எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஷி நேற்று (17) திங்கட்கிழமை காலமானார்.
வழக்கிற்காக நேற்று கெய்ரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மொஹமட் முர்ஷி இருபது நிமிடங்கள் சட்டத்தரணிக்கு முன்னால் பேசியவுடன் திடீரென உபாதைக்குள்ளாகி மயக்க முற்றார். உடனடியாக கெய்ரோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இவருக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சைப் பலனின்றி மொஹமட் முர்ஷி உயிரிழந்தார்.
எகிப்பதில் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் 2010 இல் நடத்தப்பட்ட தேர்தலின் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மொஹமட் முர்ஷி, 2013 இல் இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். ஆறு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவர், அடிக்கடி வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. நேற்றைய தினம் வழக்குக்குச் சென்று சட்டத்தரணி முன்னால் பேசிய பின்னரே மயக்கமுற்று மரணமடைந்தார்.
அமெரிக்காவில் அயோவா மாநிலத்திலுள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திர சேகர் சுங்காரா அவரது மனைவியான 41 வயதுடைய லாவண்யா சுங்காரா மற்றும் 15 வயது மற்றும் 10 வயதுள்ள அவர்களது இரு மகன்களும் வசித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த 4 பேரும் அவர்கள் வசித்த வந்த வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்த நிலையில், அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில்,இவ்வாறு அவர்களை சுட்டுக் கொன்றது யார்? எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என இதுவரை தெரியவராதபோதிலும் இதுகுறித்து தொடர்ந்து அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பார்வையற்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் அவுஸ்திரேலியாவில் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டதற்காக ஐ.நா. கடுமையான கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, அவரை உடனடியாக விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேற்படி அகதி கண்பார்வையற்றவர் என்பதுடன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரை 9 வருடங்கள் தடுத்து வைத்திருப்பதனால் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது. குறிப்பிட்ட அகதியை விடுதலை செய்வதுடன் அவருக்குரிய நஸ்ட ஈட்டையும் வழங்க வேண்டும் என்று ஐ.நா கோரியுள்ளது.
2010 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். அதன் போது அவருக்கு 27 வயது. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தத்தின் போது சித்திரவதைகள் உட்பட மனித உரிமை மீறல்களுக்கு ஆளானதால் குமார் அவுஸ்திரேலியா சென்றார்.
கண்பார்வையற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை கடந்த 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது சர்வதேச சட்டங்களுக்கு முரணானதாகும். இதனால் அவரை விடுதலை செய்வதே முறையான செயலாகும் என ஐ.நா. அறிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்ததாக கைதான பலர் விடுவிக்கப்பட்டபோதும், இறுதிப் போருக்கு முன்னர் கைதான பலர் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.
இறுதிப் போரின் போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் 12ஆயிரம் பேரில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், விளக்க மறியலில் உள்ளவர்களும் விடுவிக்கப்படாமல் இன்னும் சிறையிலேயே உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றும் போது, நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவர் பற்றி குறிப்பிட்டார்.
வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சட்டத்திற்கு முரணானதாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணியினரின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர் ஒருவர், வடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொடர்பாக பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா குழு என்பது ஆயுதக்குழுவாகும். ஆயுதக்குழுவை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டம் ஒழுங்கு முரணாகும். ஆவா குழுவை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள், அதன் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்திற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகள் என்பவற்றுக்கிடையில் தற்போது இந்தியப் பிரதமர் அவசரமாக சிறீலங்கா வந்து சென்றுள்ளது பல அரசியல் கருத்துருவாக்கங்களைத் தோற்றுவித்துள்ளது.
இந்தியப் பிரதமரின் பயணம் பூகோள அரசியல் நலன்சார்ந்தது என்பது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் அமெரிக்காவுடனான பொருளாதார போரை சமாளிக்கும் வழிகளைத் தேடுகின்றது சீனா. அதன் முதற் கட்டமாக ரஸ்யாவுக்குச் சென்ற சீனா அரச தலைவர் பூட்டினின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன், சீனாவுக்கும் ரஸ்யாவுக்குமிடையான வர்த்தகத்தையும் 2020 ஆம் ஆண்டு இரு மடங்காக அதிகரிப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். அதாவது 200 பில்லியன் டொலர் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம்.
அதேசமயம் இந்தியாவின் ஆதரவையும் தம்முடன் இணைத்துக்கொள்ள சீனா மற்றும் ரஸ்யா முற்படுவதாகவும், இந்த வாரம் இடம்பெறும் சங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் அதற்கான நிலை எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்குலகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணிக்கு இணையாக சீனாவினால் உருவாக்கப்பட்டதே இந்த கிழக்கு பிராந்திய நாடுகளின் கூட்டணி.
