செம்மணி பகுதியில் ‘தடயவியல் அகழ் வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவி யல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என்று நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இதுவரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமையுடன் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அங்க அகழ்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் 133எலும்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த தனிமன்று, சிசுவொன்றின் எலும்புக்கூடு முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மையானது, உணர்வுபூர்வமாக இருந்ததோடு குழந்தைகளையே படுகொலை செய்து புதைக்கு மளவுக்கு குரூரமான மனோநிலை காணப் பட்டிருக்கின்றது என்ற விடயம் உலகையே உறையச் செய்திருக்கிறது.
அதுமட்டுமன்றி, நீல நிற பாடசாலை புத்தகப் பை, பால் சூப்பி உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் இறுதியாக மீட்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூட்டுத்தொகுதியும் இன்னும் எத்தனை அவலங்கள் புதையுண்டு இருக்கின்றன என்ற பெருங்கேள்விகளையும் வெகுவாகவே எழுப்பி யிருக்கின்றன.
எதிர்வரும் 14ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் ஸ்கான் அறிக்கை மற்றும் மண் பரிசோதனை அறிக்கை என்பவை சமர்ப்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் 1996இல் கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலை ஒரு தனிப்பட்ட குற்றமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தா லும், பின்னர் 1995-96 காலகட்டத்தில் யாழ்ப் பாணத்தில் காணாமலாக்கப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களின் மரணத்துடன் நேரடியாக இணைந்துள்ளமையானது வெளிச்சத்துக்கு வந் திருந்தது. அண்மைய காலத்தில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அந்த விடயத் தினை உறுதிப்படுத்தி வருகின்றன. ஆகவே, செம்மனி மனிதப் படுகொலை என்பது வெறுமனே தனிப்பட்ட படைவீரரின் வன்முறைச் செயல் அல்ல, மாறாக, இலங்கை அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்.குடாநாட்டில் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட மனித குலத்துக்கு எதிரான மிலேச்சத்தனமா கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட, இன அழிப்பிற் கான அடையாளமாகும்.
அத்துடன், இந்தப் புதைகுழியானது, நீதியை நிலைநாட்டுவதில் உள்நாட்டு அரச கட்டமைப்புக்கள் கொண்டிருந்த அரசியல் விருப்ப மின்மையையும், பொறுப்புக்கூறலின்மை எவ்வாறு ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகின்றது என்பதையும் அம் பலப்படுத்தி நிற்கிறது.
யாழ்.சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற 18 வயது கிருசாந்தி குமாரசுவாமி, தனது இறுதிப் பரீட்சை முடிந்து வீடு திரும்பும் வழியில், செம்மணி சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.
கிருசாந்தி வீடு திரும்பாததால், அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், சகோதரர், மற்றும் அயல்வீட்டுக்காரர் ஆகியோரும் செம்மணி சோதனைச் சாவடியில் காணாமலாக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் படுகொலை செய்யப்பட்டு, கிருசாந்தியுடன் அதேயிடத்தில் புதைக்கப்பட்ட னர். இந்த வழக்கில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருந்த லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1998இல் கொழும்பு நீதிமன்றத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் அளித்தார். அவர், தான் குற்றம் செய்த இடத்தை மட்டுமல்லாமல், 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு களில் யாழ்.குடாநாட்டில் காணாமலாக் கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் அரச படைகள் தான் இருக்கின்றன என்பதையும் 300 முதல் 400 உடல்கள் செம்மணியில் புதைக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவரது வாக்குமூலத்தின் விளைவால் 1999 ஜுனில் செம்மணியில் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. இதன்போது மொத்தமாக 15 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இது சோமரத்ன ராஜபக்ஷவின் கூற்றுக்கு மாறாக காணப் பட்டது. அதனால் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு, ஏழு இராணுவ வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அம்னஸ்டி இண்டர்நஷனல் வெளியிட்ட அறிக்கையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அச்சுறுத்தப்பட்டு அவரது மனைவிக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன் அவ்வாறு செய்யாவிட்டால், அவரது குடும்பத்தி னர் கொல்லப்படுவார்கள் என்றும் அச்சுறுத் தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவர் சிறையில் இருந்தபோது தனது வாக்குமூலத்தை மீளப்பெற மறுத்ததால், சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாட்சியத் தின் மீதான இத்தகைய நேரடி அச்சுறுத்தல்கள், 1999ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் போது அதிக உடல்கள்கண்டெடுக்கப்படாததற்கும், விசாரணைகள் திட்டமிட்டுத் தடுக்கப்பட்டதற்கும் காரணமாக இருப்பதோடு மட்டுமன்றி, படு கொலைகளில் அரச படைகளுக்கு பிரதான பங்குண்டு என்பதை யும் வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் தான் அதே சோமரத்ன ராஜபக்ஷ தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எழுதிய கடிதத்தில் ‘சர்வதேச விசாரணை நடைபெற்றால் வாக்குமூலம் அளிப்பதற்கு தயார்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் சிறையில் இருந்துகொண்டு 29 வருடங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் சாட்சியமளிப்பதற்கு தயார் என்று அறிவித்திருப் பதானது அவரது பாதுகாப்பு தொடர்பான கரிசனைகளை வெகுவாக வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமன்றி அவர் புலனாய்வு அதி காரிகளின் பெயர் விபரங்களை சுட்டிக்காட்டி யுள்ள நிலையில் அந்த சக்திகள் சோமரத்ன ராஜபக்ஷவின் குரலை சிறைக்குள்யே நசுக்கு வதற்கே முனையும் என்பதும் இயல்பான சந்தேகம். ஆகவே, சோமரத்ன ராஜபக்ஷ பாது காக்கப்பட வேண்டிய குற்றவாளி. ஏனென்றால் அவரின் வாக்குமூலம் தான் குடாநாட்டில் அரங்கேற்ப்பட்ட படுகொலைகளையும், மனித புதைகுழிகளையும் அதனுடன் தொடர்புடைய ஏனைய படை அதிகாரிகளையும் அம்பலப்படுத்தப் போகிறது.
