விரைவில் கூடவுள்ள இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழு

‘மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழு விரைவில் கூடும்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

‘மீனவர் பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும், என்றே இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது’.
‘எனவே விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்’ என்று எதிர்பார்ப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்கின்றது.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து கருத்துரைத்த தமிழக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி ‘மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசாங்கங்கள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

‘1974 ஆம் ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த அரசாங்கங்கள், கச்சத்தீவு கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அன்றிலிருந்து இன்று வரை மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்’ என்றும் தமிழக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.