Home Blog Page 97

மூன்று மாதங்களுக்குள் தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் உருவாக்கப்படும். அரசாங்கம் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் ஒரு பங்கை மாத்திரமே வகிக்கும்” என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் அதானி (Adani) நிறுவனம் செலவிட்ட நிதியை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் கைவிடப்பட்ட காற்றாலை திட்டங்களுக்காக அதானி கிரீன் எனர்ஜி (adani green energy) நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப செலவுகளை மீள செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான, 350 மெகாவோட் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களில் இருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அண்மையில் விலகியிருந்தது.
புதிய அரசாங்கம் மின்சார கட்டணத்தை மாற்ற முனைந்ததைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

இந்தநிலையில், கடந்த மே மாதத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு கடிதமொன்றை அனுப்பிய அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், நிலையான எரிசக்தி அதிகார சபையுடன் இணைந்து மேற்கொண்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளிட்ட ஆரம்ப செலவுகள மீள செலுத்துமாறு கோரியுள்ளனர். எவ்வாறாயினும், அந்த நிறுவனம் தங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த தொகையை இறுதி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, இது குறித்து சட்ட ஆலோசனை பெற உள்ளதாக அரச உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏதேனும் தொகை செலுத்த வேண்டுமாயின், அது அமைச்சரவை ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படும் என. அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணிக்குள் நுழைய  காவல்துறையினருக்கு வவுனியா பிரதேச செயலாளர் தடை!

வவுனியா, ஓமந்தைப் காவல்துறையினர் அவர்களின் காவல்  நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் குறித்த காணிக்குள் நுழைய  காவல்துறையினருக்கு வவுனியா பிரதேச செயலாளரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தை காவல் நிலையத்திற்கு என பிறிதொரு இடத்தில் காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ளனர்.

குறித்த காணிக்கு அருகில் இருந்த தனிநபர் ஒருவரின் காணியையும் அபகரித்துள்ள  காவல்துறையினர்  அதனை துப்பரவு செய்து கையகப்படுத்துவதற்கான முயற்சகளில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை  காவல்த்ய்றையினர் கையகப்படுத்த முடியாது எனவும், அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனையும் மீறி இன்றைய தினமும் (07.07)  காவல்துறையினர் குறித்த காணிக்குள் சென்று துப்பரவு பணிகளில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரும் வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் சென்று  காவல்துறையினர் முரண்பட்டிருந்ததுடன், அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிசார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை: கனடா பிரதமர் கருத்து!

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும்  தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழினத்துக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் : நடிகர் ரி.ராஜேந்தர் வலியுறுத்தல்

தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்று தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துபாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள் என்று அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தியில் அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இதுவரை 47க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

‘இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில், இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும் சர்வதேச உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்’.  ‘இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த இடத்தில் அவர்கள் தமிழர்களை மாய்த்தார்களாக? அல்லது தமிழர்களை உயிரோடு புதைத்தார்களா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘இந்தப் புதைகுழிக்குள்ளே இத்தனை உடல்கள் மீட்கப்படுகின்றன. தோண்டத் தோண்ட என்புக்கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதை பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது’.
எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து புதைகுழி வளர்த்திருக்கிறார்கள்.
‘ஆக பயங்கரவாதிகள் தமிழர்களா? அல்லது இந்த சிங்கள இராணுவமா?’ என்றும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் ரி.ராஜேந்தர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழினம் கொதித்து எழ வேண்டும். அங்கு தமது சொந்தங்களை, பந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்து விட்டு இன்றுவரை அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? எறிந்தார்களா? புதைந்தார்களா? சிதைத்தார்களா? என்று தெரியாமல் நாதியற்று அலைந்து கொண்டிருக்கின்ற தமிழின உறவுகளின் உள்ளங்கள் எப்படி பாடுபட்டிருக்கும். இதை எல்லாம் பார்க்கின்ற போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.

அந்த நீதிக்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் என்று தென்னிந்திய பிரபல இயக்குனரும் நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்ப்பதாக தகவல்

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்றும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு. அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது.
பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும்.

அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் ஏற்படுத்திக்கொண்ட பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன.  தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் மக்களின் காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் J-435 கிராம சேவகர் பிரிவில், மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக, குறித்த பகுதியிலுள்ள கிராம அலுவலருக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த குற்றச்சாட்டுத் தொடர்பில் இலங்கை கடற்படை பேச்சாளரிடம் வினவிய போது, இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என்று பதிலளித்தார்.

எவ்வாறாயினும் நாட்டை சூழவுள்ள கடல் மற்றும் கரையோர பகுதியில் வழமையாக முன்னெடுக்கப்படும் அளவீடுகள் மற்றும் ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகவும், கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

சிலாபம் கடலில் தத்தளித்த 04 இந்திய மீனவர்கள் மீட்பு

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கிடைத்த தகவலுக்கமைய இலங்கை கடற்படையால் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (06) நான்கு இந்திய மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சீரற்ற வானிலையால் இந்திய மீன்பிடிக் கப்பல் காணாமல் போனதாக மும்பை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,  இலங்கை கடற்படை உடனடியாக அனைத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட விரைவுத் தாக்குதல் கப்பல்களால் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் விளைவாக, சிலாபத்திற்கு அப்பால் மேற்குக் கடலில் பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய மீன்பிடிக் கப்பல் அவதானிக்கப்பட்டதுடன், மேலும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீனவர்கள் இந்தியாவின் மினிகாய் தீவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். நான்கு மீனவர்களும் திக்கோவிட்ட  துறை முகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு கடற்படை மற்றும் கடலோர காவற்படை தேவையான உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆரம்ப வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து இந்திய மீனவர்களை இரண்டாவது முறையகாக இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.

இந்தியாவுடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் – தேசிய பாதுகாப்பு பாதிப்பு: சரத் வீரசேகர

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன. தனிமனித பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு கற்பிக்க தயாராகவுள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வகுப்பறையில் அமர வைத்து கற்பிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கத்துக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிற்க வைத்து கற்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாதாளக் குழுக்களுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் முரண்பாடு அதன் விளைவாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுதாக அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் குறிப்பிட முடியாது. பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் குறிப்பாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமுள்ளவர்களை பாதுகாப்பு தொடர்பான விடயதானங்களுக்கு ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும்.

அரசாங்கம் இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுவரையில் அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவில்லை.இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு புலனாய்வு தகவல்களை வழங்குவதை தவிர்க்கின்றன.

தேசிய பாதுகாப்பபை உறுதிப்படுத்த அரசாங்கம் சகல அயல் நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.இந்தியாவுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுக் கொண்டு ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்ள கூடாது.இந்த அரசாங்கம் இந்தியாவை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது என்றார்.

செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்: நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை.

அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் – யுவதிகளதும் பெரியவர்களினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றான். இவை அனைத்தும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல்.

இந்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கே இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும்.

இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான நீதி கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.