Home Blog Page 93

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் பௌர்ணமி  தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம்  மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துளளனர்.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்..

செம்மணிப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை(10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி மொத்தமாக 23 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திர அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார

குற்றப்பத்திர அலுவலகம் வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன்  எவ்வித முரண்பாடுகளும் எமக்கு கிடையாது. சட்டமா அதிபருடன் இணக்கமாகவே செயற்படுகிறோம்.பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க  சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பதை போன்று  எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது அமைச்சரவை அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் இன்று எதிர்க்கட்சியில் உள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்று (நேற்று) பல யோசனைகளை முன்வைக்கிறார்.அன்று இந்த யோசனைகளை முன்வைத்திருந்தால் உண்மையை கண்டுப்பிடித்திருக்கலாம். இருப்பினும் முன்வைத்த இந்த யோசனைகள் தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்துவோம்.

குண்டுத்தாக்குதல்களை தொடர்பில் அப்போதைய எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாட்டினால் இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.1983 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் எவ்வாறு அச்சமடைந்திருந்தார்களோ அதேபோன்று தான் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் தமது மத அனுஸ்டானங்களில் ஈடுபடும் போது பல்வேறு  நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள்.

எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள். குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை போன்று இனவாத பிரச்சாரங்களினால் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.அக்காலப்பகுதியில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியிலான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள்.இவர்கள் அமைச்சு பதவிகளை துறந்தார்களா,இல்லை,முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இவர்கள் பேசவில்லை. ஆனால் நாங்கள் பேசினோம்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, சிறப்பு குழு விசாரணை கோரப்படுகிறது. அனைத்தையும் நிறைவேற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா,இல்லை, அரசியல் தலையீட்டுடன் எந்த விசாரணைகளை மேற்கொண்டாலும் தீர்வு கிடைக்காது . எமது அரசாங்கத்தில் எவ்வித விசாரணைகளுக்கும் அரசியல் தலையீடுகள் இல்லை. ஆகவே  சர்வதேச விசாரணைகள் அவசியமற்றது.

குற்றப்பத்திர அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டுள்ளோம். சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் தான் நாங்கள் செயற்படுகிறோம். வெகுவிரைவில் குற்றப்பத்திர காரியாலயம் ஸ்தாபிக்கப்படும்.

சட்டமா அதிபர் திணைக்களத்துடன் முரண்பாட்டினால் குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கவில்லை.சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நாங்கள் இணக்கமாகவே செயற்படுகிறோம். ஒருசில ஊடகங்கள்  சட்டமா அதிபரை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்  தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வோம்.இருப்பினும்  நீதி விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கட்டமைப்பு அவசியமற்றது. தேசிய நீதிக்கட்டமைப்பு ஊடாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

குண்டுத்தாக்குதல் விவகாரத்தை அரசியல் கட்சிகளின் பேசுபொருளாக்குவற்கு நாங்கள் இனி இடமளிக்க போவதில்லை. குற்றவாளிகளுக்கும், பிரதான சூத்திரதாரிகளுக்கும் நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து: டிரம்பின் அறிவிப்பு

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 வீத வரி விதித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக 2 ஆவது முறையாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதன் பின்னர் 44 வீதமாக அறிவித்திருந்தார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 07 09 at 22.59.28 இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து: டிரம்பின் அறிவிப்பு

 

518458294 1917302182358633 629000657157097291 n இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறித்து: டிரம்பின் அறிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது- கஜேந்திரகுமார் தெரிவிப்பு

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் உள்ளக விசாரணைகளில் நீதியை எதிர்பார்க்க முடியாது.தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள முடியும். செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கினை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்  என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும் போது, இது அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சம்பவம் என்று கூறியுள்ளார். ராஜபக்‌ஷக்கள் தோல்வியடைந்திருந்த காலத்தில் ராஜபக்‌ஷக்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தேசிய பாதுகாப்பை பலமிழக்கச் செய்து இவ்வாறான சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

சுதந்திர காலத்தில் இருந்து 78 வருடங்களாக அரசியல் அதிகாரங்களுடனேயே அரசியல் நிறுவனங்கள் இருந்துள்ளன. சுயாதீனமாக இயங்கவில்லை. அரசியல் தலையீடுகளுடையே நடந்துள்ளன. இதுவே உண்மையாக காரணங்கள் இந்த விடயங்களுக்கு. இந்த அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உள்ளக விசாரணைகளின் நீதியை எதிர்பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரிப்பது எப்படி நியாயமாக அமையும்.