இந்தியாவையும், ரஸ்யாவையும் இணைக்கும் சீனாவின் முயற்சி வெற்றிபெற வாய்ப்புக்கள் உள்ளதாகவே ஹொங் ஹொங்கைத் தளமாகக் கொண்ட லிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் சாங் போகி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு கடந்த 30 வருடங்களாக வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகைகளை டொனால் டிறம் அரசு நீக்கியது இந்தியாவின் இந்த மாற்றத்திற்கான காரணமாக கூறப்பட்டாலும், தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்கா நுளைவதை இந்தியா விரும்பப்போவதில்லை என்பதே உண்மை. அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாக் கொள்கைவகுப்பாளர்களின் கருத்து.
ரஸ்யாவின் மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக சீனா உள்ள அதேசமயம், சீனாவின் பிரதான எரிபொருள் வினியோகஸ்த்தராக ரஸ்யா உள்ளது. எனவே தமது பங்கு முறிகளை சீன நாணயத்தில் மேற்கொள்வதற்கு ரஸ்யாவின் 15 இற்கு மேற்பட்ட வங்கிகளும், நிறுவனங்களும் விரும்பம் தெரிவித்துள்ளதுடன், டொலரின் பாவனையை குறைப்பதற்கு சீனாவும், ரஸ்யாவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுவளமாக சீனாவின் படைத்துறையையும், பொருளாதாரத்தையும் முடக்குவதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பொருளாதாரப்போர் ஒருபுறம் உக்கிரம் பெற்றுவரும் அதேசமயம், அதிக வளர்ச்சி கண்டுவரும் சீனாவின் கடற்பலத்தை முடக்குவதற்கு இந்துசமுத்திரப் பிராந்தியத்தை குறிவைத்துள்ளது அமெரிக்கா.
அதுவே மகிந்தாவின் வெளியேற்றத்திற்கும், சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குமான காரணம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான மேற்குலகத்தின் பொம்மை அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார் தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன. மகிந்தாவுக்கு ஆதரவாக அவர் மாறியதன் பின்னனியில் இந்தியாவே உள்ளதாக நம்பப்படுகின்றது.
ஆனால் இந்தியாவுக்கு படைத்துறை ரீதியாக மேற்கொள்ளும் உதவிகள் மூலம் தனது நகர்வுகளை சுலபமாக்க அமெரிக்கா முற்படுகின்றது. எனவே தான் அப்பாச்சி வகை தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் ஆளில்லாத விமானங்கள் என்பவற்றை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.
இந்த பூகோள மோதல்களிற்கு இடையே சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் தொடர்பிலும் இந்த நாடுகள் தமது கவனத்தைச் செலுத்த தவறவில்லை. இதனால் சிறீலங்காவின் நிலமை தற்போது மேலும் மோசமாக்கியுள்ளது. சிறீலங்காவில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் முயற்சிகளை அமெரிக்காவும், இந்தியாவும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டன.
எனவே தான் கோத்தபாய ராஜபக்சா மீதான வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ரணில் அரசின் பொருளாதரத்தின் மீது மேற்குலகம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகைகளை மீண்டும் வழங்கிய ஜரோப்பிய ஒன்றியம், தற்போது பயண எச்சரிக்கைகளையும் அவசரமாக நீக்கியுள்ளது. சிறீலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 29 விகிதமானவை ஐரோப்பிய நாடுகளுக்கானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதாவது ஏப்பிரல் 21 ஆம் நாள் இடம்பெற்ற குண்டு வெடிப்பும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளும், முஸ்லீம் அமைச்சர்களின் ஒட்டுமொத்த பதவி விலகலும் சிறீலங்காவில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்திற்கானதும் அதற்கு எதிரானதுமான போராட்டங்களின் விளைவுகள் ஆகும்.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலின்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், தற்போது முஸ்லீம் மக்களின் வாக்குகள் ஒரு அணியில் சேர்ந்துள்ளதாகவும், அதனை கைப்பற்ற தற்போதைய ரணில் அரசு முற்படுவதாகவும் சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கூற்றை உறுதிப்படுத்துவது போலவே அவர் கருத்து வெளியிட்ட நாளுக்கு மறுநாள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் முஸ்லீம் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்த பின்னரே ஜரோப்பிய ஒன்றிய துர்துவர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
அதாவது மேற்குலகம் தனக்கு சார்பான அரசு ஒன்றை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இந்தியாவும் தனக்கு சார்ப்பான அரசு ஒன்றை தெரிவு செய்வதற்கான பணியை ஆரம்பித்துவிட்டது, அதற்காகவே மோடி அவசரமாக சிறீலங்கா வந்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு அழைத்ததன் பின்னனியும் அதுவே.
