தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்த தினத்தையொட்டிய அஞ்சலி நிகழ்வுகள், அவரின் ஊரான உரும்பிராயில் அவரின் சிலை அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றன.
இன்று காலை 10 மணியளவில் அவரது சிலைக்கு அவரின் சகோதரி ஈகைச்சுடரேற்றி, மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் M.K.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், பா.கஜதீபன், சி.தவராசா, அனந்தி சசிதரன் மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஸ்யால பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பெருமளவு இராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சந்தியிலுள்ள புத்தர் சிலையொன்று சேதப்படுத்தப்பட்டதையடுத்து, இன்று (05) றம்ழான் பெருநாள் அனுஸ்டிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை.
மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று சேதமாக்கப்பட்டதையடுத்து, முஸ்லிம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியிலே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை இதை எமக்கு தர வேண்டும் அரசியல்வாதிகளுடைய பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக தங்களுடைய விகாரையில் குழப்பம் நிகழ்கிறது இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இதில் கரிசனை கொண்டு தமது விகாரையை தம்மிடம் பெற்றுத் தருமாறு கோரி விகாரையின் விகாராதிபதி உட்பட பல இடங்களில் இருந்து வருகை தந்த பிக்குமாரும் கொக்குளாய் மணலாறு புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்று மதியம் 1.30 மணிக்கு குறித்த பகுதியில் அமைக்கப்படட பாரிய புத்தர் சிலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமை தாங்கி நடத்தியிருந்தனர்.
குறித்த அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் இன்றையதினம் வெளி இடங்களில் இருந்து வருகைதந்த பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.
மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் இன்று மாலை ஈடுபட்டனர்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொடு ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் மகா சங்கத்தினர் கூடினர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் 15 விடயங்களின் கீழ் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சில விடயங்கள் தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், ஒன்றிணைந்த அறிக்கையொன்றையும் மகா சங்கத்தினர் வௌியிடவுள்ளனர்.
இன்று எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட ஶ்ரீ விஜிதசிறி தேரர் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தார்
சிங்களம், தமிழ் , முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஸ்திரமான தகவலை உறுதிப்படுத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம். அதுவே எமது கோரிக்கையாகும். தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை, இடம்பெற்று இருக்கக்கூடாத ஒரு விடயமாகும். அதனால் தங்களின் பொறுப்புக்களை ஏற்குமாறு குறித்த தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அந்த தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான தீர்மானத்தையும் நாம் எடுத்துள்ளோம். அத்துடன், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பின், தாம் சுற்றவாளிகள் என்பதை அரசிற்கும் பாதுகாப்பு பிரிவிற்கும் நிரூபியுங்கள். இந்த நிலைமையை நாம் புரிந்து செயற்படாவிடின், வௌியே இருந்து எமது நாட்டிற்கு அழுத்தங்கள் நிச்சயமாக விடுக்கப்படும். எமது நாட்டின் அமைதி சீர்குலைக்கப்பட்டு பாரிய அபாயத்தை நாம் எதிர்நோக்க நேரிடும்.
தாயக இறைமையை மீளப்பெறும் வரலாற்றுப் பயணத்தின் 400வது ஆண்டு.
தமிழ் மொழி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தின் 63வது ஆண்டு.
தாயகத் தமிழிளைஞர் அரசியல் விழிப்புணர்ச்சி எழுச்சியின் 45 வது ஆண்டு.
எங்கள் தாயக வரலாற்றில் 05.06.1619 அன்று யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலி குமாரனை போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்புப் படைகள் கைதாக்கியதன் வழி 116 ஆண்டுகள் யாழ்ப்பாண அரசு தனது இறைமையைக் காப்பாற்றக் கடுமையாகப் போராடிய நிலை மாறி யாழ்ப்பாண அரசின் இறைமை போர்த்துக்கேய மன்னரால் அபகரிக்கப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புக்கு 1591ம் ஆண்டில் போர்த்துக்கேயர்களின் 2வது யாழ்ப்பாணப் படையெடுப்பின் பொழுது சைமன் பிஞ்ஞன் என்னும்
போர்த்துக்கேயத் தளபதியினால் கைப்பற்றப்பட்ட அரசகுமாரனாகிய எதிர்மன்னசிங்க குமாரனை போர்த்துக்யேர் நிபந்தனைகளுடன் மன்னனாக்கி அவனின் யாழ்ப்பாண அரசின் பிரதானிகளுடன்
பேச்சுவார்த்தை நடாத்திச் செய்த நல்லூர் உடன்படிக்கை 1591ல் தான் வித்தாகியது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து.
