இஸ்ரேலின் இனப்படுகொலையில் இந்தியாவும் பங்காளி: அனைத்துலக மன்னிப்புச் சபை

காசாவில் “பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையில்” பயன்படுத்தப்படக்கூடிய “கணிசமான ஆபத்து” இருந்தபோதிலும், இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இந்த அமைப்பு, இந்தியா எவ்வாறு “இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையுடன் நெருக்கமான மற்றும் லாபகரமான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது” என்பதையும், “இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விநியோகச் சங்கிலிகளில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாறியுள்ளது” என்பதையும் வியாழக்கிழமையன்று (30) ஆவணப்படுத்தியது.
“அக்டோபர் 7, 2023 முதல் (காசா மீதான இஸ்ரேலின் மிகப்பெரிய தாக்குதல் தொடங்கிய நாள்) இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் உதிரிபாகங்கள் அடங்கிய 2,596 சரக்கு ஏற்றுமதிகளை அனைத்துலக மன்னிப்புச் சபை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்” என்று ‘இஸ்ரேலுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் விநியோகம்’ என்ற தலைப்பிலான அந்த அறிக்கை தெரிவித்தது.
அந்த அறிக்கையின்படி, இந்திய நிறுவனங்கள் குறைந்தது 390,516 சிறிய ரக இராணுவ ஆயுதங்களுக்கான பாகங்கள், 564,970 வெடிபொருள் சார்ந்த பாகங்கள் (ட்ரோன் போர்முனைகள் மற்றும் பீரங்கி குண்டுகளின் உறைகள் போன்றவை) மற்றும் 298 இராணுவ வாகனங்களுக்கான உதிரிபாகங்களை இஸ்ரேலிய இராணுவ விநியோகஸ்தர்களுக்கு வழங்கியுள்ளன. சிவிலியன் பயன்பாட்டிற்காக (பொதுமக்கள் பயன்பாட்டிற்காக) அனுப்பப்பட்டிருக்கக்கூடிய சரக்குகளைத் தங்கள் ஆராய்ச்சியாளர்கள் “முறையாக விலக்கிவிட்டதாக” அந்த மனித உரிமை அமைப்பு கூறியது.
“காசாவில் நடைபெறும் இனப்படுகொலை பல ஆண்டுகளாக ஏறக்குறைய தினமும் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையிலும், இஸ்ரேலிய ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிப்பதை” தங்கள் அமைப் பின் அறிக்கை வெளிப்படுத்துவதாக அம்னஸ்டி இன்டர் நேஷனலின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் கல்லா மார்ட் கூறினார்.