முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனரா? பொதுமக்கள் விசனம்  

223 Views

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் இவ்வாறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இளைஞர் குழுக்களுக்கு காவல்துறை உள்ளிட்ட தரப்பினரும் உடந்தையாக செயற்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை,  மல்லாவி உள்ளிட்ட பல்வேறு   காவல்துறைப் பிரிவுகளுக்குட்ப்பட்ட பகுதிகளில் பல்வேறு இளைஞர் குழுக்கள் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அவதானிக்கப்படுவதோடு இவ்வாறான குழுக்களுக்கு காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த அனைத்து துறையினரும் உதவி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக இளைஞர் குழுக்களாக செயற்படும் இவர்கள் பல்வேறு போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதோடு விற்பனை செய்பவர்களாகவும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கில்களில் குழுக்களாக இணைந்து வீதிகளில் பயணித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வது வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடுவது என பாரிய குற்றச்செயல்களை புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மூலைமுடுக்கெங்கும் என்ன நிகழ்வு நடந்தாலும் தீவிரமாக கண்காணிக்கும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட  முப்படையினர் மற்றும் காவல்துறையினர், இவ்வாறான சட்டவிரோத செயற்படுகளுடன் கூடிய குழுக்களை கட்டுப்படுத்த தவறிவருகின்றனர். மாறாக இவ்வாறான குற்றச்செயல்கள் செய்வதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறான குழுக்கள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் அசௌகரிகங்களை பொதுமக்கள் பொறுத்துப்போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாளாந்தம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்த போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன இருப்பினும் இவ்வாறான குழுக்களும் இயங்கியே வருகின்றன.

இதேவேளை நேற்று தீபாவளி நாளில் கொரோனா தொற்று நிலைமைகளை கண்டுகொள்ளதாது மாலை வேளையில் முல்லைத்தீவு கடற்கரையில் வழமைக்கு மாறாக அதிகளவான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர். இவ்வாறான சூழலில் விலையுயர்ந்த மோட்டார் சைக்கில்களில் வருகைதந்த ஒரு இளைஞர்குழு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வீதியில் பல்வேறு குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தனர். இருப்பினும் தொடரும் இவ்வாறான சம்பவங்களுக்கு முல்லைத்தீவில் உரிய தீர்வு இல்லை என்பதேடு இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய தரப்புக்கள் இனியாவது நல்ல ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனரா? பொதுமக்கள் விசனம்  

Leave a Reply