Home Blog Page 91

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையைச் சேர்ந்த பொதுமகன் ஒருவரை இந்தியக் கடலோர காவல்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் வைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.

கைதாகியவர் மட்டக்களப்பு, ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
தமிழகத்தில் அகதியாகத் தஞ்சமடையும் நோக்கத்தில் அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மன்னாரில் இருந்து பயணித்துள்ளார்.

அவருடைய பெற்றோர், தமிழகத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வருவதாக முதற் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்புமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்து வரும் நிலையில் மற்றும் ஒரு நபர் இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கிய இந்தியா!

இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்பு பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ் மீதமுள்ள நிலுவைத் தொகையை புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ இருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததில் இருந்து இலங்கைக்கு இந்தியா வழங்கும் மொத்த உதவி 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது, இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மானியங்களும் அடங்குகின்றன.

கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனயாக இடைநிறுத்தம்

1000092534 கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனயாக இடைநிறுத்தம்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாாரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் தொடர்பு இல்லாத சிலருடைய அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தலைவர் வெள்ளை தம்பி சுரேஷ்குமார் உபதலைவர் வைரவநாதன் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் புதன்கிழமை (09) அவ்விடத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து கட்டிடப் பணியை உடனடியாக இடைநிறுத்தியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் ஆயுதங்கள் தேடும் பணியில் இராணுவம்…

Unknown 2 2 புலிகளின் ஆயுதங்கள் தேடும் பணியில் இராணுவம்...

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Unknown 1 2 புலிகளின் ஆயுதங்கள் தேடும் பணியில் இராணுவம்...

குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Unknown 8 புலிகளின் ஆயுதங்கள் தேடும் பணியில் இராணுவம்...

கடந்த ஆறு மாதத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 1351 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் கடந்த 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1 274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன என்று  காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த வீதி விபத்துகளில் 1351 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஆயிரத்து 166 வீதிவிபத்துகள் பதிவாகியிருந்ததுடன், அவற்றில் ஆயிரத்து 222 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகளவான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

728 ஆளில்லா விமானங்கள், 13 ஏவுகணைகள் – உக்ரைனை சிதறடித்த ரஷ்யா!

உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள 6 நகரங்கள் மீது சுமார் 728 ஆளில்லா விமானங்கள் மற்றும் 13 ஏவுகணைகளை வீசி ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுவரையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுதான் மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகளை அனுப்ப ஒப்புதல் அளித்திருந்தார்.

இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும்: யோஹான் லாரன்ஸ் எச்சரிக்கை

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் நிர்ணயித்துள்ள 30% வரியை விடக் குறைவான வரியை இலங்கையால் நிர்ணயிக்க முடியாவிட்டால் இலங்கையின் ஆடைத் துறைக்கு நெருக்கடி ஏற்படும் என கூட்டு ஆடை சங்க மன்றத்தின் (JAAF)  தலைவர் யோஹான் லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் சுமார் 40%  அமெரிக்காவுக்கே செல்கிறது.  கடந்த ஆண்டு 1.9 பில்லியன் டொலர் வருமானம் அமெரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுள்ளது. இலங்கையின் மூன்றாவது பெரிய அந்நியச் செலாவணி அமெரிக்காவிலிருந்தே ஈட்டப்படுகிறது.

வியட்நாம் போன்ற போட்டியாளர்கள் குறைந்த வரிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளதால் இலங்கை சிக்கலில் உள்ளது. ஆனால், நாம் பேச்சுகளை தொடர முடியும். இத்துறையில் 300,000 இற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.

எனவே, இத்தொழில்துறையை பாதுகாக்க அமெரிக்காவுடன் சிறந்த உடன்பாடுகளை எட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் ஏனைய போட்டியாளர்களுக்கு சந்தை சாதகமாக மாறிவிடும் என்றும் யோஹான் லாரன்ஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரித் திருத்தங்களுக்கு அமைய இலங்கைக்கு 30 வீத வரி அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறவீடு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் பௌர்ணமி  தினமான இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம்  மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துளளனர்.

விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் நோக்கத்தோடு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், தமிழ்த்தேசிய மக்கள முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சமத்துவக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். சட்டத்தரணி காண்டீபன், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்..

செம்மணிப் புதைகுழி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று வியாழக்கிழமை(10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி மொத்தமாக 23 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திர அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார

குற்றப்பத்திர அலுவலகம் வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்துடன்  எவ்வித முரண்பாடுகளும் எமக்கு கிடையாது. சட்டமா அதிபருடன் இணக்கமாகவே செயற்படுகிறோம்.பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க  சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்பதை போன்று  எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள்.குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது அமைச்சரவை அமைச்சர்களாக இருந்தவர்கள் பலர் இன்று எதிர்க்கட்சியில் உள்ளார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் இன்று (நேற்று) பல யோசனைகளை முன்வைக்கிறார்.அன்று இந்த யோசனைகளை முன்வைத்திருந்தால் உண்மையை கண்டுப்பிடித்திருக்கலாம். இருப்பினும் முன்வைத்த இந்த யோசனைகள் தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்துவோம்.

குண்டுத்தாக்குதல்களை தொடர்பில் அப்போதைய எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாட்டினால் இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.1983 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் எவ்வாறு அச்சமடைந்திருந்தார்களோ அதேபோன்று தான் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் தமது மத அனுஸ்டானங்களில் ஈடுபடும் போது பல்வேறு  நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள்.

எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளார்கள். குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களை போன்று இனவாத பிரச்சாரங்களினால் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.அக்காலப்பகுதியில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியிலான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம்.

குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள்.இவர்கள் அமைச்சு பதவிகளை துறந்தார்களா,இல்லை,முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக இவர்கள் பேசவில்லை. ஆனால் நாங்கள் பேசினோம்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, சிறப்பு குழு விசாரணை கோரப்படுகிறது. அனைத்தையும் நிறைவேற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா,இல்லை, அரசியல் தலையீட்டுடன் எந்த விசாரணைகளை மேற்கொண்டாலும் தீர்வு கிடைக்காது . எமது அரசாங்கத்தில் எவ்வித விசாரணைகளுக்கும் அரசியல் தலையீடுகள் இல்லை. ஆகவே  சர்வதேச விசாரணைகள் அவசியமற்றது.

குற்றப்பத்திர அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டுள்ளோம். சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் தான் நாங்கள் செயற்படுகிறோம். வெகுவிரைவில் குற்றப்பத்திர காரியாலயம் ஸ்தாபிக்கப்படும்.

சட்டமா அதிபர் திணைக்களத்துடன் முரண்பாட்டினால் குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கவில்லை.சட்டமா அதிபர் திணைக்களத்துடன் நாங்கள் இணக்கமாகவே செயற்படுகிறோம். ஒருசில ஊடகங்கள்  சட்டமா அதிபரை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. பிள்ளையானுக்கு பிணை பெற்றுக்கொடுக்க சட்டமா அதிபர் முயற்சிக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்  தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வோம்.இருப்பினும்  நீதி விசாரணைகளுக்கு சர்வதேச நீதி கட்டமைப்பு அவசியமற்றது. தேசிய நீதிக்கட்டமைப்பு ஊடாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

குண்டுத்தாக்குதல் விவகாரத்தை அரசியல் கட்சிகளின் பேசுபொருளாக்குவற்கு நாங்கள் இனி இடமளிக்க போவதில்லை. குற்றவாளிகளுக்கும், பிரதான சூத்திரதாரிகளுக்கும் நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்றார்.