காசாவில் கடந்த வருடத்தில் மட்டும் வறுமை 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல்

பாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த வருடத்தில் மட்டும் வறுமை 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் நீடித்த மோதல்கள், பொருளாதார தேக்கநிலை இன்னமும் தொடர்கின்றன. அதேவேளை தடைசெய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் வளங்களுக்கான அணுகல், வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை வீதங்களுடன் இணைந்து, பட்டினியும் அதிகரித்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக இஸ்ரேலின் கடலோரப் பகுதியில் விதிக்கப்பட்ட முற்றுகையால், இந்த பகுதியில் வறுமை 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்று வெடிப்பதற்கு முன்பாக சுமார் மூன்றிலொரு பங்கு மக்களால் -32.7 சதவீதம் (1.6 மில்லியன் மக்கள்) – சத்தான உணவை பெற முடியவில்லை. அத்துடன் உணவுப் பற்றாக்குறை பெண்களிடையே அதிகமாக உள்ளது. 33.7 சதவீதம் குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையாலும், பாதுகாப்பற்ற நிலையாலும் வாடுகின்றன.

பாலஸ்தீனிய சர்வதேச கவுன்சில் தகவலின்படி 2007- ஆம் ஆண்டு ஹமாஸ் அரசு கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதை தொடர்ந்து, 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதி இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் உள்ளது. ஹமாஸ் ஆளுகைக்கு உள்பட்ட கடலோரப் பகுதியானது 360 சதுர கி.மீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

இது உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் 80 சதவீத மக்கள் மனிதாபிமான உதவி மற்றும் சர்வதேச அமைப்புகளின் மானியங்களை நம்பியுள்ளனர். காசா பகுதியில் 16 ஆண்டுகளாக இஸ்ரேல் விதித்துள்ள முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலின் தலைவர் கூறினார்.

அவர்கள் உணவு, வீடு, உடை உள்ளிட்ட தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழியின்றி உள்ளனர்.

மே 2021 இல் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை முழுவதும் பெரிய அளவிலான அமைதியின்மையின் பின்னணியில், 2014 இற்குப் பிறகு காசா மிகவும் தீவிரமான இராணுவ பாதிப்புகளைச் சந்தித்தது. 16 ஆண்டுகால இஸ்ரேலின் கடல், நிலம் மற்றும் வான்வழி முற்றுகையின் ஒட்டுமொத்த தாக்கத்தால் காசாவின் சமூக பொருளாதாரத் தளம் தள்ளாடுகிறது. கொவிட் 19 உடன் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.

உலக உணவுத் திட்டம் (WFP) 1991 முதல் பாலஸ்தீனத்தில் இயங்குகிறது. இது மிகவும் பாதிக்கப்படக் கூடிய அகதிகள், பொதுமக்களுக்கு உணவு உதவி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகிறது. அத்துடன் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்க முயற்சிகளை WFP வழங்குகிறது.

பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மிகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக் கொண்டிருந்தன. இவற்றில் ஒன்றான தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்கு வந்தது.

ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது. பாலஸ்தீன சுதந்திரப் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என பாலஸ்தீனம் பற்றிய நெல்சன் மண்டேலாவின் கருத்தை எவராலும் மறுக்க முடியாது.