டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி மாதம் 17-ம் திகதி பிபிசி நிறுவனம் இலண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ம் திகதி வெளியானது.
இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.