இப்படியிருக்கையில், 1998 ஜுலை 22 அன்று, பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச்செல்வம், செம்மணி புதைகுழிகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, ‘பல உடல்கள் ஒரு இடத்தில் நெருக்கமாக புதைக்கப் படும் போது, தனிப்பட்ட உடல்களைத் தோண்டு வதில் காட்டிலும் தொழில்நுட்ப சிக்கல்கள் அதிகமாக இருக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்திருந் தார்.
இந்த எச்சரிக்கை நியாயமாக இருந்தாலும் மறுபக்கத்தில் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகளை வெகுவாக பாதிக்கவும் செய்திருந்தது. அதேநேரம், அவர் ஐ.நா.வின் பரிந்துரையின்படி, மூன்று கட்டங்களாக நிபுணத்துவ விசாரணைகள் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
நீலன் திருச்செல்வம் 27ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச தரத்திலான விசாரணை முறைகளை விரிவாக விவரித்திருந்தும், அவரது ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டன. அவர் நெருக்கமாகச் செயற்பட்ட சந்திரிகா தலைமையி லான அரசே புறக்கணிப்புக்கும் காரணமாக இருந்தது என்பது வரலாறு. தற்போதும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுகளின்போது தொழில்நுட்பக் கட்டமைப் புகள் இல்லை. அவற்றை உள்வாங்குவதற்கு அரசாங்கத்தின் கட்டமைப்புக்களுக்கு முழு மையான ஈடுபாடுகள் இல்லை. இதனால் தொழில்நுட்ப ரீதியான அணுகுமுறை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. மண்ணை ஊடுருவும் ஒரு ஸ்கான் இயந்திரம் பாரிய மனிதப்புதைகுழி அகழ்வுக்கு போதுமானதல்ல.
சர்வதேச நீதிபதிகள் ஆணையகத்தின் அறிக்கையின்படி, இலங்கை உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 60,000 முதல் 100,000 வரை இருக் கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், கடந்தகால நீதி மறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலின்மை குறித்த தீவிரமான நிலை மையை எடுத்துக்காட்டுகின்றன.
இலங்கையில் தடயவியல் கட்டமைப்பு களான மரபுரிமை பரிசோதனை வசதிகள், சிதைந்த எச்சங்களைப் பகுப்பாய்வு செய்யவதற்கான ஆய்வகங்கள் முறையாக காணப் படவில்லை. இதனால் சர்வதேச மேற்பார்வையும் ஆய்வுகளுக் கான ஒத்துழைப்பும் பங்கெடுப்பும் மிகவும் அவசியமானது என்று குறித்த ஆணையகம் வாதிடுவதில் தவறில்லை.
மேலும், ஜுன் மாதத்தில், ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்க்கர் டேர்க் செம்மணிப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவரது விஜயம், செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை கிடைத்துள்ளதை உறுதிப்படுத்துவதுடன், பல தசாப்தங்களாகத் தொடரும் பொறுப்புக் கூறலின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற் கான இலங்கை அரசாங்கத்துக்கு காணப்படுகின்ற கடைசி வாய்ப்பு என்பதையும் ஆணித்தரமாக கூறுவதாக உள்ளது.
ஆட்சிப்பீடத்தில் அமர்ந்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமிழர்களின் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் அவரது அரசாங் கத்துக்கு நீதியை நிலைநாட்டுவதில் உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும், நிரூ பிப்பதற்குமான முக்கிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது.
செம்மணி புதைகுழி விடயத்தில் நம்ப கமான, நியாயமான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் ஈடுபாட்டைக் கொண்டிருக்குமாக இருந்தால் சர்வதேச அனுபவங்களை ஆராய்வது அவசியமாகும்.
1995இல் செர்பிரெனிகா படுகொலைகள் நிகழ்ந்தபோது அங்கு, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் குழு, சர்வதேச தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் தடயவியல் நிபுணர் களுடன் இணைந்து அகழ்வாராய்ச்சிகளை மேற் கொண்டது. கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் போன்றவை தடயவியல் ஆதாரங்களாக மீட்கப்பட்டன.
