Home Blog Page 3036

செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது – தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. உண்மையில் செஞ்சோலைப் படுகொலைகளை உலகம் தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் நிகழ்ந்திராது. செஞ்சோலைப்படுகொலை என்பது பாரிய இனப்படுகொலைக்கான சிங்கள அரசின் உத்திகையாகும்.

அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன. எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கின்னஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப்படுகொலையாகும். Kulu 03 செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது - தீபச்செல்வன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலயக் கல்வி அலுவலகம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்து அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப் பட்டார்கள். கண்டி வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய சனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்ச அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது. நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்தபோது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்.

அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைத்தான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.

கல்வி உரிமைக்காகபோராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்.nkm 01 செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது - தீபச்செல்வன்

மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா?

செஞ்சோலைத்தாக்குதலில் காயமடைந்த மாணவி ஒருவர் இப்போது, ஆசிரியராக கடமையாற்றுகிறார். ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் புனிதர்களாக அவதாரம் எடுக்க சிங்கள இராணுவத்தினர் முயற்சித்தனர். பாடசாலை வாசல்களில் அவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். அவர்களை தாண்டி, அவர்களின் விசாரணைகளைத் தாண்டி வருவதற்கு அந்த ஆசிரியர் கடுமையாக தயங்கினார். அஞ்சினார். பத்து ஆண்டுகள் கடந்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த தாக்குதலின் வடு இன்னும் நீங்கவில்லை.

இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் உலகத்தில் அதாவது இணைய ஊடகத்தில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வலுவாக இடம்பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இதில் பெரும் அக்கறை கொண்டு ஈடுபடுகின்றனர். என்றாவது ஒருநாள் சிங்கள அரசு இதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அன்றுதான் இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும்.

 

தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (22) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் போராட்ட தளத்தின் முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்ட களத்தில் இருந்த தந்தை ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்த தனது மகனான செல்வராசா அச்சுதன் (வயது 21) என்ற மகனை தேடி வந்த நிலையில் மகன் பற்றிய எந்த தகவலுமின்றி செவ்வாய்கிழமை தனது 56 ஆவது வயதில் காலமானார். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மரணித்தவரின் பதாதை மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்ட முடிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,

தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருவதுடன், சர்வதேச விசாரணையை உள்ளூர் விசாரணையாக மாற்றியமைத்துள்ளது. இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

எனது வீட்டை சோதனையிட்டது சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல அச்சுறுத்தலும் கூட – சிறிதரன்

வட்டக்கச்சியிலுள்ள தனது வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்து சோதனை நடத்தியதன் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபாநாயகரிடம் முறையிட்டார்.

பாதுகாப்புத் தரப்பினரால் தான் பல தடவைகள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும், சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கவோ, சுதந்திரமாக வாழவோ முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இந்த முறைப்பாட்டை சபாநாயகரிடம் முன்வைத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 882 ஆறுமுகம் வீதி,வட்டக்கச்சியில் உள்ள எனது சொந்தக்காணியிலுள்ள வீட்டில் (நேற்று) அதிகாலை இராணுவத்தினர், பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குவிந்து காணியையும் வீட்டையும் சுற்றிவளைத்ததுடன், காணிக்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்காக எனது காணியைத் திறக்குமாறு கூறியதுடன், காணியைப் பராமரிக்கும் சண்முகநாதன் என்பவரை கிராம அலுவலரின் உதவியோடு அழைத்துவந்து எனது வீட்டின் கதவுகளையும் திறக்கக் கோரியுள்ளனர். இது பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளேன்.

இந்த சோதனை நடவடிக்கையானது என்னுடைய பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுகின்ற செயலாகவே உள்ளது. இதுவும் என் மீதான அச்சுறுத்தலாகவே உள்ளது. உடனடியாகவே இது தொடர்பில் சபையிலிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் கவனத்துக்கு சபாநாயகர் கொண்டுவந்தபோது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் அடிபணிய மாட்டோம் – மகிந்தாவின் கட்சி

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து புலம்பெயர் அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் கடுமையான விமசர்னங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாம் அவற்றிற்கு அடிபணியப் போவதில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரட்நாயக்கா நேற்று (21) தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது நாட்டில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் வெளிநாடுகளின் கருத்துக்களைத் கேட்க முடியாது. கனடா மற்றும் அமெரிக்காவின் முடிவு-களை நாம் நடைமுறைப்படுத்த முடியாது.