ஆனால் சிறீலங்காவின் அரசியல் நகர்வுகளை துல்லியமாக எடைபோட்டு தமக்கான ஒரு பாதையை உருவாக்க வேண்டிய தமிழ் இனம் அமைதியாக இருப்பது என்பது தமிழ் மக்களிடம் உருவாக்கியுள்ள ஒரு அரசியல் வெற்றிடமாகவே பார்க்க முடியும்.
சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரசியல் மாற்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபைவரை எதிரொலிக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலின் முடிவில் தான் ஐ.நா மனித உரிமை அமைப்பின் முன் நாம் மேற்கொண்டுவரும் நீதிக்கான போராட்டத்தின் நீட்சியும், திருப்பமும் தங்கியுள்ளது.
எனவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்து தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிதுடன் அதற்கான தயார்படுத்தல்களை தமிழ் மக்களிடம் தற்போதே ஆரம்பிக்கவும் வேண்டும்.
மகிந்த ராஜபக்சா அரசோ அல்லது ரணில் அரசோ தமிழ் மக்களுக்கு எந்தவித நம்மைகளையும் வழங்கப்போவதில்லை என்பதுடன், மாறி மாறி ஆட்சி அமைக்கும் எல்லா அரசுகளும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை மேற்கொண்டே வருகின்றன.
எனவே அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுப்பதை நிறுத்துவதா? அல்லது தமிழர் ஒருவரை தேர்தலில் நிறுத்தி அவருக்கு வாக்களிப்பதன் மூலம் வாக்களிக்கும் உரிமைகளை தக்கவைக்கும் அதேசயம் சிறீலங்காவின் தேர்தலை முற்றாக புறக்கணிக்கும் நிலையை நாம் உருவாக்குவதா? என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் எம்மை தொடர்ந்து ஏமாற்றும் மேற்குலகத்திற்கும், பிராந்திய வல்லரசுகளுக்கும் நாம் ஒரு காத்திரமான செய்தியை பதிவுசெய்ய முடியும், ஏனெனில் கடும்போட்டியாக மாறப்போகும் தென்னிலங்கை தேர்தலில் அரச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குகள் சிறுபான்மை மக்களுடையதாகவே இருக்கும் எனக் கருதப்படுகின்றது.
எனவே தான் இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு அழைக்க, ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லீம் மக்கள் மீது பாசத்தை காட்டுகின்றது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஈரோட்டை சேர்ந்த முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஆவணப்படம் ஒன்றை சென்னையில் வெளியிட்டார். இதனையடுத்து அதற்கு அடுத்தநாள் இரவே எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்ல வந்தவர் திடீரென மாயமானார்.
அதன்பின் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பொதுமக்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் முகிலனை கண்டுபிடிக்க தொடர் கோரிக்கை வைத்தனர். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
முகிலன் மாயமாகி 4 மாதங்கள் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காணப்படும் 454 வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களில் 137 விண்ணப்பங்கள் முஸ்லிம்களின் விண்ணப்பப் படிவங்களாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்க்பபடும் விண்ணப்பதாரிகளை நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தி தரமானவர்களை நியமிக்க வேண்டும் என்பது நடைமுறையாகும்.
இதற்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக சமர்ப்பித்த விண்ணப்பங்களிலிருந்து முதல் கட்டமாக 454 பேரை நேர்முகப்படுத்த கல்வியமைச்சிற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் முகாமைத்துவ உதவியாளர் பணிநிலை தவிர்ந்த ஏனைய பணிநிலைக்காக 137 முஸ்லிம் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபார்சு செய்த பெயர்ப்பட்டியலில் காணப்பட்டுள்ளது.குறித்த விடயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பு ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் இதனைத் தெரிவித்துள்ளார். அதேவேளை இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம்,
நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம். அதேபோன்று எனது மாவட்ட மக்களும் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆகவே கட்சியும், அரசும் குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாயின் மீண்டும் பதவியைப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.எனது மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து மீண்டும் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்,
எமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், மீண்டும் பதவியேற்குமாறு பல தரப்பினரிடமிருந்தும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
“நாங்கள் பதவி விலகும்போது அரசாங்கத்துக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்த கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவிலலை. குறிப்பாக எம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு மாதகாலத்துக்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும்.
அத்துடன், குருணாகல், மினுவங்கொடை பிரதேசங்களில் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதுடன் நஷ்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.
அதேபோன்று இனவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட 450க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறு சிறு காரணங்களுக்காக முஸ்லிம் மக்கள் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்க முடியாதவகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.
வெறுப்பூட்டும் வகையில் பேசுவதற்கு எதிராக சட்டம் நிலைநாட்ட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம். இவை எதுவும் இன்னும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.