Home Blog Page 2692

இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர்.

மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இப்பேரணி இடம்பெற்றது.

“ரோஹிங்கியா இனப்படுகொலை நினைவு நாள்” மற்றும் “எங்கள் குடியுரிமையை நிலைநிறுத்து “.போன்ற பதாதைகளை அவர்கள் தங்கியிருந்தனர்.

இப்பேரணியில் கிட்டத்தட்ட 200,000 ரோஹிங்கியாக்கள் பங்கேற்றதாக காவல்துறை அதிகாரி ஜாகிர் ஹசன் தெரிவித்தார்.

“மியான்மர் எங்கள் நாடு. நாங்கள் ரோஹிங்கியாக்கள்,நாங்கள் எங்கள் உரிமைகளை திரும்பப் பெற விரும்புகிறோம், குடியுரிமை வேண்டும், எங்கள் வீடுகளையும் நிலத்தையும் திரும்பப் பெற விரும்புகிறோம்” என்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான முஹிப் உல்லா தெரிவித்தார்.

“எனது இரு மகன்களின் கொலைக்கு நீதி தேடுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எனது கடைசி மூச்சு வரை நீதியைத் தேடுவேன்” என்று 50 வயதான தயாபா கதுன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தபோது, ​​அவரது கன்னங்களில் கண்ணீர் உருண்டது.

 

தமிழர்களின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும்வரை சிங்களவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது – ஸ்ரீதுங்க ஜயசூரிய

வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழுமையாகக் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களமிறங்கியுள்ள எவருக்கும், வடக்கு- கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையில்லை.

அவர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே இங்கு வருகிறார்களே, ஒழிய அவர்களுக்கு இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீரக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இதனை வைத்துதான் அனைவரும் அரசியலில் ஈடுபட்டார்கள்.

சர்வதேசம்வரை இதனை கொண்டு சென்றார்கள். இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால், வடக்கிலுள்ள மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.

ஆனால், வடக்கிலுள்ள மக்களின் எந்தவொரு பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதுவே உண்மையாகும்.

யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து இது நீடிக்கிறது. காணி, கல்வி, தொழில், வீட்டுப் பிரச்சினை என எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

முக்கியமாக அவர்களின் உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை. சிங்கள மக்கள் கூறுவதைப் போல தமிழர்கள் வாழ வேண்டிய அவசியமில்லை.

சிங்களவர்களுக்கு இருப்பதைப் போல, தமிழர்களுக்கும் தனி உரிமையும், சுயகௌரவமும் இருக்கின்றது. இதனை முழுமையாக வழங்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

இந்த உரிமையை நாம் வழங்க வேண்டும். அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். தேசிய வாதம் என்பது பிறப்பிலேயே உருவாவது.

தமிழர்களின் அரசியல் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும்வரை தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கும் இந்நாட்டில் முழுமையான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைக்காது என்பதே உண்மையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஐதேக வினரும் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களே – மஹிந்த

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களுக்கும், சித்திரவதை செய்தவர்களுக்கு அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால், இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்த தலைவரும் அமைச்சர்களும்  இருந்திருக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று (24) மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பட்டலந்த சித்திரவதை முகாம் 1989 ஆம் ஆண்டுகளில் அம்பிலிப்பிட்டியவிலிருந்து பட்டலந்தை வரை பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கால கட்டத்தில் தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தோம்.

சித்திரவதை பட்டவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களும் இன்று ஓரணியில் திரண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன

லெபனானின் தெற்கு பெய்றூட்டில் உள்ள கிஸ்புல்லா படையினரின் தீவிரமான ஆளுமையுள்ள பகுதியில் இஸ்ரேல் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆளில்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொருக்கியுள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்தள்ளதாவது:

ஈரானின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த குழுவினரின் பகுதியில் இன்று (25) காலை பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தள்ளனர். இது உளவு விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது ஊடக மையத்திற்கு அண்மையாகவே உளவு விமானம் வீழ்ந்துள்ளதாக கிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அண்மையாக உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், விமானத்தின் பகுதிகளை சிலர் எடுத்துச் செல்வதையும் காணமுடிகின்றது.
விமானம் வீழ்ந்து நொருக்குவதற்கு முன்னர் விமானம் பறக்கும் சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு விமானம் வீழ்ந்து நொருக்கியதுடன், மற்றையது வானில் வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இஸ்ரேல் அரசு கருத்து எதனையும் கூற மறுத்துவிட்டது. எனினும் லெபனானின் வான்பரப்பில் அடிக்கடி அத்துமீறி பறப்பில் ஈடுபடும் இஸ்ரேல் போர்விமானங்கள் சிரியா மீது தாக்குதல் மேற்கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுத்த எதிர்ப்பைக் குறைக்கவே அவசரகாலச்சட்டம் நீக்கம்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதும் முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் மீதான தடை நீஎக்கும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று (24) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேசிய தௌகீத் ஜமாத், ஜமாதி மில்லாது இப்ராகீம் மற்றும் விலாயத், செய்லானி ஆகிய அமைப்புக்கள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும்.