அவை அப்படுகொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை நிரூபிக்கவும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் உதவியிருந்தன. அதேபோல், 1990களில் ருவாண்டாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை ஆணையகம் ஆய்வு செய்தபோது, ருவாண்டா அரசாங்கமே பல படுகொலைகளுக்கு நேரடியாகப் பொறுப்பு என்பதை உறுதி செய்ததோடு உள்நாட்டு கட்டமைப்புகள் போர்க் குற்றங்கள் குறித்த வழக்குகளை திறம்பட கையாள முடியாத நிலையில் இருந்தன என்பதையும் கண்டறிந்தது.
போண்மத் நெறிமுறை (Bournemouth Protocol) போன்ற வழிகாட்டுதல்கள், மனிதப் புதைகுழிகளைப் பாதுகாப்பதற்கும், சட்டபூர்வ மான, மனித உரிமைகளை அடியொற்றிய முறை யில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மான வழிகாட்டுதலை வழங்குகிறது. அதுமட்டுமன்றி, படுகொலை செய்யப் பட்டு இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாது காப்பது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங் களிப்பை உறுதி செய்வது, மற்றும் தடயவியல் ஆதாரங்களின் சங்கிலித்தொடர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற அம்சங்களை வலியு றுத்துகிறது.
செர்பிரெனிகா மற்றும் ருவாண்டா போன்ற உலகளாவிய உதாரணங்கள், சர்வ தேசத்தின் பங்கேற்பிற்கான கோரிக்கைகளை உள்நாட்டு அரசக் கட்டமைப்புக்களின் பல வீனத்தின் அடையாளமாக அல்ல, மாறாக நீதிக்கான அத்தியாவசிய தேவையாகவே உறுதிப் படுத்துகின்றன. அந்தவகையில், செம்மணி மனிதப் புதைகுழிகள், பல தசாப்தங்களாக நீதி மறுக்கப் பட்டதன் கவலைக்குரிய அடையாளமாக இருப்பதோடு அண்மைக்காலத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களும், எலும்புக் கூட்டுத் தொகு திகளும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள, முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அவர் களை வழிநடத்துகின்ற சிவில் அமைப்பினர், மற்றும் அரசியல் தரப்பினர் ஏகோபித்த நிலைப் பாட்டுக்கு வரவேண்டும்.
தங்களுக்குள் காணப்படுகின்ற தனிப்பட்ட போட்டிகள், முரண்பாடுகளை மையப்படுத்தி செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தினை கையாள்பவர்கள் நாங்களே என்று மார்பு தட்டி சொந்தக் கொண்டாடுவதற்கு முனையக்கூடாது.
ஏனென்றால் செம்மணி மனிதப்புதைகுழி ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல அது தமிழ் சமூகத்தின் கூட்டு நினைவுக்களம். கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கான வலுவான அடையாளம். அரசபடைகள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரம். ஆகவே, அனைத்து விடயங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலிருந்து முறையாக கையாளப்பட வேண்டும்.
சட்டத்தின் ஊடாக அனைத்தையும் முன்னெடுக்க முடியும் என்ற கோதாவில் செயற்பட முனைவதும், சட்டத்தரணிகள் தான் இந்த விடயத்தினை கையாள வேண்டும் என வரையறுப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அதிலும் குறித்தவொரு சட்டத்தரணிகள் தரப்பு புதைகுழிப் பகுதியை கையாள முனைவது முற்றிலும் தவறானது. இதுவொரு பல்பங்குதாரர்களைக் கொண்ட விடயமாகும். அந்தப் புரிதல் முதலில் ஏற்பட வேண்டும். அந்த அடிப்படையில் பேதங் களுக்கு அப்பாலான கூட்டுத்திட்டங்களும், செயன் முறைகளும் அவசியமாகும்.
அகழ்வுகள் நடைபெறும் களத்தில் முழு நாளும் முகாமிட்டிருப்பது கட்டாய பணி என்பது போன்று தான் அரச கட்டமைப்புக்களுக்கு கூட்டாக அழுத்தமளிப்பது, தொழில்நுட்ப உதவி களை பெறுவதற்கான அணுகலைச் செய்வது, இராஜதந்திர மட்டங்கள் ஊடாக சர்வதேச அணுகலை செய்வது, சோமரத்ன போன்ற சாட்சிகளை பாதுகாப்பது, ஏனைய பகுதிகளை அடையாளம் காண்பிப்பதற்கான நடவடிக்கை களை முன்னெடுப்பது உள்ளிட்ட பல பணிகள் உள்ளன. அவை முறையான திட்டமிடல்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
நீதியை நிலைநாட்டுவது என்பது ஒரு சில தனிநபர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல, கடந்தகாலத்தின் வடுக்களை சரி செய்வது, பாதிக்கப்பட்டோரின் கண்ணியத்தை மீட்டெடுப்பது, மற்றும் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்பதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நிலைமாறுகால நீதியின் கூறுகளை முழுமையாக அமுலாக்குவதாக இருக்க வேண்டும்.