கூடவே கண்டிச் சிங்கள அரசின் மீது போர்த்துக்கேயர் போர் தொடுத்து அதனை வீழ்ச்சியடையச் செய்யாது தடுப்பதற்கு விமலதர்மசூரியன் (1593- 1604), செனரதன் ( 1604-1635) ஆகியோருக்கு எதிர்மன்னசிங்க குமாரன் தென்னிந்தியாவில் இருந்து படை மற்றும் ஆயுத உதவிகளை
யாழ்ப்பாண அரசின் வழியாகச் செல்ல அனுமதித்துக் கண்டிய அரசைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளே யாழ்ப்பாண அரசின் மீது போர்த்துக்கேயர்களுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியது என்பது வரலாற்று
ஆய்வாளர்களின் மற்றொரு கருத்து.
சிங்கள அரசுகளுக்கு யாழ்ப்பாண அரசு அவற்றின் பாதுகாப்புக்கு காலத்துக்குக் காலம் உதவி அளித்தமைக்கு 1545 இன் பின் 1ம் சங்கிலி மன்னன் போர்த்துக்கேயருக்கு எதிராக சீதவாக்கை, கண்டி, கோட்டை அரசுக்களுடன் இணைந்து போரிட்ட வரலாறும், போர்த்துக்கேயரை ஆதரித்த புவனேகபாகுவுடன் நேரடியாகப் போரிட்ட வரலாறும் சான்றாகின்றன. கூடவே 1552இல் புவனேகபாகு இறக்க அவனின் மகள் வழிப்பேரனான தர்மபாலன் ஆட்சிக்கு வந்த பொழுது அவனது தந்தையான விதியப்பண்டார போர்த்துக்கேய ஆட்சியை ஏற்க மறுத்து புத்தரின் புத்ததந்ததாதுவுடனும் விலையுயர்ந்த பொருட்களுடனும் யாழ்ப்பாண அரசுக்கு வந்து அரசியல் புகலிடம் கோரி வாழ்ந்தான்.
ஆயினும் விபத்தொன்றில் விதியப்பண்டார மரணமடைய அவனுக்கு மரியாதை அளித்து 1ம் சங்கிலி மன்னனால் நல்லூர் இராசதானியின் வடவாசலில் கட்டிய ஆலயமே பூதவராயர் ஆலயம். 1560இல் யாழ்ப்பாண அரசு மேல் போர்த்துக்கேயர் மேற்கொண்ட 1ம் படையெடுப்பில் இவ்வாலயம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டதும் அவர்கள் புத்ததந்தத்தைப் பொடிப்பொடியாக்கி நீர்நிலைகளில் கரைத்தனர் என்பது
வரலாற்று ஆய்வாளரான முனைவர் சி.க.சிற்றம்பலம் அவர்களின் “ யாழ்ப்பாண இராச்சியம்” நூலின் 70-71ம் பக்கங்களில் உள்ள செய்தியாக உள்ளது. இவைகள் யாழ்ப்பாண அரசு சிங்கள அரசுக்களுக்கும் பாதுகாப்பும் சிங்கள மன்னருக்கு அரசியல் புகலிடமும் தனக்கு ஆபத்து ஏற்படும்
என்னும் நிலையிலும் அளித்தமைக்கு வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.
இதனாலேயே பிரித்தானியக் காலனித்துவ அரசு இலங்கைக்குச் சுதந்திரம் அளிக்கவென நியமித்த சோல்பரி ஆணைக்குழுவுக்கு அளித்த அறிக்கையில் தமிழர்கள் நாட்டின் தொன்மைமிகு குடிகள் மட்டுமல்ல சிங்களவர்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவியவர்கள் எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
மேலும் 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம் திகதி சிங்கள பௌத்த பேரினவாத அரசு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழர்களின் மொழியுரிமையைப் பறித்தது. இதனை எதிர்த்து காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தினை சிங்கள பௌத்த பேரினவாத அரசு வன்முறையைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடாத்திக் கலைத்ததும் அல்லாமல் கொழும்பில் தொடங்கி கல்ஓயா அம்பாறை பகுதிவரை வன்முறைத் தாக்குதல்களை வளர்த்துச் சென்று 150 அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் குடித்தனர்.
