தவறவிடப்பட்ட தடுப்பூசிகள் – நோய் பரவும் ஆபத்து

உலகில் 67 மில்லியன் குழந்தைகள் வழமையாக போடும் தடுப்பூசிகளை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலும் தவறவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோயின் போதான முடக்கமே இதற்கான பிரதான காரணம். கடந்த பல பத்து வருடங்களாக கட்டியமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி செயல்திட்டம் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என கடந்த புதன்கிழமை (19) வெளியிடப்பட்ட ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையாக போடும் தடுப்பூசிகளை 48 மில்லியன் சிறுவர்கள் தவறவிட்டுள்ளதுடன், 67 மில்லியன் சிறுவர்களுக்கான தடுப்பூசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போலியோ மற்றும் மீசல்ஸ் போன்ற நோய்கள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1963 ஆம் ஆண்டு மீசல்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்து பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் சிறுவர்கள் உயிரிழந்திருந்தனர். ஆனால் அது தற்போது ஒரு இலட்சமாக குறைந்திருந்தது.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில் ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளே கடுமையாக பாதிப்படைந்துள்ளன. கோவிட்-19 நோயின் பின்னர் தடுப்பு மருந்து மீது மக்களின் நம்பிக்கைகள் குறைந்ததும் அதற்கான காரணம் என ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.