Home Blog Page 2754

முஸ்லிங்களின் வியாபாரத்திற்கு தடை;பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றிற்கு அழைப்பு

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து எழுத்துமூலம் அறிவித்துள்ள வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் உட்பட ஆறு பேருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி மாரவில நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கே. வி. சுசந்த பெரேரா (பொதுஜன பெரமுன) கடந்த 24ஆம் திகதி தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இந்த அறிவித்தலில் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வருவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு அறிவித்திருக்கிறார்.

எழுத்து மூலமான இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரி திலின ஹெட்டியாராச்சி, தமது உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்தாலோசித்து நீதிமன்றத்தை நாடுவதென முடிவு செய்துள்ளனர்.

இதன்படி மாரவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்தனர். வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் இக்கடிதம் தொடர்பில்விளக்கம் கோருவதற்காக பிரதேச தலைவர் உட்பட ஆறுபேரை எதிர்வரும் 28ஆம் திகதி மாரவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கே..வி. சுசந்த பெரோவிடம் கேட்டபோது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்தன. இதன்படி முஸ்லிம் வர்த்தகர்கள் வாராந்த சந்தைக்கு வருவதை பிரதேசத்திலுள்ள மதத் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் சக வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதன்படியே தற்காலிகமாக முஸ்லிம் வர்த்தகர்களை வாராந்த சந்தைக்கு வருவதை தடை செய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததாகவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ வாராந்த சந்தைக்கு வரவில்லை. அவர்களை பொலிஸாரே மீண்டும் அழைத்து வந்தனர். இதன் காரணமாக சில பிரச்சினைகள் தோன்றின. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு அமையவே முஸ்லிம் வர்த்தகர்களை தற்காலிகமாக வருவதை தடுக்குமாறு எழுத்து மூலம் அறிவித்தேன்.

இவ்வாறான தீர்மானம் தற்காலிகமாக எடுக்கப்பட்டதொன்று. எதிர்வரும் ஜூலை மாதம் அனைத்து மதத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் ஆகியோரை அழைத்து ஒரு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல சபை அமர்விலும் பேசப்படும். இதன்போது நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியும். ஒரு பாரிய மோதலை தடுப்பதற்காகவே நான் இதனை செய்தேன். எனக்கு கிடைத்த கடிதங்கள் அனைத்தையும் என்னால் காண்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.65294152 10219776916681815 1656434101403516928 n 0 முஸ்லிங்களின் வியாபாரத்திற்கு தடை;பிரதேச சபைத் தலைவர் நீதிமன்றிற்கு அழைப்பு

இதேவேளை வென்னப்புவ பிரதேச சபையின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் சபைத் தலைவரின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என வென்னப்புவ பிரதேசத் சபை எதிர்க் கட்சித் தலைவர் ஷிரோன் பெர்னாந்து தெரிவித்தார்.

பல வருடங்களாக இந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். சிறிய அளவிலேயே அவர்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இந்த வர்த்தகம் தொடர்பில் இந்த மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒருசிலர் மட்டுமே இதன் பின்னணியில் இருக்கின்றனர். இவர்களின் வலையில் பிரதேச சபைத் தலைவர் விழுந்துள்ளார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வென்னப்புவ பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்ஜகத் பிரியங்கர தெரிவிக்கையில், இந்த தீர்மானம் வென்னப்புவ பிரதேச சபையின் தீர்மானமல்ல. கடந்த திங்களன்று பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய வந்தபோது அங்கு ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே தற்காலிகமாக தலைவர் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்த வர்த்தகர்கள் அப்பாவிகள். இவர்களை சந்தைக்கு வரவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. என்றாலும் சந்தைக்குள் இருக்கும் பெரும்பாலான வர்த்தகர்கள் இவர்கள் வருவதை விரும்பவில்லை. இவர்களை வரவிடவேண்டாம் என்று தெரிவிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், வென்னப்புவ பிரதேச சபையின் தலைவரின் தீர்மானம் கட்சியின் தீர்மானமல்ல. அவரது செயல் மனித உரிமைகள் மீறும் செயலாகவே நான் கருதுகின்றேன். இது தொடர்பாக கட்சிக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவருடனும் பேசிய பின்பு எழுத்து மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட கடிதத்தை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் இந் நடவடிக்கையை ஜேவிபியின் புத்தள மாவட்ட இணைப்பாளர் அஜித் கிஹான் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

