Home Blog Page 51

யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில்    நடைபெற்றது.

இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது: அமைச்சர் ஆனந்த விஜேபால

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்ற ஒன்று என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கில் கடையடைப்பு போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடையடைப்பு போராட்டத்திற்கு எந்த காரணமும் இல்லை. “கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதை நடத்த எந்த காரணமும் இல்லை. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற உத்தரவுகளின்படி அடுத்த நடவடிக்கைளை நாங்கள் எடுப்போம்.

இந்நிலையில், கடையடைப்பு போராட்டம் நடத்துவது பயனற்ற செயல். மேலும், இதேபோன்ற சம்பவங்கள் மற்ற மாகாணங்களிலும் நடப்பதாகவும், ஆனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இவ்வாறு கடையடைப்பு போராட்டங்களை நடத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“இந்த சம்பவங்களை நாம் இனம் அல்லது மதத்தின் பார்வையில் பார்க்கக்கூடாது. ஒரு குற்றம் நடக்கும்போது, பொறுப்பான எவருக்கும் எதிராக, அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இதை நாங்கள் நடைமுறையில் நிரூபித்துள்ளோம்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு – முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தின் தாக்குதலில் 32 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள முத்து ஐயன்கட்டு குளத்தில் குறித்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு

இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை இலங்கை பாதுகாப்பு தரப்பு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கோரியுள்ளது.

அதனூடாகவே, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி (Beh Lih Yi) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று அரசாங்கம் அறிவிப்பு

சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) கடந்த 13ம் திகதி வெளியிட்ட அறிக்கை குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்குவதாகக் கூறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானாவை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்த விஜேபால கூறினார்.
அசாத் மௌலானா மாத்திரமல்லாது, சாட்சியம் வழங்க தயாராகவுள்ள அனைவருக்கும் தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சர்வதேச விசாரணைக்கான தேவை ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்த போது, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டினார். இதன்படி, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் உள்ளக விசாரணையின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே, முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞரின் மரண தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, குறித்த இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறுவதாகக் கூறினார். அதற்கமையவே, 3 இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இராணுவ முகாமில் இரும்பு திருடுவதற்கு வருகை தந்த இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இராணுவத்தினரே அவர்களை அழைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். எனினும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அந்த சம்பவம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

செம்மணியில் மீண்டும் அகழ்வுகளை முன்னெடுக்க நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் ஏற்கனவே அகழ்தெடுக்கப்பட்டுள்ள என்புக் கூடுகளின் அளவை ஒத்த என்புக்கூடுகள், மேலும் இருக்கலாம் என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அறிக்கையை அடிப்படையாக வைத்தே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு நேற்று (14) தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சித்துப்பாத்தி மனிதபுதைகுழி வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மண் பகுப்பாய்வு மற்றும் ஸ்கேன் ஆய்வு அறிக்கைகள் ஆகியன சட்ட வைத்திய அதிகாரியால் மன்றில் சமர்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் சட்ட வைத்திய அதிகாரி மேலும் 08 வாரங்களுக்கு குறித்த புதைகுழிகளை அகழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து, அதற்கான நிதி உள்ளிட்ட ஏனைய ஒழுங்குகளை உரியவாறு மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகம் சுத்தப்படுத்தப்படவுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதேநேரம், சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வானது, மரண விசாரணையாக கருதி முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, மீட்கப்படும் என்புக்கூடுகள் யாருடையவை என்பதை அடையாளப்படுத்துவது முக்கியமான விடயம்.

அந்தவகையில், அகழ்வுப் பணிகளுக்கு இலங்கையில் நிபுணத்துவம் காணப்படுகின்ற போதிலும், சடலங்களை அடையாளப்படுத்தும் நிபுணத்துவம் இல்லை என்பதை தாம் மன்றுரைத்ததாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சடலங்களை அடையாளம் காண்பதற்கான நிபுணத்துவம் இல்லை என்பதால் அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி அறிக்கை பெறுவது தொடர்பிலும் சமர்ப்பணம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஏற்கனவே மன்னார் மற்றும் மாத்தளை மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட என்புக்கூடுகளுக்கான அறிக்கைகளின் நிலவரங்களையும் தாம் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுப்படுகின்ற என்புக்கூடுகள் எந்த நாட்டின் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன? அதுவரையிலும் அந்த என்புக்கூடுகள் யாருடைய கட்டுக்காவலில் வைக்கப்படுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டும் என்பதையும் தாம் மன்றுரைத்ததாக சட்டத்தரணி சுமந்திரன் கூறியுள்ளார்.

இதேவேளை, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தக்கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் இன்று திகதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்!

மட்டக்களப்பு – வவுணதீவு – தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பங்குபற்றுதலுடன் நேற்று (13) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவு – தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார்.

எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சட்டப்பூர்வ கஞ்சா பயிரிட அனுமதி!

இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதல் முறையாக கஞ்சா (Cannabis) பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் இலங்கை முதலீட்டு சபை (Board of Investment – BoI) கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 37 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து ஏழு முதலீட்டாளர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை முதலீட்டு சபை அவர்களுக்கு உரிய சட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஆறு மாதங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, உரிமம் நீட்டிக்கப்படுமா என்பதைக் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும்.

ஒவ்வொரு முதலீட்டாளரும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியில் உத்தரவாதமாக வைப்பிலிட வேண்டும். பயிர்ச்செய்கைத் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு தேவை.

கஞ்சா பயிரிடப்படும் அனைத்து உற்பத்திகளும் முழுமையாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்; நாட்டிற்குள் எந்த விதத்திலும் பயன்படுத்த முடியாது. ஏற்றுமதி நோக்கங்கள் மருந்து உற்பத்தி மற்றும் சோதனைக்காக மட்டுமே. பயிரிடும் பகுதி பாதுகாப்பான வேலியால் சூழப்பட்டிருக்க வேண்டும். விதைகள், இலைகள், வேர்கள் உள்ளிட்ட எந்தப் பகுதியும் வெளிப்புற சூழலுக்குள் வெளியேறக் கூடாது.

வளாகத்தில் சிறப்பு பணிக்குழு (STF) மற்றும் பொலிஸ் பாதுகாப்பு கட்டாயம். நில ஒதுக்கீடு மற்றும் கண்காணிப்பு, இலங்கை முதலீட்டு சபையின் கீழ் மீரிகம பகுதியில் 64 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் நடைமுறையை இலங்கை முதலீட்டு சபை, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களம் இணைந்து மேற்பார்வையிடுகின்றன.

இந்த முயற்சியின் மூலம் இலங்கைக்கு கணிசமான அந்நியச் செலாவணி வருவாய் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர் விவசாயக் காணிகள் சூறையாடப்படுவதை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் “இந்திய கம்பனிகளின் காணி மற்றும் வளத்திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவோம்” என்று பதாதைகளை ஏந்தியவாறும்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல்!

unnamed 2 செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி 14.08.2025இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் முப்புரம் வட்டார உறுப்பினர் சிவபாதம் குகநேசன் மற்றும் வள்ளிபுனம் பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் காற்றாலை திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்த தீர்மானம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட காற்றாலை மின்னுற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள்,எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் – காற்றாலை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இந்த சந்திப்பு ஆரம்பமானது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு குறித்த நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்து அது குறித்து மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிவில் சமூக அமைப்புக்கள் தங்களின் போராட்டங்களை இடைநிறுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்களை தற்போது முன்னெடுத்துள்ளன.