Home Blog Page 84

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தீர்மானம்

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை என்றும் அதற்கு இலங்கை அரசே காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் நம்பிக்கை இழந்துள்ளோம் என்றும் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு அதன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில்  கூடிய போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களின் வரவேற்பினைப் பெற்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தினை முன்வைத்து கருத்துரைத்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ், இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் வரலாற்று ரீதியில் நாம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரையில் ஆட்சியமைக்கப்படாத 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள்!

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துள்ளன.
எனினும் 50க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் புதிய முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களின் கீழ் சபைகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கோரம் இன்மை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடத் தவறியமை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், பெண் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, வண்ணாத்துவில்லு பிரதேச சபையால் இன்னும் ஒரு சபையை அமைக்க முடியவில்லை.

முழு உறுப்பினர்களில் 50 வீதமானோர் சபைக்கு வரவில்லை, இதன் விளைவாக கோரம் இல்லாமல் போயுள்ளது. அத்துடன், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே வருகையைத் தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தாமதமாகிவிட்டதாக உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு தடை விதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரான இராஜேந்திரம் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, சபை அமர்வில் நடந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்காக அவரிடம் விளக்கம் கோரியும், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்தியும் கட்சியின் பொதுச்செயலாளரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கட்சியின் முடிவை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரியும், அந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கட்சியின் இடைநிறுத்தல் முடிவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல் பணிப்புரையை வழங்குமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதேச சபைத் தவிசாளர், உப தவிசாளர் தேர்வு தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.எனினும் மனுதாரரிடம் விளக்கம் கோரி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுப்பிய கடிதத்தில், அந்த விடயம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்பதை நீதிமன்றம் தமது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், வழக்கின் பிரதிவாதிகளான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செம்மணி விவகாரம்: மட்டு, மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் இன்று (17) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான, துரைசிங்கம் மதன், இதற்கான பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.

இதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன், தேசிய மக்கள் சக்தியின் 11 உறுப்பினர்கள் உள்ளிட்ட 34 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில், செம்மணி படுகொலைக்கு கண்டனமும், சர்வதேச நீதியான விசாரணையையும் கோரிய தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்கு நீதிக்கோரி தலைநகர் கொழும்பில் இன்று (17) கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயற்சித்தனர்.

அதற்கமைய, கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்வதற்கு அவர்கள் முயற்சித்த போது, பொலிஸார் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐந்து பேர் மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் – கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாகவும் இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது.

கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என  அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது;

இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது;

பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்;

இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல்

Gv mmUwWkAEBca7 இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்

சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும்பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல்ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

