Home Blog Page 54

உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய மாநாடு இலங்கையில்…

உலக சுகாதார ஸ்தாபனத்தினுடைய தென்கிழக்காசிய பிராந்திய குழுவினது 78வது உச்சிமாநாட்டை நடத்துவதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, குறித்த அமர்வில் 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு, சுகாதார ரீதியாக பிராந்திய அடிப்படையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கையர்களை இலக்கு வைத்த ஆட்கடத்தல்!

இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வலையமைப்புகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்குவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி வேலை வாய்ப்புகள் மற்றும் தவறான நிகழ்நிலை விளம்பரங்களைப் பயன்படுத்தி தொழில் தேடுபவர்களை ஈர்க்கும் செயற்பாடுகளில் புதிதாக ஐந்து மோசடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மோசடி மையங்களால் இலங்கையர்கள் பலர் அண்மையில் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.  இந்தநிலையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணையக்குற்ற முகாம்களுக்கு 11 இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் குறித்த 11 இலங்கையர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ : Volker turk அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ என்ற தலைப்பில் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk) தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் தொடக்க நாளில் இலங்கை குறித்த அறிக்கையை உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

அவரது இந்த விஜயத்தின் போது இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்த அதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்கும் சென்றிருந்தார்.
இந்தநிலையில் அவரால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த புதிய யோசனையை சமர்ப்பிக்க பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பிக்கவுள்ளார்.

காற்றாலை மின் திட்டத்தால் மன்னாரில் பதற்றம்!

காவல்துறை  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால்  பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது குறித்த வாகனம் மன்னார்  நீதி மன்ற பிரதான வீதியில்  காவல்துறை  பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் சற்று வரை இந்த போராட்டத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார்  காவல்துறையினர் குறித்த வாகனத்தை மன்னார் நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த வாகனம் கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும் அருகாமையில் அமைதியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமரை பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக உதய கம்மன்பில கருத்து

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிப்பது குறித்து ஆளுங்கட்சிக்குள் உள்ளக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று (11) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரிய அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை அமைச்சரொருவர் திருத்தியிருந்தார்.

பிரதமர் தவறான கருத்துகளை தெரிவித்திருந்தால் ஜனாதிபதியே அதனை திருத்த வேண்டும்.
எந்தவொரு நாட்டிலும் கனிஷ்ட அமைச்சரொருவர் பிரதமரின் கருத்துகளை திருத்திய வரலாறுகளை காணமுடியாது என்று உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போது ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்கவை அந்த பதவிக்கு நியமிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. எனவே,ஜே.வி.பியின் தலைவர்கள் ஹரிணி அமரசூரிய தொடர்பில் அவதூறுகளை பரப்பி, அவரை உளரீதியாக பலவீனமடையச் செய்து, தாமாகவே பதவி விலகும் நிலைக்கு அவரை கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்கு மலையகத்திலும் ஆதரவு

மன்னாரில் 2 ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரக் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார் – பஜாரில் பொதுமக்களால் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 9ஆவது நாளாக  நேற்றைய தினமும் (11) மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
மன்னாரில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பல்வேறு பகுதிகளிலும் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், எதிர்வரும் 14ஆம் திகதி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

‘எமது நிலம், எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில், இந்தப் போராட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், மன்னார் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் விடயத்தில், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டங்கள், பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மறுத்துள்ளார்.
இந்த பகுதி ஒரு பழமையான நிலம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

தாம், அந்தப் பகுதியைப் பார்வையிட்டதாக கூறிய அமைச்சர், அங்கு பறவைகளுக்கு ஆபத்து என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லையென்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடம் மன்னாரிலிருந்து பூநகரிக்கு வடக்கே உள்ள பகுதி வெறும் பழமையான நிலம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் சில பிரிவினர் மன்னாரை, காற்றாலைகளால் அழிக்கப்படும் ஒரு ‘சொர்க்கம்’ என்று சித்தரித்துள்ளனர் என்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

அரசுக்கு சொந்தமான காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து, தரவுத்தளம் ஒன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காற பாதீட்டு ஒதுக்கீடு மற்றும் 2026ஆம் ஆண்டு பாதீட்டுக்கான திட்டங்கள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனை அறிவுத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டு பாதீட்டைத் திட்டமிடும்போது நாட்டை தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அதிக கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதேவேளை உள்ளூர் பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளை கைத்தொழில்களாக மேம்படுத்த அடுத்த பாதீட்டில் அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரி, ஹர்த்தாலுக்கு அழைப்பு

இராணுவத்தினரை கண்டித்து, தமிழரசுக் கட்சி ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்க போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் 63வது படைப்பிரிவைச் சேர்ந்த சில சிப்பாய்களால், முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு, இலங்கைத் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி எழுதியுள்ள கடிதத்தில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – முத்தையன்கட்டு குளத்தில் கடந்த 9ஆம் திகதி 32 வயதான எதிர்மன்சிங்கம் கபில்ராஜ் என்ற பொதுமகன் சடலமாக மீட்கப்பட்டார். அவரும் மேலும் நான்கு பேரும் இராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சில இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடையற்ற விசாரணையை உறுதிசெய்து பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்குமாறும் ஜனாதிபதியை இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் 5 அல்ஜசீரா ஊழியர்கள் உயிரிழப்பு!

Mourners attend the funeral of Palestinian journalist Ahmed Al-Louh

காஸாவின் அல்- ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின் ஒரு ஆயுதப் பிரிவை அல்- ஷரீஃப் வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரேலின் இந்த அறிக்கையை அல்ஜசீரா நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

2022ம் ஆண்டு காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 270 பத்திரிகையாளர்களும் ஊடக ஊழியர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் காற்றாலை, கனிய மணல் அகழ்வு: 9ஆம் நாளை எட்டிய போராட்டம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக, மன்னார் பஜார் பகுதியில் கடந்த ஒன்பது நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று திங்கட்கிழமை, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (11) மன்னார் தீவுப் பகுதியில் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டபோது, தள்ளாடி சந்தியில் மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதிலிருந்து, தள்ளாடி மற்றும் மன்னார் சுற்றுவட்டப் பகுதிகளில் பொது அமைப்புகள் மற்றும் மக்கள் சுழற்சி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, காற்றாலை கோபுரங்களுக்கான பாகங்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோதும், மக்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.