தற்போது இறால் தொழிலுக்குரிய பருவகாலம் ஆரம்பித்துள்ளநிலையில், இந்திய இழுவைப்படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல்வளங்கச் சூறையாடிச் செல்வதாகத் தெரிவித்த வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரரவிகரன், இலங்கைக் கடற்படையினர் அசமந்தப்போக்குடன் செயற்படுவதனாலேயே இந்நிலை தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி எல்லைதாண்டி எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இங்குள்ள கடற்றொழிலாளர்களுக்கு இறால் தொழிலுக்கென ஒரு பருவகாலம் இருக்கின்றது. குறிப்பாக மார்கழி, தை, மாசி இந்த மூன்று மாதங்களும் எமது கடற்றொழிலாளர்களுக்கு இறால் தொழிலுக்குரிய பருவகாலமாகும்.
இந்த இறால் தொழிலின் மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்ற வருமானமே எமது கடற்றொழிலாளர்களுக்கான சேமிப்பாகவும் காணப்படுகிறது. அந்தவகையில் வடபகுதியைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் வடமராட்சிகிழக்கு, வடமராட்சி என இவ்வாறு இறால் பருவகாலத் தொழில் மிகச் சிறப்பாக இடம்பெறும் இடங்களிலெல்லாம் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி உள்நுழைந்து மீனையும், இறாலையும் அள்ளிச்செல்கின்றார்கள்.
இவ்வாறு இந்திய இழுவைப்படகுகள் இந்த இடங்களில் அத்துமீறி கடற்றொழில்செயற்பாட்டில் ஈடுபட்டு மீன், இறாலை அள்ளிச்செல்வதால், மூன்றுமாதகாலம் இடம்பெறுகின்ற இறால் பருவகாலத் தொழில் வெறுமனே மூன்று நாட்களுக்குள் முடிவுற்றுப்போகின்ற அவலநிலை காணப்படுகின்றது. இவ்வாறு இந்தியமீனவர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் விடையத்தில் கடற்படையினர் மீதே குற்றஞ்சாட்டவேண்டியுள்ளது. கடலில் இடம்பெறும் குற்றச்செயல்களை கடற்படையினரே கண்காணித்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் கடற்படையினர் கடலில் இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.
அண்மையில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் மியன்மார் நாட்டு அகதிகள் படகு கரையொதுங்கியபோது அது தொடர்பில் கடற்படையினர் எவ்வித தகவல்களையும் அறிந்திருக்கவில்லை. அப்பகுதி மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியபின்னரே அவர்கள் இதுதொடர்பில் அறிந்துள்ளனர். இவ்வாறே இங்குள்ள கடற்படையினரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் எமது கடல்வளத்தை அள்ளிச்செல்கின்றபோது எதற்காக கடற்படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.