அந்த வகையில் தமிழர்களின் சனநாயக சாத்வீகப் போராட்டங்களை இனஅழிப்பின் மூலம் முறியடிக்கும் அரசியல் வன்முறைக் கலாச்சாரத்தையும் அரச பயங்கரவாதத்தை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழர்களை ஒடுக்கி அழிக்கும் கருவியாக்கும் தந்திரோபாயத்தையும் தொடக்கி வைத்து இன்றுடன் 63 ஆண்டுகள் ஆகின்றன எனவும் கூறலாம்.
அதேவேளையில் சிங்கள மொழியினையும் பௌத்தத்தையும் சிங்கள மக்கள் மறந்து துறந்து ஆங்கிலேயமொழி ஆங்கிலேயப் பண்பாடு கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சேர் பொன்னம்பலம் இராமநாதன், கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி போன்றவர்களும் யாழ்ப்பாண மாணவர் காங்கிரசும் தான் சிங்கள மக்களிடை அவர்களது மொழி பண்பாடு கலாச்சாரம் குறித் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க உழைத்தவர்களுள் முன்னணியில் நிற்கின்றார்கள் என்பதையும் இவ்விடத்தில் நினைவு கூரவேண்டியுள்ளது.
தமிழ்மொழியும் தமிழர்களும்தான் வரலாற்றில் சிங்கள மொழிக்கும் சிங்களப் பண்பாடு கலாச்சாரத்திற்கும் பாதுகாவலர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்களுள. ஆனால் சிறிதளவு கூட நன்றியில்லாது தமிழர்களை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் சிங்களவர்களுக்கும் சிங்களத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிரான பகைமைகளாகக் காட்டித் தமிழர்களைக் காலத்துக்குக் காலம் இனப்படுகொலைகளுக்கும் கலாச்சார இனஅழிப்புகளுக்கும் உள்ளாக்கி இலங்கைத் தீவின் அமைதியையும் வளர்ச்சியையும் சீர்குலைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைத்தீவு என்றுமே தமிழ் சிங்கள அரசுக்களின் தனித்தனி ஆட்சி மையங்களைக் கொண்டிருந்தது என்கிற வரலாற்று உண்மையை ஏற்பதன் வழியாகவே இலங்கைத் தீவில் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பச் செய்யலாம்.
மேலும் 1974 ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் தனது ஆயுதப்படைகளைக் கொண்டு கலாச்சார இனஅழிப்புத் தாக்குதல் மூலம் குழப்பி 11 உயிர்களைப் பறித்த அநீதிக்கு நீதி கேட்கவென பலவழிகளில் முயன்று வந்த தமிழ் மாணவர் பேரவையின் நிறுவனர்களில் ஒருவராகிய திரு பொன் சிவகுமாரன் அவர்கள் கோப்பாய் கிராமிய வங்கியில் இருந்து அவரைக் கைது செய்யவெனத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைத் தாக்க முயல்கையில் அந்தப் பொலிஸ் அதிகாரி தன்னுடைய மனைவி இறந்து விட்டதாகவும் தன்னைச் சுட்டுத் தன்னுடைய 3 சிறுகுழந்தைகளையும் ஆதரவற்றவர்களாக்கி விட வேண்டாம் என்று கெஞ்சியதை மனிதாபிமானத்துடன் ஏற்று அந்தப் பொலிஸ் அதிகாரியைச் சுடாது தான் தன்னிடமிருந்த சயனைட்டைக் கடித்து உயிர்தியாகம் செய்தும் இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ்ப்போராளிகளை பல கேவலமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கும் உலகுக்கு உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு தமிழ்ப்போராளியும் மனிதாயத்தினையும் மனிதமாண்பையும் போற்றி மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக மட்டுமல்ல மனிதகுலத்தின்
மாண்புக்காகவும் மனிதாயத்திற்காகவும் தங்களை ஆகுதியாக்கிய வரலற்றின் தொடக்கமாகத் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் பிறர்வாழத் தன்னுயிர் தந்திடும் உயிர்த்தியாகம் இலங்குகிறது.