மலையக மக்களின் வாழ்வியலுடன் இணைந்த கூத்துகள் –  மருதன் ராம்

மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற பெயரில் ஆரம்பித்த இந்தப் பயணம் ‘மலையகத் தமிழர்’ எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன் னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலப் பகுதியில் அந்த மக்களின் வாழ்வியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான மாற்றங்கள் மிக எளிதில் கிடைத்தவையல்ல. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. அவ்வாறான மாற்றங்கள் அந்த மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தோட்ட மலையகத் தமிழர்கள், தனித்துவமான வரலாற்றையும், ஆழ்ந்த பண்பாட்டு மரபுகளையும் கொண்டவர்கள் என்ற வரலாறுகள் உள்ளன.
தேயிலைத் தோட்டங்களுடன் பிணைந்து ள்ள மலையக மக்களின் வாழ்க்கை, கலை வடிவங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவர்களது உழைப்பும், போராட்டங்களும், வாழ்வியலும் தனித்துவமான கலை வெளிப்பாடுகளைச் செதுக்கியுள்ளன. இவை வெறும் பொழுது போக்கு அம்சங்களாக இல்லாமல், அவர்களின் சமூக, சமய, உளவியல் தேவைகளுக்கான காலத்தின் சாட்சியாகவும் திகழ்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து பெருந்தோட்ட மக்கள் அழைத்து வரப்பட்டனர்.  அவர்களது கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்ததோடு தங்களுக்கான பாடசாலைகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டிய நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டனர். எனவே, அந்த மக்களுக்காக கூத்துப் பாடசாலைகள் இயங்கின. அங்கு அந்த மக்களுக்கான கூத்துகள் பயிற்றப்பட்டன.
மலையக மக்களின் கலை வெளிப்பாடுகள், அவர்களின் சமய நம்பிக்கைகளுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளன. கிராமிய தெய்வ வழிபாடுகள், பல்வேறு சடங்குகள், கலை நிகழ்வுகள் சங்கமிக்கும் களங்களாக கூத்துகள் அமைகின்றன. இசை, நடனம், மற்றும் கதைகூறல் ஆகியவை இந்த வழிபாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த கலை வடிவங்கள், மலையக மக்களின் அடையாளத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன.
மலையகத் தமிழ் மக்களின் கலை வெளிப்பாடுகளில், கூத்துக் கலைகள் தனித்துவ மானதொரு இடத்தைப் பெறுகின்றன. மலைய கக் கூத்துகள் பெரும்பாலும் நாட்டுப்புற மரபுகளுடன் பின்னிப்பிணைந்தவை. இவை எழுதப்பட்ட வடிவங்களை விட, வாய்மொழி மரபாகவும், குருகுல வழியிலும் பேணப்பட்டு வருகின்றன. தோட்டப்புறங்களில் வாழும் மக்கள் மத்தியில், குறிப்பாக இரவு நேரங்களில், கடின உழைப்புக்குப் பின்னர் நிகழ்த்தப்படும் இக்கூத்துக்கள், சோர்வைப் போக்கி, ஒருவித மன அமைதியை வழங்கும் சடங்குப்பூர்வமான நிகழ்வுகளாகும். இவை புராண இதிகாசக் கதைகள், மற்றும் சில சமயங்களில் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகின்றன. இசை, நடனம், ஒப்பனை, வசனம் மற்றும் பாடல்கள் என்பன இந்தக் கூத்துகளின் ஒருங்கிணைந்த கூறுகளாகும்.
மலையகத்தில் நிகழ்த்தப்படும் கூத்துகளில் காமன் கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் போன்ற கூத்துகள் முக்கியமானவை யாகும். இரவு தொடங்கிவிட்டால் தொழிலாளர் வாழும் லயன் குடியிருப்புகளில் உள்ள ஏதாவது ஒரு அறையில் ஒருவர் மகாபாரதம், நல்ல தங்காள் கதையை ராகத்துடன் வாசிக்க மற்றவர்கள் சூழ்ந்திருந்து இரசிக்கும் வழக்கம் கடந்த காலங்களில் காணப்பட்டன.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் காணப் பட்ட அடக்கு முறைகளுடன் உழைப்புக்கேற்ற ஊதியமின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்வையும் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அளித்தவை இந்த கலைகளாகும். தொழிலாளர் கள் தம் முன்னோரிடமிருந்து பெற்றுக்கொண்ட விலைமதிக்க முடியாத பெரும் சொத்து இவையாகும்.
அண்மைய போக்குகள் பல வருடகால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மக்களின் கூத்துகள் இன்றும் அந்த மக்களின் வாழ்வியலுடன் நிலைத்து நிற்கின்றது. இந்த கூத்துகளுக்குள் நவீன தொழில்நுட்பங்களோ ஏனைய கலையம்சங்களோ ஊடுருவ முடியாதிருப்பதுவும், மலையக பெருந்தோட்டத்துறை சமூக கட்டமைப்புமே இதற்கு காரணமாகும். இருந்தும் அண்மைக்கால போக்குகள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றன.
தற்போது ஊர் மக்கள் ஒன்று கூடி இவ்வாறான கூத்துகளை உரிய முறையில் நடத்தி முடிப்பதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இதற்கு பெருந்தோட்ட சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
நகரமயம், உலகமயம் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களாலும் மக்களின் பாதையும் மாற்ற மடைந்து வருகிறது. இவ்வாறான நிலை, சமூக பண்பாட்டு வேர்களில் பாதிப்பை ஏற் படுத்தி வருகின்றன. இவற்றுக்கு புறம்பாக சமூக சீரழிவுகள், சினிமா, தொலைக்காட்சி மோகம், இளைஞர்களின் ஆர்வமின்மை போன்ற பல காரணிகளும் கூத்துகள் போன்ற கலையம்சங்கள் அருகி வருவதற்கு ஏதுவாக அமைகின்றன. அத்துடன் அந்த மக்களின் வாழ்க்கைச் சுமைகளும் பொருளாதார பின்னடைவுகளும் தற்போது கூத்துகளில் செல்வாக்கு செலுத்துவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக ஆரம்ப காலங்களில் கூத்து பாடசாலைகளில் கூத்துகள் பயிற்றப்பட்ட போதிலும் தற்போது கூத்துகளை பயிற்றுவிப் பதற்கென ஏதேனும் நிறுவனங்கள் இருப்பதாக தெரியவில்லை. இருந்தும் கூட பல தலை முறைகள் கடந்தும் சில மாற்றங்களுடன் இக் கூத்துகள் இன்றும் இடம்பெறுகின்றன என்பது மிக வியப்பிற்குரியதே. உண்மையில் மலையக சமூகத்தில் ஒவ்வொரு பிரஜையும் இவைபோன்ற கலையம்சங்களை உள்வாங்கி இருக்கின்றனர். எதிர்கால மலையக சமூக உருவாக்கத்திற்கும் காமன்கூத்து முதலான கூத்துகள் ஒரு பெரும் பங்கு வகிக்கும் என்பது திண்ணம். இருப்பினும் அதற்கு கூத்துகளை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதனை விரிவான ஆய்வுகளுக்கும் ஆழமான கருத்தாடல்களுக்கும் வாதபிரதிவாதங்களுக்கும் உட்படுத்துவதற்கு இடம்கொடுப்பதாக அமைய வேண்டும்.
காலத்தின் தேவைதற்போதைய நவீன மயமாக்கலுடன் கைவிடப் படும் நிலையினை எட்டியுள்ள காமன்கூத்து உள்ளிட்ட கலையம்சங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு பேணி பாதுகாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். அவ்வாறான கூத்துகளை முழுமையாக தொகுத்து அவற்றுக்கு எழுத்துரு வாக்கம் கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். பிரதேச பாகுபாடின்றி கல்வி என்ற அடிப்படைகளில் மலையகத்திற்கான கல்விக் கூடங்களில் இதனை ஒரு கற்கை நெறியாக அறிமுகப்படுத்துதல் மற்றும் மாணவர்களுக்கு கட்டாய பாடநெறியாக மாற்றுதல் போன்ற செயற்பாடுகள் இவ்வாறான கூத்துகளை பாதுகாப்பதற்கு வழிவகுக்கும். இன்றும் மலையக பாடசாலைகளிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கூத்து நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இவ் வாறான நிகழ்வுகள் வரவேற்கத்தக்கதே. அத்துடன் பாடசாலைகளில் நாட்டார் கூத்துகள் என்ற பாட விடயதானமும் உள்ளது. இருப்பினும் அவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. மறுபுறம் வெறுமனே போட்டி நிகழ்ச்சியாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் கூத்துகளை பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் கூத்துகளை மாற்றி உயிரோட்டமுள்ள உளவியல் உணர்வாகவும் மலையக மக்களின் அடித்
தளத்திற்கான ஆணிவேர் என்ற மனநிலை யினையும் தோற்றுவிக்க வேண்டும். இத்தகைய கூத்துகளில் புதைந்திருக்கும் பாரம்பரியமான கல்வி முறையினை அடையாளம் கண்டு அதுவே எமது பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படை என்ற உணர்வினை அடுத்த சந்ததி யினருக்கு கடத்த வேண்டியது இன்றியமையாத தேவையாகும்.

காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு அழைப்பு

சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான  இரத்தினசிங்கம் முரளிதரனை  இம் மாதம்  20 திகதி  அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இதற்கான  எழுத்துமூலமான அழைப்பை மருதங்கேணி பொலிஸார்  வழங்குவார்கள் என அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இவர் சமூக செயற்பாட்டாளராக , காணி உரிமை, மீனவர்கள் உரிமை, உட்பட பல்வேறு  போராட்டங்களை முன்னெடுத்துவருகுன்ற நிலையில்  தற்போது கொழும்பில் காணி உரிமை தெடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் இ்ந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடதக்கது.

தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக கடிதம்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது குற்றச்சாட்டு

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஒருவருக்கு புகலிடக்கோரிக்கை விடயத்தில் ஆதரவாக கடிதம் எழுதினார் என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக  ஊடகமொன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அதேவேளை பிரதமர் மார்க் கார்னி ஹரி ஆனந்தசங்கரிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள்  உறுப்பினர் என கனடா அதிகாரிகள் கருதிய நபர் ஒருவருக்கு கனடா பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என கோரும் கடிதத்தை ஹரி ஆனந்தசங்கரி எழுதினார் என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராவதற்கு முன்னர் கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பிற்கு அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் இலங்கையை சேர்ந்த செல்வக்குமரன் செந்தூரன் என்ற நபரின் பிரஜாவுரிமை விண்ணபத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் என  குளோபல் நியுஸ் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன்  செல்வக்குமாரன் செந்தூரனிற்கு “நீண்டகால ஈடுபாடு” இருந்ததாகக் கூறி 2005 முதல் நிரந்தர வதிவிடத்திற்கான அவரது விண்ணப்பத்தை  கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு நிராகரித்து வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் ஆனந்தசங்கரி செல்வகுமாரனை தனது கனேடிய மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் இணைக்க  மறுத்ததை “கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது” என்று ஆனந்தசங்கரி தெரிவித்தார் அரச-சுதேச உறவுகள் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் மே 2025 இல் பொதுப் பாதுகாப்பு அமைச்சரானார்.என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது முந்தைய தலையீடு கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு முன்னாள்  ஆய்வாளர் பில் குர்ஸ்கி இதை “ஒரு மிகப்பெரிய தவறு” என்று கூறி அவர் இராஜினாமாசெய்ய வேண்டும் என்று கோரினார். பயங்கரவாத தொடர்புகள் தொடர்பான வழக்குகளில் எம்.பி.க்கள் தலையிடக்கூடாது என்று வழக்கறிஞர் குழுவான செக்யூர் கனடா தெரிவித்துள்ளது.என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரைப் பாதுகாத்து ஆனந்தசங்கரி “வெளிப்படையாக நடந்து கொண்டார்” என்றும் தனது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.  ஹரி ஆனந்தசங்கரி  ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க்கில் உள்ள தனது அலுவலகம் “ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குடியேற்ற விவகாரங்களைக் கையாளுகிறது 2015 இல் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 9000 க்கும் மேற்பட்டவை” என தெரிவித்துள்ளார்

நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கொண்ட சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதன் இயல்பு இதுதான். ஒரு தொகுதி ஒரு கனேடிய குடிமகன் ஒரு கனேடிய குழந்தையுடன் கனடாவில் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க விரும்புவது அசாதாரணமானது அல்ல” . “அமைச்சர் மறுஆய்வு வழக்குகள் உட்பட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் தொகுதி மக்களுக்கு ஆதரவு கடிதங்களை ஒரு வழக்கமான விஷயமாக வழங்குகிறார்கள்.”என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்

திரு. செல்வகுமாரனின் சட்டக் குழுவில் உறுப்பினராக உள்ள டொராண்டோ குடிவரவு வழக்கறிஞர் லோர்ன் வால்ட்மேன் குடியேற்ற வழக்குகள் தொடர்பாக “ஏராளமான எம்.பி.க்கள்” தங்கள் தொகுதியினரின் சார்பாக கடிதங்கள் எழுதுகிறார்கள் என்றும். ஹரி ஆனந்தசங்கரி அவ்வாறு செய்வதில் “அசாதாரணமானது எதுவும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