அலுவலகங்களுக்கு முகம் மூடாத ஆடைகளுடன் செல்லாலாம் – சிறிலங்கா அமைச்சரவை

முகத்தை மாத்திரம் மூடாமல்   மத  ரீதியிலான   ஆடைகளை  அணிந்து அரச அலுவலகங்களுக்கு    செல்ல முடியும் என்று  அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அரச அலுவலகங்களுக்கு அண்மையில் சுற்றுநிருபம்  வெளியிடப்பட்டிருந்தது. அதில்  பெண்கள்  சேலையும் ஆண்கள் முழுமையான உடையும் அணிந்து செல்ல வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கு எதிராக  பல்வேறு தரப்பினரும்  குரல் எழுப்பியிருந்தனர்.   இதனையடுத்தே  பொது நிர்வாக அமைச்சர்  ரஞ்சித் மத்தும பண்டார  நேற்று   புதிய அமைச்சரவைப் பத்திரத்தை   அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதில் முகத்தை  மூடாமல்   மத ரீதியிலான   ஆடைகளை   அணிந்து  அலுவலகங்களுக்கு செல்வதற்கான  அனுமதியும்  வழங்கப்பட்டுள்ளது.  இந்த  அமைச்சரவைப் பத்திரம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நஞ்சூட்டல் காரணமாக மலேசியாவில் நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டன.

அந்த மாநி­லத்தில் தொழிற்­சா­லைகள் அமைந்­துள்ள வல­ய­மான பஸிர் குடாங்  பிராந்­தி­யத்­தி­லுள்ள 15 பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்கள் 75 பேர்  சுவாசப் பிரச்­சி­னைகள், வாந்தி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து  வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து அந்தப் பிராந்­தி­யத்­தி­லுள்ள பாட­சா­லை­களை  நாளை வியா­ழக்­கி­ழமைவரை மூட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் மாண­வர்­க­ளுக்கு எதனால் நஞ்­சேற்றம்  ஏற்­பட்­டது என்­பதைக் கண்­ட­றிய அதி­கா­ரிகள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஆறொன்றில் சட்­ட­வி­ரோ­த­மாக கொட்­டப்­பட்ட 40 தொன்­னுக்கும் அதி­க­மான இர­சா­யனக் கழி­வு­களால் பெரு­ம­ளவு சிறு­வர்கள் உட்­பட சுமார் 4,000 பேர் சுக­வீ­ன­முற்­றி­ருந்­தனர். இந்­நி­லையில்  அந்த சம்பவத்துக்கும் பிந் திய சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேற்படி மாணவர்கள் சுகவீனமடைந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் சூளுரைத்துள்ளார்.

ஈரான் மீதான தடை அமெரிக்காவின் மோசமான செயல்: ரஸ்யா

ஈரான் தலைவர் அயோதொல்ல அலி மற்றும் படை அதிகாரிகள் மீதான அமெரிக்காவின் தடை மிகவும் மோசமான செயல் ஆனால் நாம் ஈரானுக்கு உதவியாக நிற்போம் என ரஸ்யா நேற்று (25) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதி நவீன உளவு விமானத்தை கடந்த வாரம் ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து ஈரானின் அதிபர் மற்றும் படை அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியகிழக்கு நாடுகளின் உறுதித்தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல உலகின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது. ஆனால் நாம் ஈரான் மக்களுக்கும் அதன் அரசுக்கும் உறுதுணையாக நிற்போம் என ரஸ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரானினால் சுடப்பட்ட அமெரிக்க விமானமானது ஈரானின் வான்பரப்பிலேயே பறந்ததாக ரஸ்யாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலை ரஸ்யா ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளது.

தொடரும் இந்திய அரசின் வன்முறை- நளினியை நீதிமன்றில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள நளினியை ஜுலை 5ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகளின் திருமணத்திற்காக நளினி 6 மாதங்கள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவரே வாதிட வசதியாக அவரை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து,  இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், நீதிமன்றில் ஆஜராக விரும்பும் ஒருவரை இவ்வாறு தடுக்க முடியாது. எனவே அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக வீடியோ சந்திப்பின் மூலம் சந்திக்க ஒழுங்குபடுத்தி தருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள் எதிர்வரும் ஜுலை 5ஆம் திகதி பி.ப.2.15 மணிக்கு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டதுடன், 50 காவலர்களை அழைத்து அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் இந்த வழக்கின் நீதிபதிகளாக பணியாற்றினர்.

வட இந்தியர்களுக்கு ஒரு நீதியும்இ தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் எனச் செயற்பட்டுவரும் இந்திய அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைத்துவரும் அநீதி மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளின் இந்த நூற்றாண்டின் உதாரணமாக நளினி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான்கானுக்கு ஒரு நீதியும்இ தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் உள்ள இந்திய ஒன்றியத்தில் தற்போது தமிழகம் பிரிவினையை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இணையதள வசதி

பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான இணையதள ஒழுங்கினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவும், வாய் மூலமாகவும், காணொளி மூலமாகவும் இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம் என அறிய முடிகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோன்று பொலிசார் தொடர்பான சிறு தவறுகளைக்கூட தமது கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தாம் செய்த முறைப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும் பொது மக்கள் அறிய முடியும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

முறைப்பாடு சமர்ப்பிக்கும் போது வழங்கப்படும் குறியீட்டை 1960 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதனை அறிந்து கொள்ளலாம் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

வடபகுதியில் சிறீலங்கா காவல்துறையினர் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை மேற்கொள்வதும்இ தமிழ் சாரதிகளிடம் பணம் பறிப்பதும் அன்றாட நிகழ்வாக இருக்கின்றது. இது தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் முறைப்பாடுகளை சிறீலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் கருத்தில் கொள்வார்களா என்பதே தற்போதைய முக்கிய கேள்வி.