இது எமது மக்களின் முடிவு, சில்வா சிறீலங்காவுக்கு முக்கியமானவர் 30 வருட போரை முடிவுக்கு கொண்டுவந்தவர். நாம் இங்கு இராணுவத்தளபதியை நியமிக்கும் போது புலம்பெயர் சமூகத்திற்கும், அமெரிக்காவுக்கும் வலிக்கின்றது.

நாம் எமது போர் வீரனை நியமிக்கும்போது அமெரிக்காவுக்கு எதற்கு வலிக்க வேண்டும். அதாவது தொலைவில் இருந்து இயக்கும் கருவியைக் கொண்டு சிறீலங்காவை இயக்க அவர்கள் முனைகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மற்றுமொரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

யெமன் கொவுதி படையினரால் அமெரிக்காவின் மற்றுமொரு எச். கியூ-9 ரக உளவு விமாம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் நேற்று (21) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் இது. தமது வான் எதிர்ப்பு படையினரைல் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக கொவுதி படையினரின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

தமார் நகரத்திற்கு அண்மையாக தாம் ஏவுகணை மூலம் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானது எனவும், உளவு விமானத்தை தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணை மூலமே வீழ்த்தியிருக்க முடியும் எனவும் தனது பெயரைக் குறிப்பிடவிரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யெமன் ஆயுதக்குழுவினர் தற்போது மிக நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், அவற்றை அவர்கள் ஈரானிடம் இருந்து பெற்றிருக்கலாம் எனவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)

கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி

தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும் கோபுரங்களால் ஆபத் துக்கள் ஏற்படுமாயின் அதற்கு பொறுப்புக்கூறுவது யார் என தமிழர் கல்வித்துறைக்கு அரும்பணியாற்றி யாழ்.மாவட்டத்தில் மட்டுமன்றி நாடாளாவிய ரீதியில் தனக்கென்று தடம்பதித்திருந்த பொருளியல் ஆசான் மறைந்த வரதாராஜனின் புதல்வரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வ.பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கேள்வி எழுப்பியுள்ளார்.  அச்செவ்வியின் இறுதிப் பகுதி வருமாறு…

அது மட்டுமல்ல குறித்த கோபுரத்தின் தடிமன் என்ன? அது என்ன உலோகத்தால் செய்யப்பட்டது என்பது கூட எமக்கு தெரியாது. குறித்த கோபுரங்களின் அடித்தளத்தின் உறுதியின் தன்மை மற்றும் கோபுரத்தின் உறுதியின் தன்மை போன்ற விபரங்கள் எதுவும் இல்லாமல் அது நிறுவப்படுகின்றது. இந்நிலையில் அக்கோபுரம் சரிந்து விழாது என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்.

அத்துடன் 1986ஆம் ஆண்டு 03 மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானப் அறிவித்தலின் படி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டட விதிகளில் பவுண்டேசன்ஸ் என்ற தலைப்பின் கீழ் உள்ள பிரிவு 55 – 57 க்கு அமைவாக அனுமதி பெறப்படல் வேண்டும் ஆனால் அந்த அனுமதியும் பெறப்படவில்லை. 2009 ஏப்பிரல் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலின் படி 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் அனுமதி பெறவேண்டும்.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத் திற்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதை நாங்கள் நிராகரித்து விட்டோம். நாங்கள் வெளிநாடு செல்லவில்லை. ஆனால் முதல்வர் மாகாணசபை உறுப்பினராக இருக்கும் போதும் தற்போது முதல்வராக இருக்கும் போது பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். ஆகவே அவருக்கு உண்மையான சிமாட் லாம் போல்கள் தெரியும். தற்போது நிறுவப்படுகின்றவை முதல்வர் கூறுவதுபோன்று இங்கு நிறுவப்படுவன எவையும் சிமாட் லாம் போல்கள் அல்ல.

கேள்வி:- தற்போது கோபுரங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றுக்கான அனுமதி பெறுவதிலிருந்து முறையான ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை என்று எந்த அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளீர்கள்?

பதில்:- யாழ்.மாநகர சபையின் ஆதனத்தை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடுகின்ற போது மாநகர சபைக்கட்டளைச்சட்டத்தின் 40(எப்)ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய 35,37ஆம் பிரிவுகளின் பிரகாரம் உரித்தாக்கப்பட்ட ஆதனங்கள் அல்லது வேறுவகையாக சபைக்கு உரித்தாக்கப்பட்ட ஆதனங்களை விற்றல், குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரின் அனுமதி பெறப்படவேண்டும். அதற்போது அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுனரிடம் அனுமதி பெறவேண்டும்.