“மாறாக அவர் செய்தது மிகவும் கடினமான சூழ்நிலையில் தன்னை உணர்ந்த ஒரு தொகுதியினருக்கு உதவ முயற்சிப்பதாகும்” என்று திரு. வால்ட்மேன் தெரிவித்துள்ளார்

ஒரு தமிழ் கனடியனாக எனது சமூகத்தில் பல தசாப்தங்களாக தீவிரமாக செயல்பட்டு வருவதால் கனடா மீதான எனது விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கும் மறைமுகமான மற்றும் கிசுகிசுப்பு பிரச்சாரங்களை நான் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ளேன். அவை அவதூறானவை மற்றும் தவறானவை. நான் ஒரு பெருமைமிக்க கனடியன் எனது தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறேன். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நான் கண்டிக்கிறேன்” என்று ஹரி ஆனந்தசங்கரி.  ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

“நான் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது இந்தக் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வழி பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலக தமிழர் அமைப்பு சேர்க்கப்பட்டமை குறித்த விடயங்களில் இருந்து விலகியிருப்பதே  என தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சராக பதவியேற்ற பின்னர் குடியேற்றவிவகாரங்களில் தலையீட்டை செலுத்தும் விதத்தில் எந்த கடிதத்தையும் அனுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஜூலை 2023 இல் நான் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது எனது தொகுதி ஊழியர்களுக்கு இனி அத்தகைய கடிதங்களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு கேள்விக்குறியதாக காணப்படும் கடிதம் நான் அமைச்சரவையில் சேர்வதற்கு முன்னர் அனுப்பியது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு ஓமானுடன் ஒப்பந்தம்

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளது.

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணம் தூய்தாக்கல், அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தல் என்பவற்றுடன் தொடர்புடைய நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கின்றது.

லக்ஷம்பேர்க் நகரத்தில் நடைபெற்ற எக்மன்ட் குழுமத்தின் 31ஆவது முழுநிறைவுக் கூட்டத்தின் போது, 2025 ஜூலை 09ஆம் திகதியன்று இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண, ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுத் தலைவர் கேணல் அப்துல் ரஹ்மான் அமுர் அல்-கியூமி ஆகியோர் உரிய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், உளவறிதல் நோக்கங்களுக்காக தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ளும் பொருட்டு, தற்போது இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவானது 46 வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் சுபாணி கீர்த்திரட்ண (வலம்;) மற்றும் ஓமானின் நிதியியல் தகவலுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுத் தலைவர் கேணல் அப்துல் ரஹ்மான் அமுர் அல்-கியூமி (இடம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர்.

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 – 5 வயது சிறுமியினுடையதாக இருக்கக்கூடும் – சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு

செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

யாழ் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து நீலநிறப்புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவன் அல்லது சிறுமிக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்ட என்புத்தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வறிக்கையை இம்மாதம் 15 ஆம் திகதிக்கு செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கடந்த 10 ஆம் திகதி கட்டளை பிறப்பித்திருந்தார்.

அதற்கமைய செவ்வாய்க்கிழமை (15) குறித்த என்புத்தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வறிக்கையை சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் சமர்ப்பித்தார். அதில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றுடன் அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட குறித்த என்புத்தொகுதி 4 – 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்தோடு எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட, சிறுவர்களுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத்தொகுதிகளுக்கும் புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத்தொகுதிக்கும் இடையே உடைகள் மற்றும் என்பியல் சார்ந்த ஒத்த தன்மைகள் இருப்பதாகவும் மருத்துவ அதிகாரி பிரணவன் மன்றில் தெரிவித்தார்.

அதனையடுத்து சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் குறித்த இரண்டு என்புத்தொகுதிகளிலும் என்பியல் ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவானால் அறிவுறுத்தப்பட்டது.