சிறீலங்கா கடற்படையினருக்கு தாக்குதல் கப்பல் – அமெரிக்காவின் அன்பளிப்பு

அமெரிக்க கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த “சேர்மன்” எனப்படும் P-626 வகையான கடற்படைக் கப்பல் ஒன்றை அமெரிக்க அரசு சிறீலங்கா அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கப்பல் நேற்று (12) சிறீலங்காவை வந்தடைந்துள்ளதுடன், சிறீலங்கா கடற்படையினர் அதனை வரவேற்கும் விழாவையும் கொழும்பு துறைமுகத்தில் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். வரவேற்பு விழாவில் சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உட்பட பெருமளவான அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கப்டன் றோகித அபயசிங்கா இந்த புதிய கடற்படைக் கப்பலின் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளதுடன், 22 அதிகாரிகளும் 111 கடற்படையினரும் புதிய கப்பலில் பணியாற்றுவார்கள்.

இந்த கப்பலின் சேவையை ஒரு நல்ல நாளில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா ஆரம்பித்து வைப்பார் என சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

115 மீற்றர் நீளமாக இந்த கப்பல் அதி நவீன ஆயுதங்களை கொண்டுள்ளதுடன், சிறீலங்கா கடற்படையின் பலத்தை மேலும் அதிகாரிக்க உதவும் என அவை மேலும் தெரிவித்துள்ளன. கடந்த வருடம் ஆவணி மாதம் ஹவாய் தீவுக்கு சென்ற சிறீலங்கா கடற்படையினர் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கப்பலின் அன்பளிப்பு தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தனர்.

அமெரிக்காவுக்கு சார்பான அரசு ஒன்றை ரணில் விக்கிரமசிங்கா அமைத்துள்ளதும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுகளை வழங்கியதும் அமெரிக்காவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுவே அமெரிக்காவின் இந்த அன்பளிப்புக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.