Home Blog Page 2721

கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

யுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ்விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக இடம் பெற்றுவருகின்றது.kanniya 2 கன்னியாவில் கரடியாக புகுந்த பிக்குகள் ; ஆடி அமாவாசையில் சம்பவம்

இதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன்  அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது  தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் இடம் பெற்றது.

இதேவேளை இப்பகுதியில்  போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர்களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலை வெளியிட்டனர்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க, ஐரோப்பிய சதி – விஜேதாச ராஜபக்ஸ

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் ஹம்பாந்தோட்ட – சீன துறைமுக ஒப்பந்தத்தின் விளைவாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ள இந்த உடன்படிக்கையை நீக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த குண்டுத் தாக்குதலுக்கு இந்நாட்டிலுள்ள பயங்கரவாதிகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த தாக்குதல் அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் ஒரு சதியே ஆகும். அந்த நாடுகள் இந்த சீன உடன்படிக்கை குறித்து அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும் எனவும் அந்த நாடுகள் கூறியிருந்தன.625.500.560.350.160.300.053.800.900.160.90 1 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க, ஐரோப்பிய சதி - விஜேதாச ராஜபக்ஸ

இதனையடுத்தே இனவாத கலவரம் இந்த நாட்டில் ஏற்பட்டது. இந்த அனைத்தும் ஹம்பாந்தோட்ட உடன்படிக்கையின் பிரதிபலனாகும். இந்த உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு ஒரு தடைக்கல்லாகும். இந்த துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்யும் போது வெளிநாட்டுக்கு இந்த நாடு செலுத்த வேண்டியிருந்த கடன் தொகை 60 பில்லியன் டொலராக காணப்பட்டது. விற்பனை செய்ததன் பின்னர் 85 பில்லியன் டொலர்களாக இந்த கடன் அதிகரித்துள்ளது. இந்த நாட்டை அழிப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நாட்டின் காணிகளை விற்பனை செய்வது ரணிலின் ஒரு பிரயத்தனம் ஆகும். மக்களின் காணிகளை கொள்ளையடிப்பது மத்திய வங்கியின் நிதி மோசடியைப் போன்று இலகுவானதல்ல என ரணிலுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் பிணையின்றி வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

சிறையில் மீனவர்களைச் சந்தித்த ஆனந்தி

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரினது விடுதலையைத் துரிதப்படுத்தவதற்காகவும் ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் நேற்று வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 7 பேரையும் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறும் போது,

கடந்த (27.07.2019) அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை முற்றுகையிட்ட இலங்கைக் கடற்படையினர் அதில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து இலங்கைக்குக் கொண்டுவந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை

பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில்  மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகிறது.

கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000-ம் ஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் நாட்டில் நிலவும் வறட்சியை மரங்களால்தான் எதிர்கொள்ள முடியும் என அந்நாட்டு அரசு தீர்க்கமாக நம்புகிறது. எனவே மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என பிரதமர் அபிய் அகமது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி ‘பசுமை மரபு’ என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நாட்டில் இருக்கும் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென பிரதமர் அபிய் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதன்படி ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இதில் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா 12 மணி நேரத்தில் 6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் போர், கலவரங்களில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி -ஐ.நா அறிக்கை

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிலவி வருகிறது. இத்தகைய நாடுகளில், கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தீவக கப்பல் பணியில் கடற்புலிகள்

யாழ்.குறிகாட்டுவானிலிருந்து தீவகங்களுக்கு செல்லும் கப்பல்களைச் செலுத்துவதற்கு தற்போதும் கடற்படையினரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்களுக்கு போதிய பயிற்சியளிக்காமையே இதற்கான காரணமாகும்.

இந்நிலையில் கடற்புலிகள் அணியிலிருந்த கப்பலோட்டிகளை சான்றிதழ் வழங்கி பணியில் அமர்த்த முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சமுத்திர பல்கலைக்கழக பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கட்கிழமை (29) யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மாகாணத்தில் உள்ள சமுத்திர பல்கலைக்கழகத்தின் உபகரணத் தேவைகள் தொடர்பாக மாணவர்களை இணைத்துக் கொள்வது பற்றியும் பணிப்பாளர் தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மேற்படி கோரிக்கையை தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சமுத்திர பல்கலைக்கழக பணிப்பாளர் சமுத்திரா பல்கலைக்கழக பயிற்சிகள் மூலம் 50 அடிக்கு உட்பட்ட படகுகளையே செலுத்த முடியும் என்றும் அதற்கு மேலாக வடதாரகை, நெடுந்தாரகை போன்ற படகுகளை செலுத்துவதற்கு பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கடற்புலிகளில் இருந்த பலர் கப்பலை ஓட்டும் திறமையுடன் உள்ள போதும், அவர்களிடம் அதற்கான சான்றிதழ் இல்லை எனக் காரணம் காட்டி கடற்படையினரே தீவகப் படகுகளை செலுத்துகின்றதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கடற்புலிகளில் இருந்த கப்பலோட்டிகள் அணியை தந்தால், சான்றிதழ் வழங்கி தொழில் வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா? அவ்வாறு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவீர்களானால் கடற்புலிகளில் ஒரு அணியைத் தருகின்றேன் எனவும் சிறிதரன் கூறிய போது, அதற்கு பணிப்பாளர் அமைதியாக இருந்துள்ளார்.