குறித்த ஆதனத்தின் குத்தகைப்பெறுமதி தொடர்பாக விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படுவதோடு,  பெறுகை நடைமுறைகளுக்கமைவாக ஆதனங்களைக் குத்தகைக்கு வழங்கி சட்டரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான எந்த நடைமுறையும் இதில் பின்பற்றப்படவில்லை.

மாநகர கட்டளைச்சட்டத்தின் 227 இன் பிரகாரம் 15000 ரூபாவிற்கும் ஒரு வருடத்திற்கும் குறைந்த ஒப்பந்தத்திற்கு யாழ்.மாநகர சபை ஆணையாளரும், மாநகர கட்டளைச்சட்டத்தின் 228 இன் பிரகாரம் 15000ரூபாவிற்கு மேற்பட்ட தொகைக்கும் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத்திற்கு யாழ்.மாநர சபை முதல்வரும் ஆணையாளரும் கையப்பமிடவேண்டும் என்பதுடன் மாநகர இறப்பர் முத்திரையும் பதிக்கப்பட வேண்டும். அவ்விடயமும் நடைபெற்றிருக்கவில்லை. மாறாக, குறித்த ஒப்பந்தம் 15000 ரூபாவிற்கும் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தமாக இருக்கின்றபோதும் அவ் ஒப்பந்தத்தில் யாழ்.மாநகர சபை முதல்வர் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளார். இது சட்ட ஏற்பாடுகளை மீறும் செயலாகும்.

அத்துடன் 11 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2008 அம் திகதி இலங்கையில் உள்ள மாநகர முதல்வர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபை தவிசாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு திட்டமிடல் குழுவை அமைத்து நகர அபிவிருத்தி தொடர்பான மற்றும் கட்டிடங்கள் தொடர்பான விண்ணப்பங்களை குறித்த திட்டமிடல் குழுவில் விவாதித்து அதன் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்படவேண்டும் என்று உள்ளது. யாழ்.மாநகர சபையில் குறித்த திட்டமிடல் குழு இருக்கின்ற போதிலும் குறித்த திட்டமிடல் குழுவிற்கே தெரியாமல் இக்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் உரிய நிர்வாக நடைமுறைகள் அனுமதிகள் எதுவும் இன்றியே இவ்தொலைத் தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்பது வெளிப்படை

 கேள்வி:- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் கோபுரங்களை அமைப்பதற்கு விசனம் வெளியிட்டுள்ளீர்களே?

பதில்;- நல்லூர் கோவிலைச் சுற்றி நான்கு கோபுரம் அமைக்கப்படுகின்றமைக்காக விசனம் வெளியிடவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 200, 300 மீற்றர் இடைவெளிக்குள் கோபுரங்களை அமைப்பதற்கான பின்னணியையே வெளிப்படுத்துகின்றேன். எல்லா இடத்திலும் தூர தூர இடங்களில் இந்த கோபுரங்களை அமைத்து விட்டு நல்லூரில் மட்டும் ஏன் 4 கோபுரங்களை அமைக்கின்றார்கள் என்றால், நல்லூர் கோவில் திருவிழா காலங்களில் அங்கு இலட்சணக்கான மக்கள் வருவார்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரலை செய்வதற்கு வருவார்கள்,

5ஜி தொழில் நுட்பத்தில் விரும்பிய சாதனத்துக்கு விரும்பிய வேகத்தை கொடுக்கலாம் அதாவது ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு இந்த அளவு வேகத்தையும் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இன்னொரு வேகத்தையும் கொடுக்கலாம். இதனை மையப்படுத்தியே இவ்வாறான கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

கேள்வி:- யாழ்.மாநகர முதல்வர் நடத்திய ஊடக வியலாளர் சந்திப்பில் கோபுரங்களை அமைப்பதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளாரே?

பதில்:- முதலாவதாக,  யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள கோபுரத்தில் அன்டனாக்கள்  எவ்வாறு யாருடைய அனுமதியுடன் பொருத்தப்பட்டது, பொருத்தப்பட்ட அந்த அன்டனாக்கள் எந்த தொழில்நுட்பத்திற்குரியது. என்பதொரு கேள்வியாக இருக்கின்றது. அதனைவிடவும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் மூலமாக எழுப்பபட்ட வினாவுக்கு கிடைத்துள்ள பதில் கடித்தில் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் எந்த ஒரு சிமாட் லாம் போல்களை நிறுவுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் குறித்த நிறுவனம் எந்தவித அனுமதியும் இல்லாத ஒரு சேவை வழங்குனர் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தகவலின் படி  இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எந்த வித அனுமதியும் இல்லாமல் அதுவும் அனுமதிச்சான்றிதழ் இல்லாத ஒரு வழங்குனருடன் யாழ்.மாநகர சபை எவ்வாறு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது என்பது முதல் பிரச்சினை யாகின்றது. அடுத்து யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அனுமதியில்லாத ஒரு நிறுவனத்தின் நிர்மானங்களை எவ்வாறு நிறுவலாம்? என்பது அடுத்த பிரச்சினையாகின்றது.

