Home Blog Page 2808

குருநாகல் பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் மீது அதிகாலையில் தாக்குதல்

குருநாகல் பகுதியில் உள்ள கின்னியம மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அப்ரார் துக்கியா, மஸ்ஜிதுல் ஆயிஷா துக்கிய ஆகிய பள்ளிவாசல்கள் மீது சிங்கள இனத்தவர்கள் இன்று (13) அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்காவில் கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்கள் மீது சிங்கள இனத்தவர்கள் பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே நேற்று (12) குளியப்பிட்டியா, பின்கிரியா மற்றும் துமலசூரியா ஆகிய பிரசேதங்களில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினர் அங்கு ஊரடங்கு உத்தரவுகளை இன்று (13) காலை வரை பிறப்பித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா கடற்படையினருக்கு தாக்குதல் கப்பல் – அமெரிக்காவின் அன்பளிப்பு

அமெரிக்க கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த “சேர்மன்” எனப்படும் P-626 வகையான கடற்படைக் கப்பல் ஒன்றை அமெரிக்க அரசு சிறீலங்கா அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கப்பல் நேற்று (12) சிறீலங்காவை வந்தடைந்துள்ளதுடன், சிறீலங்கா கடற்படையினர் அதனை வரவேற்கும் விழாவையும் கொழும்பு துறைமுகத்தில் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். வரவேற்பு விழாவில் சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உட்பட பெருமளவான அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கப்டன் றோகித அபயசிங்கா இந்த புதிய கடற்படைக் கப்பலின் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளதுடன், 22 அதிகாரிகளும் 111 கடற்படையினரும் புதிய கப்பலில் பணியாற்றுவார்கள்.

இந்த கப்பலின் சேவையை ஒரு நல்ல நாளில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா ஆரம்பித்து வைப்பார் என சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

115 மீற்றர் நீளமாக இந்த கப்பல் அதி நவீன ஆயுதங்களை கொண்டுள்ளதுடன், சிறீலங்கா கடற்படையின் பலத்தை மேலும் அதிகாரிக்க உதவும் என அவை மேலும் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் ஆவணி மாதம் ஹவாய் தீவுக்கு சென்ற சிறீலங்கா கடற்படையினர் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கப்பலின் அன்பளிப்பு தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தனர்.

அமெரிக்காவுக்கு சார்பான அரசு ஒன்றை ரணில் விக்கிரமசிங்கா அமைத்துள்ளதும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுகளை வழங்கியதும் அமெரிக்காவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவே அமெரிக்காவின் இந்த அன்பளிப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்’

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கமைய வாரத்தின் முதலாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கடற்கரைப்பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்கும் போர்குற்றங்களுக்கும் நீதி வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும், வட கிழக்கு மாகாணங்களில் பொதுஜன வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையுடன் நடத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், தமிழ் மக்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள கையளிக்கபப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ளனர்.

“ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், இலங்கை ஆயுத படைகளினால் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நினைவு கூர்ந்து கட்சி பேதங்கள் கடந்து அனைவரும் இனவழிப்பு வாரத்தை முன்னெடுக்க வேண்டும்,” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “தமிழினப் படுகொலை வாரம் மே 12 ஆம் திகதியிலிருந்து மே 18 ஆம் திகதி வரை 21 இடங்களில் அனுஷ்டிக்க உள்ளோம். இறுதியாக மே 18 முள்ளிவாய்க்காலில் நடத்த அழைப்பு விடுத்தள்ளோம். ஆகவே சகல தமிழ் தேசிய அமைப்புக்களும் பொது மக்களும் உணர்வுபூர்வமாக தன்னெழுச்சியாக அங்கே ஒன்று கூட வேண்டும்.

“சென்னையிலே ஐல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மக்கள் திரண்டது போல முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கும் மக்கள் திரள வேண்டும். அவ்வாறு எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி அணிதிரளுவதனூடாக அரசிற்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் ஒரு தெளிவான செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும்,” என்றார்.

பங்களாதேஷ் கிரிக்கட் அணியினரின் சிறிலங்காவிற்கான பயணம் சாத்தியமற்றதாகின்றது

கடந்த மாதம் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை அடுத்து, மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் சிறிலங்காவிற்கு மேற் கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்குபற்றுவதற்காக பங்களாதேஷ் அணியினர் கடந்த டிசம்பர் முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எமது அணி மட்டுமல்ல வேறு எந்த ஒரு அணியும் விளையாட்டில் பங்குபற்றாது என  பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளித்த போதும், நாங்கள் அங்கு செல்வதாக எந்த திட்டமும் இல்லை என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மார்ச் மாதம் 15ஆம் திகதி நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடைபெற்ற சமயம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் 50 மீட்டர் துாரத்தில் ஒரு பரீட்சார்த்த போட்டியில் விளையாடுவதற்காக நகரத்தில் தங்கியிருந்தனர். உடனே போட்டிகள் ரத்துச் செய்யப்பட்டன.

சிறீலங்காவில் தொடரும் வன்முறை – சிலாபத்தில் ஊரடங்கு அமுல்

சிலாபம் காவல்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான ஊரடங்குச் சட்டம் நாளை (13) காலை 4.00மணிவரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக முகநூலில் வந்த செய்தி ஒன்றையடுத்து அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

காவல் நிலையம் அருகே வந்த இளைஞர் குழு இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்த இராணுவம் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.