இந்த இயக்கங்கள் 1978 ஆம் ஆண்டு சிறீலங்காவில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமைவாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளதுடன், அதற்கு இணையான அதிகாரங்களை சிறீலங்கா படையினருக்கு வழங்கியுள்ளது.

முப்படையினருக்கும் தாம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன கடந்த வியாழக்கிழமை (22) வெளியிட்ட தனது அரச அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுந்துள்ள எதிர்ப்புக்களைச் சமாளிக்கவே சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளது என கருதப்படுகின்றது.

பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்!

அனைத்துத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும்! தமிழின விடுதலை உணர்வாளர்கள்களும் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவுநாட்களில் ஈருருளிமூலமும், கால்நடையாகவும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

பாரிசிலிருந்து எதிர் வரும் 28.08.2019 புதன்கிழமை 11.00 மணிக்கு பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நிழற்படக்கண்காட்சியும், தொடர்ந்து 14.00 மணிக்கு நடைபயணப்போராட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

28.08.2019 – 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்விலும் தொடர்ந்து தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம்.

இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும், பங்கு கொள்ளவும், பங்களிக்க வைக்கவும்.

நன்றி.

தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு- 06 62 84 6606
தமிழீழ மக்கள் பேரவை- 06 52 72 5867
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421

இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்

இந்தோனேசியாவில் சுமாத்திரா தீவின் மெடான் மாநகரத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தின் முன்னால் பல நாட்டு அகதிகள் ஒன்று திரண்டு 23 நாள் காலை தொடக்கம் மதியம் வரை ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக 24.08 அன்றும் தொடர்ந்தது. இரண்டாம் நாள் போராட்டம் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.

ஈழ அகதிகள் தமிழ் மொழியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர். குறித்த போராட்டத்தில் ஈடுபடும் அகதிகள், மீள் குடியேற்றம் நடைபெறாமல் உள்ளதால் தங்களுக்கான மீள்குடியேற்றத்தை பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளுகு்கு மேற்கொள்ளுமாறு ஐ.நா. அகதிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் அகதிகள் இந்தோனேசிய அரசு எமக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதேபோல் அகதிகளுகு்கான மீள் குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நாவிற்கு சர்வதேச நாடுகளுக்கும் அடுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

Indonesia refu இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்தமிழ், ஆங்கிலம், பாகசா இந்தோனேசியா போன்ற மொழிகளில் பதாதைகளை ஈழ அகதிகள் சுமந்து நின்றனர்.

ஜெகரத்தா, சூரபாயா, மகசார், சுமாத்தராவில் மெடான் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள்நடைபெறுகின்றது. இதற்கு இந்தோனேசிய அரசும் பொலிசாரும் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

மீண்டும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு போராட்டம் தொடரப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈழ அகதி

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர் கோவில் கோட்டார் காவல் நிலையம் முன்பாக ஈழ  அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோயி என்ற இந்த அகதி சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமாரி வந்தார். பல இடங்களிலும் வேலை பார்த்து வந்தார். தற்போது வேலை இல்லாமல் இருக்கின்றார்.

நேற்று (23.08) கன்னியாகுமாரி காவல் நிலையம் சென்று தன்னை கைது செய்யும்படி கூறியுள்ளார். காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவர் மண்ணெண்ணெய் வாங்கி வந்து உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அறிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரணிலின் விருந்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பினர்

நல்லாட்சி அரசாங்கத்தின் 4ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று அலரிமாளிகையில் நடத்திய விருந்துபசாரத்தில் சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீர, ஹரின் பெர்னான்டோ மற்றும் புத்திக பத்திரன ஆகியோரைத் தவிர ஏனைய ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாத்தறையில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டதால், இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லையென ஐ.தே.வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இரவு விருந்திற்கு ஐ.தே.க யிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியனவும் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், இ.துரைரட்ணசிங்கம், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சிறீலங்காவில் மத சுதந்திரம் சிறப்பாக உள்ளது – ஐ.நா அதிகாரி

சிறீலங்காவில் எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அது சிறப்பாக உள்ளதாகவும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மத மற்றும் நம்பிக்கை தொடர்பான சிறப்பு அதிகாரி அகமட் சகீட் தெரிவித்தள்ளர்.

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சாவை இன்று (24) அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே சகீட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கங்கள் நன்றாக உள்ளதாகவும், எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும் ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளாதாக சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் ஐ.நா அதிகாரி சிறீலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறீலங்கா அரசின் ஆதரவுடன் பௌத்த துறவிகள் பௌத்த மதத்தை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அத்துமீறி பரப்பி வருவதுடன், தமிழ் மக்களின் நிலங்களையும் அபகரித்து வருகின்றனர்.

ஆனால் ஐ.நா அதிகாரிகள் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவதானிப்புக்களை மேற்கொண்டுவருவதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஐ.நா அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதில் தமிழ்; அரசியல்வாதிகள் தோல்வி கண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.