1972இல் சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசை தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தி சிறுபான்மையினத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் சோல்பரி அரசியல் அமைப்புத் திட்டத்தின் மூலம் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளமன்ற ஆட்சிpயில் பங்கேற்பதற்கு அளித்த அரசியலமைப்பின் 29(2) வது பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்களை நாடற்ற தேச இனமாக்கினார்.
அதனை அடுத்து 11.01.1974இல் கலாச்சார இனஅழிப்பை யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் நடாத்தித் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிப்பதும் அல்லாமல் அவர்களின் மொழி பண்பாடு கலாச்சாரம் வாழும் உரிமை அனைத்தையுமே இன்று வரை பல்வேறு
வழிகளில் இனஅழிப்பு நோக்கில் அழித்து வருகின்றனர்.
படைபலம் கொண்டு தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை அகதிகளாக்கி அவர்களின் பாதுகாப்பையும் அனைத்து வளர்ச்சிகளையும் தடுத்து வரும் நிலையில் தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை கொண்டு அவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க உலக அரசுக்கள் உதவுவதன் வழியாகவே அவர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி என்கிற அடிப்படை பிறப்புரிமைகளை அவர்கள் அனுபவிக்கும் பாதுகாப்பான அமைதியான ஆட்சியில் அவர்களை வாழவைக்க முடியும்.
இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட மக்கள் உண்மையான உள்ளத்துடனும் உறுதியுடனும் உழைப்பதே அவர்கள் தங்கள் தாயகத்திற்கும் தாய்மொழிக்கும் செய்யும் கடமையாக அமைய முடியும்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கையினுடைய வளங்கள் தேவை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார்.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் வரைக்கும் உள்ள காணிகள், கடல் வளங்கள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை – அட்டாளைச்சேனையில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான கனட தூதுவர் டேவிட் மக்னொன் இன்று(05) தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா நாட்டு தூதுவர் டேவிட் மக்னொன், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கட்சியின் செயலாளர் இரா.சங்கையா மற்றும் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பு தொடர்பில் வீ.ஆனந்தங்கரி கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய சந்திப்பில் தமிழ், இஸ்லாமிய சமூகங்களிற்கிடையில் நல்லிணக்கம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பில் அவர் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
சிறுபாண்மை சமூகங்களிற்கிடையில் இவ்வாறான ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை அவர் விரும்புவதாகவும் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் இஸ்லாமிய இனங்களிற்கு இடையில் நல்லிணக்கம், ஒற்றுமை காணப்பட வேண்டும் என அவர் தெரிவித்ததாக வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு தலைமைதாங்கிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் அமைந்துள்ள இக்கடித்தில், இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும், இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலினிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத்தீவு தொடர்பான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை அரசையே மையமாக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிறிலங்கா ஆடசியாளர்களுடன் உறவாடித் தமது நலன்களை அடைந்து கொள்ள
முடியும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கின்றார்கள். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிங்கள அரசுக்கு சார்பாக அமைந்து விடுவதற்கு இது வாய்பளிக்கின்றது.
தங்களது தலைமையில் இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதன் மூலம் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் செயற்படுவதற்கு தாங்கள் வழிகாட்ட வேண்டும் என தங்களிடம் தோழமையிடன் வேண்டிக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை – வெள்ளாங்குளம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகை காணிகளை சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் கையாடல் செய்ய முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.
இந்தக் காணிகளை போரால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்குவது என எட்டப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெளிவுபடுத்தினார்.
1994இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2008இற்குப் பின்னர் இவை இராணுவத்தினர் வசம் இருந்ததையும் சபையினர் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். குறித்த 275 ஏக்கர் காணியை போரால் கணவனை இழந்த பெண்கள், மற்றும் முன்னாள் போராளிகளுக்கு பகிர்ந்தளித்துவிட்டு, வன இலாகா திணைக்கள அதிகாரத்தின் கீழ் இருக்கும் காணிகளை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறும் கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய கவர்னராக முன்னாள் தெற்கு முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்விஜயலால் சிறிலங்கா ஜனாதிபதி அவருக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னராக கிழக்குமாகாண ஆளுநராக இருந்து பதவி விலகிய
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புயாவின் இடத்திற்கு இவர் நியமியப்பட்டுள்ளார்.