இரண்டாவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் இது தொடர்பில் தகவல் ஒன்றினை கோரியிருந்தேன். அதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையானது, யாழ்.மாநகரசபை மற்றும் ஆகியோருக்கிடையான ஒப்பந்தம் மூலம் பொருத்தப்படும் சிமாட் லாம் போல்களுக்கான  அனுமதி எதுவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பெறப்படவில்லை. மேலும் அதிகாரசபைக்குரிய வீதிகளில் இரண்டு சிமாட் லாம் போல்கள் அனுமதி பெறப்படாமல் நடப்பட்டுள்ளன. இது குறித்து யாழ்.மாநகர மேயருக்கும் யாழ்.மாநகர ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்றுள்ளது. ஆக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி பெறப்பட வில்லை என்பதும் உறுதியாகின்றதே.

கேள்வி:- நிர்மானிக்கப்படும் கோபுரங்களால் சூழலுக்கான ஆபத்துள்ளதாக கூறியிருந்தீர்களே?

பதில்:- ஆம், ஒரு உதாரணத்தினை முன்வைக்கின்றேன், கஸ்தூரியர் வீதியும் அரசடி வீதியும் இணையும் சந்தி. (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில்.) மூன்று மிகப் பிரபல்யமான பாடசாலைகள், இரண்டு பிரபல்யமான தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.

அண்மையில் சில மணித்தியாலங்கள் நீடித்த மழையால் இப்பிரதேசம் வெள்ளக்காடாக மாறிவிட்டது. அந்த வெள்ள நீர் கார்களுக்கு சார்ஜ் போடலாம் என்று கூறப்படும் சிமாட் லாம் போலின் அடித்தளத்தை சேதமாக்கிவிட்டது. அதன் அடித்தளத்திற்கு இட்ட மண் இடிந்து கீழ் இறங்கியதுடன் கரைந்தும் சென்று விட்டது

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஒரு கட்டுமாணம் அமைக்க வேண்டுமாயின் மாநகர சபை கட்டளைச் சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் யாழ்.மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் அக்கட்டிடத்தின் அடித்தளத்தின் உறுதிப்பாட்டினை உறுதிசெய்வற்காக உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும் என்பது சட்டம்.

இச் சட்டமே ஒரு சாமானிய பொதுமகன் தன் வீட்டு மதிலை கட்டுவதற்கு கூட பயன்படுத்தப்படுகின்றது. இதை மீறிச் செயற்பட்டால் உடனடியாக சட்டம் பாய்ந்து அம்மதில் கட்டுமானத்தை தடுத்து நிறுத்துகின்றது. ஆனால் இவ்வளவு பெரிய கோபுரம் அமைப்பது தொடர்பிலும் அதன் அடித்தளத்தின் உறுதிப்பாடு தொடர்பிலும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை அதாவது கட்டட அனுமதிச் சான்றிதழ் பெறப்படவில்லை.

இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கும் எதிரான போர் பிரகடனம் – சிவாஜிலிங்கம்

இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கு எதிரான போர்பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில்  ஊடகங்களைச் சந்தித்து கருத்துக்களை வெளியிடும்போது இவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என முன்னாள் பாராளுமனற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட சவேந்திர சில்வாவிற்கு மைதிரி ரணில் அரசு இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இலங்கை அரசின் இந்த மிலேச்சகரமான செயற்பாட்டை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கு பற்றி கண்டனம் தெரிவிப்பேன் அது மட்டுமல்லாது ஐ.நா ஆணையாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து சர்வதேசம் இனியும் இலங்கையை நம்பக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளேன்.

ஐ.நாவால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ( கலப்புப்பொறிமுறை) க்கான கால நீடிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தவுள்ளேன். இனியும் இலங்கை அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்காது ஐ.நா.பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விடையத்தைக் கொண்டு சென்று இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்றார்.

இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்று கருதப்படும் அத்தனை தரப்புக்களையும் நீதியாக விசாரிக்கவேண்டும். இலங்கை அரசின் கடந்த கால ஏமாற்று நாடகங்களை சர்வதேசம் தற்போது உணர்ந்திருக்கும் எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்ல இனியும் காலம் தாமதிக்காது சர்வதேசமும் எமது தமிழத்தரப்புக்களும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

யசூசி அகாஷி – சம்பந்தன் சந்திப்பு

ஜப்பானிய இராஜதந்திரி யசூசி அகாஷி நேற்று (20.08)  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்

இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும், அதன் காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை சம்பந்தன் வலியுறுத்தினார்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக் காட்டிய சம்பந்தன், இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளராக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய சம்பந்தன், சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடமாடும் CCTV

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைக்காக பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும் CCTV கண்காணிப்புப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் சிறப்பு உற்சவங்கள் நடைபெறவிருப்பதால், பெருமளவு மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும்  CCTV கண்காணிப்பு பிரிவு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று (21.08) நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.

இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு காவடி தூக்கும் வரதராஜப் பெருமாளின் செயலை கண்டிப்போம் – கஜேந்திரன்

இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு காவடி தூக்கும் வரதராஜப் பெருமாளின் தமிழ் மக்களுக்கான இரண்டகச் செயலை வன்மையாகக் கண்டிப்போம்.

தம்மைப் போராளிகள் எனச் சொல்லும் எவரும் செய்யத் துணியாத செயலை அவர் வெளிப்படையாக தன்னைப் போராளி எனக் கூறி கோத்தா என்ற கொடிய இனப்படுகொலையாளனை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” வரப்போகின்ற ஐனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற மற்றும் அறிவிக்கப்படக் கூடிய என்று பெயர்கள் அடிபடுகின்ற நபர்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறானவர்கள். தமிழ்த் தேசத்தினுடைய இருப்பிற்கு மாறானவர்கள். இவர்களில் யார் ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் ஏற்படப் போவதில்லை. நிச்சயமாக அவர்கள் தமிழ்த் தேசத்திற்கு எதிராகவே செயற்படுவார்கள்.

ஆகையினால் எந்தவொரு வேட்பாளரையும் தெரீவு செய்வதான முடிவிற்கு தமிழ் மக்கள் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் ஏற்படப் போவதில்லை.

இந்த இடத்திலே வரதராஐப் பெருமாள் அவர்கள் மக்களை தம் பக்கம் ஈர்க்கின்ற நோக்கத்தோடு தன்னுடைய கருத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதாவது தாங்கள் எல்லாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மட்டும் போராடவில்லை தாங்களும் போராடியவர்கள் என்று ஏதோ போலித் தோற்றமொன்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முற்படுகின்றார்……..” என்றார்.

போராட்டத்தை காட்டிக் கொடுத்து ஆதிக்க சக்திகளின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் போராளிகள் என மக்களை நம்பவைத்து இனப்படுகொலையாளர்களை ஆதரிப்பதை தமிழ் மக்கள் மன்னிக்கவோ ஏற்கவோ கூடாது.

இது குறித்த உரையில் கஜேந்திரன் மேலும் கூறுகையில் “ஏங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு விடயத்தை மறந்து விட்டார் என்றே கூறுகின்றொம். அதாவது தாங்கள் எல்லாம் இந்த விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டார்.

30ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடிய பொழுது இவர் உட்பட இவர் குறிப்பிட்ட அத்தனை தரப்புக்களும் இந்திய மற்றும் இலங்கை இரானுவத்தோடு இணைந்து இந்த விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்து சொந்த மக்களைக் கடத்திக் கொலை செய்து கப்பம் பெறுகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தான்.

ஆகவே இவர்கள் தாம் விடுதலைக்காக போராடியவர்கள் என்று கூறுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.

உலகத்திலே விடுதலைக்காக போராடுதல் என்பது அடக்குமுறை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் அந்த அரசினுடைய பிடியில் இருந்து விடுபட போராடவது தான் விடுதலைப் போராட்டமே தவிர அடக்குமறையாளர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுடப்பதும் அவர்களோட சேர்ந்து கொலைகளைச் செய்வதும் கப்பம் பெறுவதும் ஒரு போதும்; விடுதலைக்காக போராடுதல் என்று அர்த்தம் அல்ல!” எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை ஏமாற்றும் சக்தி காலம் காலமாக களமிறக்கப்பட்டு மக்கள் கவனத்தை திசை திருப்ப முயன்று வருவது இது ஒன்றும் புதிது அல்ல.

எனவே தமிழ் மக்கள் தெளிவாக சிந்தித்து பயணிக்க வேண்டும்.

இனப்படுகொலையான மக்கள் இறந்தவர்கள் அல்லர். அவர்கள் நீதிக்காக இன்னமும் போரடிக்க கொண்டே இருப்பவர்கள் என்பதை மறந்து பேசும் எவரையும் தமிழ் மக்கள் மன்னிக்கக் கூடாது. மண்ணில் இடமளிக்கவும் கூடாது என தெரிவித்துள்ளார்.