மஹிந்த ராஜபக்ச பாரியளவு கையூட்டல் பெற்றமை ஸ்ரீலங்கன் விமான சேவை வழக்கில் தகவல்!

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, கையூட்டலாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா பணம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக

அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின்படி, தமக்குக் கிடைத்த 60 மில்லியன் ரூபா பணம் மூன்று தவணைகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிவில் வானூர்தி போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிடம் மேலதிகமாக 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த விடயத்தில் கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் போலி நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரில் வங்கிச் கணக்கொன்றும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக ஐரோப்பிய வானூர்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திடம் இருந்து சுமார் 1.45 மில்லியன் யூரோக்கள் கையூட்டலாக பெறப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நிதி பின்னர் அவுஸ்திரேலியாவிலுள்ள கொமன்வெல்த் வங்கியின் (Commonwealth Bank) சந்தேகநபரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தின் ஒரு பகுதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவருக்கும், ஏனைய உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபரான கபில சந்திரசேனவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.