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கமொன்றே குற்றவாளியாக இருக்கின்றது. இந்த அரசாங்கமும் யுத்தத்திற்கு ஆதரவளித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்க காலத்திலேயே செம்மணி புதைகுழிகள் உருவாகியுள்ளன. அங்கே முதல் அகழ்வின் போது 15 எலும்புகூடுகள் மீட்கப்பட்டன. ஆனால் அக்கால அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் குற்றவாளியின் வாக்குமூலத்தில் 500 முதல் 600 வரையிலான உடல்களை புதைப்பதற்கு தான் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவற்றில் 15 எலும்புகூடுகளே மீட்கப்பட்டுள்ளன. அரசாங்கமே அதன் குற்றவாளி தரப்பாக இருக்கின்றது.

தற்போது அதற்கு அருகில் இன்னுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே குற்றமொன்று நடந்துள்ளது. அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். சர்வதேச விசாரணைகள் இன்றி இதில் உண்மைகளை கண்டறிய முடியாது. இந்த அரசாங்கம் போருக்கு ஆதரவளித்துள்ளது.

குற்றமிழைத்த தரப்பே விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறு சுயாதீன விசாரணைகள் இடம்பெறும்.இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை கட்டமைப்பை கோருகிறோம். செம்மணி விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றார்.

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்ப்பு

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம்் சமூகத்துக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு தரப்பினர் தவறான வழிக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வாறான பின்னணியில் தான்  குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்சக்கள் ஏற்படுத்தினார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன காயங்களை முழுமையாக ஆற்ற முடியாது.இருப்பினும்  குண்டுத்தாக்குதலின் உண்மையையும், பிரதான சூத்திரதாரியையும் வெளிப்படுத்தி, அவர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன காயங்கள் சிறிதேனும் ஆறும்.

இந்த குற்றத்தின் பொறுப்புதாரிகள் பேசுவதும், அதற்கு சபையில் ஒருதரப்பினர் கரகோசம் எழுப்புவதும் கவலைக்குரியது. தமது ஆட்சியில் நடந்த தாக்குதலை மறந்து விட்டு இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பார்த்து விமர்சிப்பதும் கவலைக்குரியது. அரசியலுக்காக இவர்கள் இந்தளவுக்கு கீழ் நிலையில் சென்றிருப்பதையிட்டு  வெட்கடைய வேண்டும்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டு வர முடியாது.2015 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள்  தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்சக்கள்  ஏற்படுத்தினார்கள்.இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது.

2015ஆம் ஆண்டு மக்களாணை பலமாக இருந்த காரணத்தால்   ராஜபக்சக்கள்  நோக்கம் உடனடியாக நிறைவேறவில்லை.   ராஜபக்சக்கள்  2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலனாய்வு பிரிவு ஊடாக சிங்களம் – முஸ்லிம் இனவாதம் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பிரிவினரை உருவாக்கி அவர்களை தமது தேவைக்காக  பயன்படுத்தினார்கள்.

இந்த குழுக்கள் ஊடாகவே ராஜபக்சக்கள் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான சூழலை ஏற்படுத்தினார்கள்.முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள்.இதனால் இலங்கையில் வாழ முடியாது என்ற நிலைக்கு முஸ்லிம் சமூகத்தினர் தள்ளப்பட்டார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு பிரிவுக்கு தள்ளப்பட்டார்கள். தவறான வழிகளுக்கும் செல்ல நேரிட்டது. இதன் பின்னரே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ராஜபக்சக்களை  மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.இந்த தாக்குதல்களை தடுத்திருக்கும். புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த அடிப்படைவாதம் தொடர்பில் உலமா சபை உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் பலமுறை எடுத்துரைத்தும் ரணில்,சஜித் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய  உண்மையை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம் என்றார்.

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை :மயான நிர்வாகசபை அறிவிப்பு

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை என்று குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ள சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்த அவர் தமக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். தற்சமயம் அகழ்வுகள் பணிகள் இடம்பெற்றுவரும் செம்மணி மனித புதைக்குழியை அண்மித்த பகுதிகளில் மர்ம வாகனங்கள் நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை என்றும், அந்த மர்ம வாகனமானது தமது வீட்டு அருகாமையிலும் வந்திருந்ததாகவும், மனுதாரரான தம்மை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அச்சுறுத்தல்கள் மற்றும் எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், வழக்கில் தாம் உறுதியாக இருப்பதாகவும், மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள் என்றும் சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் இன்றும் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடத்தும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த விகாரைக்கு அருகில் மீண்டும் ஆரம்பமாகி மாலை 6.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

பூரணை தினமான நாளை வியாழக்கிழமை காலை 06.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் கவனவீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.

இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேட்டுள்ளார்.

அறுகம்பை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய அரசு!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி   பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதாகக்கூறப்படுகின்றது.

ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், காவல்துறை  மற்றும்  கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில்  காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி: பிரதமர் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர்  ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற விவாதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1000 பாடசாலைகளுக்கு பிற தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதுவரை, 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பப் பணிகளும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.