முகநூலில் வந்த தகவலை தவறாக மொழிபெயர்த்த காரணத்தால் இந்த காலவரம் ஏற்பட்டதாக சிலாபம் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அதிகமாக சிரித்தால் ஒரு நாள் அழவேண்டிவரும்” என்ற வாசகம் தவறாக “இன்று மட்டும் தான் நீங்கள் சிரிப்பீர்கள், நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் தான் உள்ளது” என தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

தௌஹீத் ஜமாஅத்தினரின் அலுவலகம், பள்ளிவாசல் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலக்கு – 25 (12-05-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு – 25 (12-05-2019)

அம்பாறையில் கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு

கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய  நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புதரப்புக்கு அதிரச்சியைக் கொடுத்த இந்த  அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன, இதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து சிறீலங்கா காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் இதன்போது இலங்கை கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லக்கூடியது என்று அங்கு கண்டுபிடிக்கப்பட்ட விளக்கப் புத்தகத்தில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போர் நிறைவடைந்த பின்னரும் சிறீலங்கா அரசு வடக்கில் படைப் பரம்பலை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒரு படைத்துறை ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகையில் சிறீலங்கா அரசியல்வாதிகளின் துணையுடன் இஸ்லாமியத் தீவிரவாதம் சிறீலங்காவின் எல்லாப் பகுதிகளிலும் பலமடைந்துள்ளதையே இது காட்டுவதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

amparai 2 அம்பாறையில் கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு

 

தாய்லாந்தின் பிரபல கடற்கரை மூடப்படுகிறது

2000ஆம் ஆண்டு வெளிவந்த ‘தி பீச்’ எனும் ஹொலிவுட் திரைப்படத்தின் மூலம் உலகில் பிரபலமான, தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலுள்ள ‘பி பி லே’ எனும் தீவிலுள்ள ‘மாயா பே’ கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த கடற்கரை கடந்த ஆண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

மூடப்படுவதற்கு முன்பு வரை இந்த கடற்கரையில் நாள் முழுவதும் 5,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதன் காரணமாக அந்த கடற்கரை பகுதியில் காணப்பட்ட அரிய வகை பவளப்பாறைகள் அழிவுக்குள்ளாகி வருவது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த கடற்கரை பகுதியின் வாழ்க்கைச் சூழல் மேலும் மேம்பாடடையும் பொருட்டு இந்த தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட உதவி: ஸ்கை நியூஸ்

பிரித்தானியா பள்ளிவாசலில் துப்பாக்கி தாக்குதல்– வலுக்கின்றது மத மோதல்கள்

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் செவன் கிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள செவன் கிங்ஸ் மஸ்ஜித் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் இரவு (09) துப்பாக்கி துப்பாக்கிப் பிரயோக சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இஸ்லாமிய மக்களின் ரம்ழான் பண்டிகை தொழுகையின் போது இந்த துப்பாக்கித் தாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன், முகமூடி அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் பள்ளிவாசலுக்குள் பிரவேசித்தததாக பிரித்தானியா காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கைத்துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் யாரும் காயமடையவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொழுகை ஆரம்பமாகிய அரைமணி நேரத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் அதன்போது நாம் மேல் தளத்தில் இருந்தோம் என தொழுகையில் கலந்துகொண்ட இப்ராகீம் குசேன் (19) தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்த நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதனை முகாமையாளர்கள் கண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூஸ்லாந்தில் உள்ள பள்ளிவாசலில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 50 இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பெருமளவு தமிழ் மக்கள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் கலிபோனியாவில் உள்ள யூதர்களின் தேவாலயத்தில் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்திருந்தனர்.

மதங்களுக்கும் இனங்களுக்குமிடையிலான மோதல்களை தவிர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் பாரபட்சம் காண்பிக்காது நடவடிக்கை எடுக்க தவறி வருவதே இந்த மோதல்களுக்கான காரணம் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட உதவி: பி.பி.சி

சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’  (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.

ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூலானது தமிழீழ தேசத்தின் கட்டமைப்புகள் பற்றி எடுத்துக்கூறுகிறது. எட்டு பாகங்கள் மற்றும் இருபத்தாறு அத்தியாயங்கள் கொண்டதாக  இந்நூல் அமைவதுடன்  தொடர்புடைய கட்டுரைகள், ஒளிப்படங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இந்நூலின் தமிழ் பதிப்பும் பின்னர் வெளியிடப்படுமெனவும் அறியமுடிகிறது.

இந்நூல் வெயியீடுபற்றி அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

நொடிகள் மெதுவாகக் கரைந்தோடி தமிழ் இனவழிப்பின் தசாப்தத்தை அம்பலப்படுத்தும் வேளையிலும் அவ்விளைநிலத்தில் பிறந்த அடிபணியா சித்தாந்தங்களோ அந்த மணல் துளிகளில் தோய்ந்து கிடக்கின்றன.

சர்வதேச கூட்டுச்சதிகளுடன் நின்றாடும் வழிதவறிய அமைதி காப்பவர்களின் சுழலும் புயலுக்கு மத்தியில்,  நந்திக்கடலின் கடற்கரைகளில் எம்பாதங்களை நிலையாகப் பதித்து சாம்பல் பறவைகளாய் நாம் தலைநிமிர்த்தி முரசறைவது யாதெனில் தமிழ் இறைமை என்றும் விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என்பதாகும். இந்த வாசகங்களோடு இளைஞர்கள் சாம்பல் பறவைகளாய் கிளர்ந்தெழுந்து ஆக்கியிருக்கும் ஆவணமே இந்த நூல்…’  என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் குறித்த நூல் தொடர்பான கருத்துக்களை  இந்நூலில் பதிவுசெய்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நூல் தமிழீழ தேசவிடுதலைப் போராட்டத்தின் சிறப்புமிக்க பரிமாணமொன்றை உலகெங்கும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு ஆவணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.