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் மீது குற்றவியல் விசாரணை

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மீது ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.

தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாததற்காகவே இவருக்கு  எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

சிறீலங்கா பிரதமருக்கும் அரச தலைவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியினால் புலனாய்வுத் தகவல்கள் புறக்கணிக்கப்பட்டதும், கொழும்பில் தாக்குதல்கள் இடம்பெற்றதும் நாம் அறிந்தவையே. ஆனால் தற்போது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தமிழர் தலைநகரில் புத்தருக்கு சிலை

திருகோணமலை தெவனிபியவர விகாரைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜுலை மாதம் 07ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இங்குள்ள ஸ்ரீ இந்திராராம விகாரையில் 25அடி உயரமான புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலையை திறந்து வைப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன அங்கு செல்கின்றார்.

மொரவெவ பிரதேச சபையின் தவிசாளரும் இந்திராராம விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.

கடந்த சில காலங்களாக தமிழர் பிரதேசங்களில் ஜனாதிபதி விஜயம் செய்யும் போது, ஒவ்வொரு புத்தர் சிலையையோ, அல்லது சிங்களவர்களுக்கு சாதகமான குடியிருப்பையோ, அல்லது ஏதாவது ஒரு அபிவிருத்தியையோ மேற்கொள்வது வழமையானதொன்றாகி விட்டது. இது எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரதேசங்களில் சிங்களவர்களும் குடியிருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செயலின் நோக்கமாகவும் இருக்கலாம்.

சகாதேவனை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை செய்துள்ளது – அருட்தந்தை சக்திவேல்

முத்தையா சகாதேவன், இயற்கையாக உயிரிழந்துள்ளதாக மரண அத்தாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவரை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கொலை செய்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பு குற்றஞ்சுமத்துகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், தமது வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை பிணையில் கூட விடுவிக்க முடியாத நிலையில் அந்த சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளமையினால், அந்த சட்டமானது மிகவும் பாரதூரமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், தம்மீதான நம்பிக்கையை இழந்து விரக்தியுற்ற நிலையில் உளரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கி நோய்வாய்க்கு உட்பட்டு, உயிரிழக்கும் நிலைக்கு அவர்களை அரசாங்கம் தள்ளுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டியது கட்டாயம் என சர்வசேத சமூகம் வலியுறுத்தி வருகின்ற பின்னணியில் கூட அதனை நீக்காது தொடர்ச்சியாக அந்த சட்டத்தை அமுல்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம் ஒரு பயங்கரவாத அரசாங்கம் என அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்துகின்றார்.

முத்தையா சகாதேவன் உயிரிழப்பு ; இலங்கை அரசே காரணம் என குற்றச்சாட்டு – பிபிசி

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இன்று சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பலர் மீது இன்றும் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான கொழும்பைச் சேர்ந்த முத்தையா சகாதேவன் சுகயீனமுற்ற நிலையில், கடந்த 22ஆம் தேதி சிறைச்சாலையிலேயே உயிரிழந்திருந்தார்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த 20 தினங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே முத்தையா சகாதேவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த கொலையை செய்ததாக அப்போதைய அரசாங்கம் குற்றஞ்சுமத்தியிருந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முத்தையா சகாதேவன், பாதுகாப்பு பிரிவினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2005ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

லக்ஷ்மன் கதிர்காமரின் வீட்டிற்கு அயல் வீட்டில் பணியாற்றிய முத்தையா சகாதேவன், தான் பணிபுரிந்து வீட்டிலுள்ள மரமொன்றின் கிளையை வெட்டி, துப்பாக்கி சூட்டை நடத்துவதற்கு துப்பாக்கித்தாரிக்கு உதவிகளை வழங்கியதாகவே குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட முத்தையா சகாதேவன் மீது 2008ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கு விசாரணைகள் கடந்த 14 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே தனது தந்தை உயிரிழந்ததாக அவரது மகள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

எந்தவித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாத நிலையில், முத்தையா சகாதேன் சிறைச்சாலை சீருடையின்றி, சாதாரண உடைகளை அணிந்த வண்ணமே இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது தந்தையை விடுதலை செய்துக் கொள்வதற்கு அரசாங்க தரப்பினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி உரிய முறையில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.