இலங்கையர்கள் தம்மை தாக்கியதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு

இலங்கையர்கள் இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கி அவர்களின் மீன்பிடி உபகரணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் இந்திய அரசு இலங்கையிடம் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தமிழகம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தோப்புத்துறை பகுதிக்கு கிழக்கே கடந்த 15ஆம் திகதியன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மூன்று விசைப்படகுகளில் வந்த சுமார் 10 இலங்கையர்கள் இந்திய மீன்பிடி படகை சுற்றி வளைத்து மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒருவருக்கு தலை மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டதுடன், மற்ற 5 பேருக்கும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்போது வோக்கி டோக்கி, ஜிபிஎஸ் கருவி, மின்கலங்கள், சுமார் 200 கிலோ மீன் உள்ளிட்ட 2 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலங்கையர்கள் எடுத்துச் சென்றனர் என்றும் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.