக செயல்திறன் மிக்க தடுப்பு மருந்தொன்றை தயாரிக்க முடியாதிருப்பதும் பெரும் சவாலாகவே இன்றளவும் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட இவ்வகை குளிர்காய்ச்சல் தொற்று உலகெங்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.tt குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

இவர்களில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் தலா மூன்று லட்சம் நோயாளர்களையும் ஆபிரிக்கா மற்றும் ஓசியானாவில் ஒரு லட்சம் நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். கோவிட்-19 இன்  தாக்கமும் இந்த பிராந்தியங்களிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது இங்கு கவனிக்க தக்கது.

இரட்டை விளைவு ஏற்படுமா?

கோவிட்-19 இன் தாக்கம் இன்னமும் குறைவடையாத நிலையில் எதிர் வரும் செப்டம்பர் முதல் எதிர்பார்க்க படும் குளிர் காய்ச்சலின் தாக்கம் இப்பிராந்தியங்களில் இரட்டை விளைவை ஏற்படுத்துமா என்பதே இன்றுள்ள கேள்வி. இதற்கான மருத்துவ விஞ்ஞானிகளின் பதில் அவ்வாறு அமையலாம் என்பதாகவே உள்ளது.

குளிர் காய்ச்சலானது, கோவிட்-19 ஐ போலல்லாது  குழந்தைகளையும், சிறுவர்களையும் வயது முதிர்ந்தவர்கட்கு அடுத்ததாக பெருமளவில் தாக்கும் தன்மை கொண்டது என்பதும், அண்மையில் சீனாவில் இனங்காணப்பட்ட பன்றிகளிலிருந்து மனிதருக்கு பரவ வல்ல G4 வகை H1N1 வைரசுக்கள், வீரியம் பெற்ற உலகளாவிய பரம்பலை ஏற்படுத்துமானால் அதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என்பதும் மருத்துவ விஞ்ஞான வல்லுனர்களின் எதிர்வு கூறலாக உள்ளது.

மேலும் இதுகாறும் பாவனையில் உள்ள குளிர் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்துகளின் வீரியம் அல்லது செயல் திறன் 40% வரையிலே உள்ளதும் வருடந்தோறும் இடம்பெறும் குளிர் காய்ச்சலினால் ஏற்படும் இழப்புகளை முழுமையாக தடுக்க முடியாத நிலையை தோற்றுவித்து வருகிறது.2018 05 28 influenza update 316 குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

கோவிட்-19 இற்கான நோய் கண்காணிப்பு அதிகரிப்பு, ஆய்வுகூட பாவனை, தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் வழங்கல் முயற்சிகள் என்பன குளிர்காய்ச்சலுக்கான கண்காணிப்பு, ஆய்வுகூட உறுதிப்படுத்தல், தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தை பாதிக்கலாம் என்பதும் இன்னுமொரு அசச்சுறுத்தும் விடயமாக நோக்கப்படுகிறது.

இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் மருத்துவ உலகின் சிறு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பது, இரு நோய்களும் சுவாச துணிக்கைகளால் பரவும் தன்மையது என்பதும், அவற்றுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு முறைமைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைவதும், கோவிட்-19 பராமரிப்புக்காக அநேக நாடுகள் பெருமளவு தயாரிப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதும் எதிர்வரும் குளிர் காய்ச்சலின் தாக்கத்தை குறைக்க உதவும் என்பதாகும்.

எது எவ்வாறாயினும், இரு நோய்களினதும் தாக்கத்தை குறைப்பதற்கான பொருளாதார, ஆளணி வள தேவையானது அதிகரித்ததாகவே இருக்கும் என்பதும், இது குறிப்பாக வறிய நாடுகள் மீது இரட்டை தாக்கத்தின் விளைவுகளை பாரதூரமாக்கும் என்பதும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

இன்றைய நிலையில் கோவிட-19 இந்த தாக்கம் உரிய தடுப்பு மருந்துகள் டிசம்பர் இல் கிடைக்கப்பெற்றால் குறைந்த பட்சம் எதிர்வரும் பெப்ரவரி இறுதிவரை தொடரும் எனவும், அதன் பின்னர் இதன் தாக்கம் குறையலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. அதேவேளை குளிர் காய்ச்சலின் தாக்கமும் வழமையாக டிசம்பர் முதல் பெப்ரவரி மாதம் வரையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அக்காலப்பகுதி உலகெங்கும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பிராந்தியங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

 இச்சவாலிலிருந்து நாம் மீள்வது எப்படி?

முன்னர் குறிப்பிட்டது போல குளிர் காய்ச்சலின் தாக்கம் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது ஏற்கெனவே இனங்காண பட்டுள்ள நிலையில் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை இனங்காணுவதும் நடைமுறைப் படுத்துவதுமே இன்று எம்முன் உள்ள பணியாகும்.

இதற்காக குளிர்காய்ச்சல் கண்காணிப்பிற்காக உலகெங்கும் அமைக்கப்பட்டுள்ள தேசிய இன்புளுவென்ஸா நிலையங்களின் செயற்பாட்டை விரிவாக்கல், ஆய்வுகூடங்களில் செயற்பாட்டை மீளொழுங்கு செய்தல், தடுப்பு மருந்துகளை அதிகளவு குழந்தைகள், சிறுவர்கள், முதியோருக்கு உரிய நேரத்தில் வழங்க ஆவன செய்தல், நோய் தடுப்பு முறைகளை கைக்கொள்ளல், மற்றும் குளிர் காய்ச்சல் நோய்  சிகிச்சைக்கான வசதிகளை மேலதிகமாக ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை கடந்த காலங்களில் ஆதீத தாக்கத்திற்கு உள்ளான நாடுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஏனைய நாடுகளும் முடிந்தளவு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை பொருளாதார சுமைகள் காரணமாகவும், கோவிட-19 இன் பரவலை தடுக்க கடைப்பிடிக்கப்படும் தனிமை படுத்தல் மற்றும் போக்கு வரத்து தடைகள் காரணமாகவும் திணறும் நாடுகளும் மக்களும் கூடியளவு பொறுமை காத்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான உள்ளக மற்றும் சர்வதேச தொடர்பாடல்களையும் நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டியதும் இன்றைய தேவையாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக்கொள்ள, தனிமைப்படுத்தல் மற்றும் உரிய தற்காப்பு சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும்.88297a18c4fb8d352022c617b5d5fdad குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

சிறுவர்களுக்கும், வயோதிபர்களுக்கும் குளிர் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உரிய காலத்தில் பெற்றுக்கொடுக்க முன்னுரிமை வழங்க வேண்டும். குளிர் காய்ச்சல் அறிகுறிகள் தென்படுவோர் உரிய மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறவேண்டும்.  எனவே, கோவிட்-19 நோயின் தாக்கத்தாலும் அதற்கு முகம் கொடுத்து கற்றுக்கொண்ட படிப்பினைகளிலிருந்தும்  எதிர்வரும் குளிர்காய்ச்சல் காலத்திற்க்காகவும் எம்மை தயார் படுத்தி இருவகை நோய்களின் இரட்டிப்பு தாக்கத்தில் இருந்து வரும் முன் காப்போம்.