அதிக வெப்பத்தால் பாதிப்படையும் இந்தியாவின் பொருளாதாரம்

இந்தியாவில் ஏற்பட்டுவரும் அதிக வெப்பமான காலநிலையினால் அதன் விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுகாதார துறைகள் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

அங்கு ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக வறுமையை ஒழிப்பது, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது மற்றும்  நோய்களை ஒழிப்பது என்ற இந்தியாவின் திட்டம் பின்னடைவை சந்தித்து வருகின்றது.

கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஏற்பட்டுவரும் அதிக வெப்பத்தினால் 24,000 பேர் உயிரிந்ழந்துள்ளனர். வெப்பம் மற்றும் வளி மாசடைதலே இதற்கு முக்கிய காரணம் என கடந்த புதன்கிழமை (19) வெளியிடப்பட்ட கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 1.4 பில்லியன் சனத்தொகையில் 80 விகிதமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களாகவும், இந்தியாவின் 90 விகிதமான பகுதிகள் அதிக வெப்பநிலை உடையாகவும் மாற்றம் பெற்றுவருகின்றன.

மிக அதிக வெப்பம் இந்தியாவின் வெளியக தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 15 விகித வீழ்ச்சியை ஏற்படுத்தும், இது ஏறத்தாள 480 மில்லியன் பணியாளர்களின் தொழில்களை பாதிக்கும். இந்த தாக்கம் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 2.8 விகித வீழ்ச்சியை 2050 களில் ஏற்படுத்தும்.

அதிக வெப்பத்தால் ஏற்படும் தொழில் இழப்புக்களால் இந்தியாவின் மொத்த உற்பத்தி ஏற்கனவே 5.4 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.