இச்சமயம் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, இந்தக் குழுவிற்குத் தொடர்புபடாத விடயத்தை பேசி பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறி இந்தப் பேச்சை முடித்துக் கொண்டார்.

 

 

வல்லரசுகள் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் – கஜேந்திரகுமார்

வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித் துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க வேண்டும். அவ்வாறு இணங்குவது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தை அமுல்படுத்துமாறு கூற முன்னர் அந்த வல்லரசுகள் தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும்.

அப்படியானால் தான் தமிழ்மக்களுக்கு வல்லரசு நாடுகள் மீது நம்பிக்கையே வருமெனத் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை விடுத்து வெறும் ஒப்பந்தங்கள் மாத்திரம் செய்வதால் மாத்திரம் பயன் எதுவும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை(29) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்போன்று இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியா அல்லது சர்வதேச நாடொன்று மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாக வந்து எழுத்துமூலமான உறுதிமொழியை வழங்கும் பட்சத்தில் தாம் அவர்கள் கூறும் புதிய ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தயாரெனத் தமிழ்மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உங்கள் கருத்தென்ன? என ஊடகவியலாளரொருவர் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக இந்தியா கணித்துள்ள புதிய தரப்பு நாங்கள் சொல்லிவரும் விடயங்களுக்கு மேலதிகமாகப் புதிதாக ஒன்றையும் சொல்லவில்லை. ஒப்பந்தம் என்பது இலங்கை அரசுடனோ அல்லது சிங்களக் கட்சிகளுடனோ அல்ல. இவ்வாறான ஒப்பந்தங்கள் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படாதெனக் கடந்த எழுபது வருடகால அனுபவம் சொல்லுகிறது.

தமிழ் அரசியலைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்த நினைக்கும் தரப்புக்களுடன் தான் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால், அந்த ஒப்பந்தங்கள் என்ன அடிப்படையில் அமைய வேண்டு மென்பதைக் கூறாதது ஏன்? இங்கு தான் பிரச்சினையே காணப்படுகிறது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கையிலே ஒப்படைத்த எமது உறவுகளை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ‘சர்வதேசமே எமக்கு நீதி விசாரணை வேண்டும் நிலையான தீர்வு வேண்டும்’, ‘கையிலே ஒப்படைத்தவரை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?’ என்ற பலமான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ” பல வருடங்கள் கடந்தும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வராத நிலையில் நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் நாம் ஈடுபட்டுள்ளோம்.முல்லைத்தீவில் மரணடைந்த திரேசம்மா என்ற எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் இதுவரை 38 பேர் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மரணித்துள்ளனர்.38 பேர் இறந்த நிலையில் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் உடல் தளர்வுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இந்த நிலையில் தான் நாம் நீதியை கோரி நிற்கின்றோம்.

வவுனியாவில் மொத்தமாக 420 பேர் காணாமல் ஆக்கபட்டுள்ளனர். எனவே அவர்கள் காணாமல் ஆக்கபட்ட காலங்களில் பணியாற்றிய தளபதிகளிடம் விசாரணை நடாத்தினால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

diappe 1 கையிலே ஒப்படைத்த எமது உறவுகளை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில், தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள். எனவே இந்த விடயங்களை ஊடகங்கள் வாயிலாக சர்வதேச சமூகத்திற்கு கூற முனைகின்றோம்” என்று தெரிவித்தனர்

 

 

கைத்தொலைபேசி ஊடான தேர்தல் பிரச்சாரத்திற்கு சிங்களக் கட்சிகள் முயற்சி

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கைத்தொலைபேசி ஊடாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பரப்புரைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்கா மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

“எம்மால் முடியும்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொலைபேசி அப்ஸ் ஊடாக இந்த பிரச்சார வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த பணிகள் இந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் ஆரம்பமாகும் எனவும் அதன் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமால் ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் நாள் அரச தலைவர் வேட்பாளரை தாம் அறிவிக்கவுள்ளதாகவும், தற்போது உலகில் உள்ள தொழில் நுட்பங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவிற்குப் பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் ஈராக், ஈரான், இலங்கை, சூடான், சோமாலியா, மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சில  கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகதிகளுக்காக 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகின்றது. அதுவும் இவர்கள் முக்கிய நகரங்களுக்கு வெளியே வசிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டதன் பின்னரே இந்த விசா வழங்கப்படும்.

2013ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பதவியேற்ற பின்னரே படகு மூலம் வரும் அகதிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது