நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா உதவும்- வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா

இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா உதவும்

நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வௌியுறவு செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினர்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போதே வினய் குவாத்ரா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் எரிபொருள், மருந்துப் பொருட்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போதும் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப் படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்றிட்டங்கள் குறித்து இரு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

நெருக்கடியான காலப்பகுதிக்கு பின்னர் மிக விரைவில் நாடு வழமை நிலையை அடையக்கூடும் என இந்திய தூதுக்குழுவினர் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

இந்திய பொருளாதாரம் தொடர்பான செயலாளர் (Ajay Seth), தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.ஆனந்த நாகேஸ்வரன், (V Anantha Nageswaran), இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (Gopal Baglay), பிரதி உயர்ஸ்தானிகர் விநோத் கே. ஜேகப், (Vinod K Jacob), இந்து சமுத்திர பிராந்திய ஒன்றிணைப்பின் செயலாளர் கார்த்திக் பாண்டே (Kartik Pande) மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா உதவும்

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனான சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்தும் பொருளாதார மீட்சிக்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இரு தரப்பினரிடையிலும் இடம்பெற்றிருந்தன. இவ்விடயத்தில், உட்கட்டமைப்பு, தொடர்பாடல்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி, மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுவாக்கல் உள்ளிட்ட விடயங்களில், இந்தியா இலங்கை இடையிலான முதலீட்டு பங்குடைமையை மேம்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் இருதரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இலங்கைக்கு மேலும் கடனுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக  இந்திய பிரதிநிதிகள் நாட்டிற்கு  வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil News