மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து தாக்குதல் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி சீயோன் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான காத்தான்குடியை சேர்ந்த பயங்கரவாதி முகமட் ஆஷாத்தின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அன்றைய இரவு கல்லடி பாலம்
மறிக்கப்பட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கல்லடி பாலத்தினை மறித்து போராட்டம் நடாத்தியவர்களை பொலிஸார் கண்ணீர்குண்டு தாக்குதல் மற்றும் குண்டாந்தடி தாக்குதல் நடாத்தி கலைத்திருந்த நிலையில்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான செல்வி மனோகர்,சுஜீகலா உட்பட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த உடற்பாகங்கள் பொதுமக்களின் எதிர்ப்பினையும் மீறி புதைக்கப்பட்டது தொடர்பில் அரசாங்க அதிபருக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
விசாரணைகளை தொடர்ந்து ஐந்து பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்திப்பை மேற்கொள்ள விரும்பினால் 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையைப் பேணி ஈரானிய மக்களுக்கு எதிரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய கோலாலம்பூர் நகருக்கு விஜயம் செய்துள்ள அவர் அங்கிருந்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைக்கு கடிவாளமிடும் வகையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை கடந்த வருடம் வாபஸ் பெற்றது முதற்கொண்டு இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா அந்த உடன்படிக்கையிலிருந்து விலகி ஈரானுக்கு எதிரான தடைகளை மீள நடைமுறைப்படுத்தியமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஈரான் அந்த உடன்படிக்கையின் கீழான உறுதிப்பாடுகளிலிருந்து படிப்படியாக விலகும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
மேற்படி தடைகள் தொடர்பான நிவாரணம் அளிக்கப்படாவிட்டால் அந்த அணுசக்தி உடன்படிக்கை தொடர்பான மேலும் பல மீறல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
அவர் கோலாலம்பூரில் இடம்பெற்ற இஸ்லாமிய உலகிலான பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னரே ஊடகவியலாளர்களுடனான இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகையால் அவர்கள் (அமெரிக்கர்கள்) பேச்சுவார்த்தை இடம்பெறும் அறைக்குத் திரும்ப வேண்டுமானால் அவர்கள் ஒரு அனுமதிச்சீட்டை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. அந்த அனுமதிச் சீட்டு அந்த உடன்படிக்கையை (2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையை) பேணுவதாகும்” என அவர் தெரிவித்தார்.
நாம் சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சந்திப்பை மேற்கொள்ள விரும்பவில்லை. எமக்கு சந்திப்பை மேற்கொள்ள அது தொடர்பில் ஒரு பெறுபேறு தேவையாகவுள்ளது” என அவர் கூறினார்.
ஜாவத் ஜரீப் நேற்று மாலை மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட்டுடன் சந்திப்பை மேற்கொண்டார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் பிரதமரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமரின் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான சவால் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான 5 வாரங்களுக்கு பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது சம்பந்தமான பிறிக்ஸிட் செயற்கிரமம் தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கான நேரத்தை அனுமதிப்பதாக உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இந்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி விலகுவதற்கு முட்டுக்கட்டை போடுவதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்திற்குப் புறம்பாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியென அதன் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்யும் மேற்படி திட்டத்திற்கு எலிஸபெத் மகாராணியார் நேற்று முன்தினம் புதன்கிழமை அனுமதியளித்துள்ளதாகவும் இது நிச்சயமாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதற்கான எதிர்ப்பிற்கு தடை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நகர்வல்ல எனவும் அமைச்சர் மைக்கேல் கொவ் தெரிவித்தார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தினமான ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பெருமளவு நேரம் உள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவிக்கையில், பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி மகாராணியாரின் உரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
”இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்கு பிற்பாடு வரை காத்திருக்க தான் விரும்பவில்லை” என போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.
மகாராணியாருடனான சந்திப்பின் போது பங்கேற்ற பாராளுமன்றத் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் கூறுகையில், இந்தப் பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரானது கடந்த 400 வருட காலத்திலேயே மிகவும் நீண்ட கூட்டத்தொடர் ஒன்றாக விளங்குவதால் அதனை இடைநிறுத்தி புதிய கூட்டத்தொடர் ஒன்றை ஆரம்பிக்க உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.
உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழ்த்தாய்மாருக்கும் தந்தைமாருக்கும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களால் இயன்ற உதவியினை உடன் செய்யுமாறு அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) மனிதாயத்தின் பேரால் பணிவன்பாக வேண்டுகின்றோம் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பிரித்தானியா அரசு ஆகியவற்றிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையத்தின் இந்த கோரிக்கை மனுவின் ஆங்கில வடிவமானது அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானியா பிரதமர் அலுவலகம் மற்றும் பிரித்தானியாவின் அங்கிலிக்கன் திருச்சபை ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் முழு வடிவம் வருமாறு:
மறக்கப்பட்ட மக்களாக 900 நாட்களுக்கு மேலாக வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட தங்கள் குடும்பத்தினர்க்காகப் போராடும் தமிழ்த்தாய்மார்களுக்கு உதவ முன்வாருங்கள்
ஐக்கியநாடுகள் சபையின் 8வது அனைத்துலக வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30.08.2019) இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படைகளால் 11.07.1979 அன்று அன்றைய இலங்கை அரச அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா தனது மருமகனான பிரிகேடியர் வீரதுங்காவுக்கு கண்ட இடத்தில் சுடவும் சுட்ட உடலை விசாரணையின்றி அழிக்கவும் பயங்கரவாதச்சட்டத்தால் அனுமதி அளித்த மூன்றாம் நாள் 14.07.1979 அன்று யாழ்ப்பாணத்தில் ஆறுபேர் படைகளால் அழைத்துச்செல்லப்பட்டுக் காணமாலாக்கப்பட்டது முதல் கடந்த நாற்பது ஆண்டுகளாக அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக மனிதாயத்திற்கு எதிரான குற்றமாகிய வலுக்கட்டாயமாகக் காணாமாலாக்கப்படுதல் இலங்கைத் தமிழர்களின் அரசியல் பணிவை அச்சுறுத்தல் மூலம் பெறும் அரசின் தந்திரோபாயமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அன்று முதல் காணாமலாக்கப்படும் செயல்களால் வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் பாதிப்புக்குள்ளாகி வந்த ஈழத்தமிழர்கள் 2009 இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கில் மேலும் பாதிப்புற்று இன்றுவரை உண்மைகள் வெளிப்படுத்தப்படுதலோ பொறுப்புக்கூறலோ அற்ற நிலையில் நீதிவிசாரணைகள் எதுவும் தகுந்த முறையில் நடைபெறாத சூழலில் தொடர்ந்து துன்புற்று வருவதை ஒன்றிய அரசியல் இனத்துவச் சிறுபான்மையினமாக வாழும் பிரிட்டிஸ் தமிழர்களாகிய நாங்கள் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றோம்.
2015ம் ஆண்டில் இலங்கைக்குச் சென்ற ஐக்கியநாடுகள் சபையின் வலிந்து அல்லது விருப்புக்குமாறாக காணாமலாக்கப்படல் தொடர்பாக ஆராயச் சென்ற குழுவினர் “உண்மைகளையும் நீதியினையும் அடைவதற்கான பாதை நீண்டதாகவும் துன்பங்களைத் தருவதாகவும் இருப்பினும் அதுவே செல்வதற்கான ஒரே முறைமையான பாதை” எனக் கூறியும் இணக்கப்பாட்டுடனும், பொறுப்புக்கூறலுடனும், மனித உரிமையைப் பேணல் உடனும் பயணிப்பதற்காக, ஐக்கியநாடுகள் சபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றி, நான்கு அமைப்புக்களான. சிறப்பு வழக்குத் தொடுப்பவர் அலுலகத்துடன் கூடிய சிறப்பு நீதிமன்றம், உண்மை-நீதி- இணக்கப்பாடு- மீளவும் வன்முறைகள் நிகழாமை ஆகியவற்றுக்கான ஆணையகம், நட்டஈடு வழங்கு அலுவலகம், காணாமலாக்கப்பட்டவர் விடயங்களுக்கான அலுவலகம் என்பவற்றை நிறுவ வழிப்படுத்தியது” என 2017இல் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆய்வறிக்கையான சிறிலங்காவின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம்: ஒன்றன் பின் ஒன்றாக நீதி (The Sri Lankan office on Missing Persons : Justice in Tandem) என்பதை எழுதிய கொழும்பை மையமாகக் கொண்ட தெற்காசிய சட்ட ஆய்வு மையத்தின் ஆய்வாளரான முனைவர் இசபெல்லா லஸ்சி (Isabelle Lasse) தெரிவித்துள்ளார்.
ஆயினும் படையினர் குற்றவாளிகளாகக் காணப்பட்டால் அத்தகையவரை அடுத்து என்ன செய்வது என்பதற்குத் தெளிவான வழிகாட்டல்கள் இல்லாத காணாமல் போனவர்களுக்கான (Office on Missing Person) அலுவலகமாகவே இது அமைக்கப்படுவது மேம்பாடான அலுவலகமாகவும் குற்றவியல் நீதிச் செயற்பாட்டுகளுடன் தொடர்பற்றதாகவும் அமைக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஆயினும் சிறிலங்கா எந்த வழிகாட்டல்களுக்கும் தலைசாய்க்காது காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் திறக்கும் பாராளமன்றத் தீர்மானத்தை ஏப்ரல் 2016இல் நிறைவேற்றி பங்குனி 2018இல் அலுவலகத்தைத் திறந்துள்ளது என்பதே சமகால வரலாறாக உள்ளது.
இதுவரை சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் இந்தக் கால இடவெளியில் உண்மைகள் வெளிவராதவாறு காணாமலாக்கப்பட்டவர்களுக்கான மரணச்சான்றிதழ்களைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் திணிப்பதே உள்நோக்காக இருப்பதாகப் பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலகத் தினமான இன்று தங்கள் குடும்பத்தினரை எண்ணி ஏங்கித் துடித்துச் சாகாமல் செத்துக்கொண்டிருக்கும் மறக்கப்பட்ட தமிழ்க்குடும்பங்களின் சார்பாக இந்த மனுவை உங்களுடைய பார்வைக்குப் பணிவன்புடன் சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.
1999 ம் ஆண்டிலேயே பிபிசியின் 28.03.1999ம் திகதியச் செய்தி ஐக்கியநாடுகள் சபையின் ஆய்வின் படி உலகிலே அதி கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை ஈராக்குக்கு அடுத்ததாக 2வது நிலையில் கொண்டிருந்த நாடாக சிறிலங்காவை குறிப்பிட்டது. இதில் 1980 முதல்12000 பேர் சிறிலங்காப்படைகளால் காவலில் வைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 27 ஆண்டுகளில் 55000பேர் கொன்றழிக்கப்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள்தரப்பட்டிருந்தன. அச்செய்தியில் அப்போது ஆட்சியில் இருந்த சந்திரிகா குமரதுங்கா தலைமையிலான சிறிலங்கா அரசாங்கப் புள்ளிவிபரம் ஐக்கியநாடுகள் சபையின் ஆய்வை விட அதிக எண்ணிக்கையாகப் 17000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியது. பிபிசியின் இலங்கைக்கான செய்தியாளர் சூசானா பிரைஸ் அவர்களின் 05.03.1999ம் திகதியச் செய்தியினால் 1998 யூலைமாதத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மணி என்னும் இடத்தில் 400க்கு மேற்பட்ட தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தால் விசாரணைக்கெனக் கொண்டு செல்லப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டறியப்பட்டது என்பது பதிவிடப்பட்டது.
இது இலங்கையில் தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு வரும் மனிதாயத்திற்கு எதிரான குற்றச்செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தமையை நிரூபித்தன. 10.11.1999இல் பிபிசியின் தென்னாசியச் செய்தியாளர் அல்ஸ்டயார் லோசனால் “வெல்லப்பட முடியாத யுத்தம்” எனச் சுட்டிக்காட்டிய யுத்தத்தை யுத்தக்குற்றச்செயல்கள் மூலமும் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் மூலமும் சிறிலங்காப்படையினர் 19.05.2009 இல் பத்தாண்டுகளின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்த பொழுது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து இன்றுவரை எவ்வளவு எனச் சிறிலங்கா அரசாங்கத்தால் பொறுப்புக்கூற முடியாதுள்ளது என நோர்வே மனிதஉரிமைப் பாதுகாப்பு நிதிய ஆதரவில் இலங்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பேரவையுடன் களஆய்வு செய்துவரும், அரசியலுக்கும் பொருளாதாரத்திற்குமான இலண்டன் பல்கலைகழகப் பள்ளியின் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு மையத்தின் (Centre for Women, Peace and Security, London School of Politics and Economics) வருகை ஆய்வாளர் யோலண்டா போஸ்டர் (Yolanda Foster) அவர்கள் “ சிறிலங்காவில் பாதுகாப்புப் படைகளினால் காணாமலாக்கப்பட்டோர் எவ்வளவு என யாருக்கும் தெரியவில்லை எனவும் ஆனால் பல்லாயிரக்கணக்கு என்பது மட்டும் உறுதியெனத் தனது கள ஆய்வுச் செய்திக் குறிப்பான “ சிறிலங்காவில் காணாமலாக்கப்பட்டோரின் நீண்டகால நிழல்கள்” (The Long Shadow of Disappearences in Sri Lanka) வில் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுது தினம் 1000 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் ஏப்ரல் மாதத்திலேயே யுத்தசூன்யப் பிரதேசத்தில் 7000பேர் கொல்லப்பட்டதாகவும் 29.05.2009ம் திகதிய பிரித்தானிய நாளிதழான ‘த டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது என விக்கிப்பீடியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துலக மன்னிப்புச்சபையினர் “ 1980 முதல் உலகிலேயே அதிக எண்ணிக்கையான காணாமல்போக்கலைச் செய்த நாடாகச் சிறிலங்கா விளங்குகிறது எனவும் 60000 முதல் 100000 வரை அத்தொகை அமையலாமெனவும் இது சிறிலங்காவில் நீதிபரிபாலனம் முறிவுற்ற நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறதெனவும், இதனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடும்பங்கள் இலங்கையில் மிக அதிகம் எனவும், 18.05.2019 ம் திகதிய சிறிலங்கா: தண்டனைகளிலிருந்து விலக்களித்தல் வன்முறைகளின் மறுநிகழ்வுக்குத் தூபமிடுகிறது (Sri Lanka : Impunity fuels recurrence of violence) என்னும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அனைத்துலக மன்னிப்புச் சபையினர் 18.05.2018இல் “சிறிலங்கா: வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பட்டியவை வெளியிடுக (Sri Lanka :Release lists of the forcibly disappeared) என விடுத்த கோரிக்கையில் “போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 9வது ஆண்டு நிறைவுற்ற நிலையில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை அவர்களின் குடும்பத்தினர்க்கு வழங்குவதுடன் போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின விளக்கமான விபரப் பட்டியலை வெளியிடுமாறும் அனைத்துலக மன்னிப்புச் சபை கோருகிறது.
யூன் மாதம் 2017ம் ஆண்டு இலங்கையின் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனா பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் மனக்குறைகளைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் விபரப்பட்டியலை வெளியிடுமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்குத் தாம் அறிவுறுத்துவதாகவும் நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். தப்பிப்பிழைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி நூற்றுக்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் வட்டுவாய்க்கால் பாலத்திற்கு அருகில் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர். கிடைத்துள்ள மற்றோர் அறிக்கைப்படி கத்தோலிக்க குருவான அருட்திரு. பிரான்சிஸ் யோசப் அவர்கள் தலைமையில் சரணடைந்த மற்றோர் தொகுதியினரும் அவருடன் சேர்த்துக் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
கண்கண்ட சாட்சிகளின்படி சரணடைந்தவர்கள் இராணுவப்பாதுகாப்புடன் அணி அணியினராக பேருந்துகளில்ட அழைத்துச் செல்லப்பட்ட பின்னர்இவர்களுக்கு என்ன நேர்ந்ததென இதுவரை தெரியாதுள்ளது. இந்த திரள்நிலையான வலிந்து காணாமலாக்கப்படுதல்களை குறித்து 2017ல் அனைத்துலக மன்னிப்புச்சபை “ எங்கள் புண்களை நீதியால் மட்டுமே குணமாக்க முடியும்: சிறிலங்காவில் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் கோரல்களைக் கேளுங்கள்” (Only Justice Can Heal Our Wounds: Listening to the Demands of Families of Disappeared in Sri Lanka) என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘ திரளாகப் போரின் முடிவில் காணாமலாக்கப்பட்டமை செயற்படுத்தப்பட்ட விதங்கள் திட்டமிட்ட முறையில் வலிந்து ‘காணாமலாக்கப்படுதல்” நிறுவனமாக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்பதற்கான வெளிப்படையான சுட்டுதலாக அமைகிறது.
அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கு உள்ளனர் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்களை மறைப்பது குற்றச்செயல்களைத் தூண்டுவதற்கான பொறுப்பாளராக அரசை கருதவைக்கிறது” என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருந்தது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடைசியாக சிறிலங்கா இராணுவத்தின் 58வது பிரிவின் பாதுகாப்பில் காணப்பட்ட 13 பேர் குறித்து சிறிலங்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவுக்கு (Habeas Corpus), பெப்ருவரி 2016 இல் மேஜர் ஜெனரல் கவிந்த சாணக்கிய குணவர்த்தனாவுக்கு முல்லைத்தீவு மஜிஸ்ரேட் நீதிமன்றம் 19.04.2016இல் சமுகமளித்துப் பட்டியலைத் தாக்கல் செய்யுமாறு பணித்தது. ஆயினும் இரண்டு தவணைகள் கொடுத்தும் பட்டியலைச் சமர்ப்பிக்கத் தவறியமையால் செப்டெம்பர் 2016இல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு குற்றவியல் விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அரசாங்கம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் பட்டியலே இராணுவத்திடம் உள்ளது மற்றையவர்கள் சரணடைந்த பொழுது பட்டியலிடப்படவில்லை என இறுதியாகப் பதிலளித்தது”. என அனைத்துலக மன்னிப்புச்சபை தனது இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
கூடவே முப்படைகளின் தலைவரும், தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவருமான அரச அதிபர் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தாம் பணிப்பதாக வாக்குறுதி அளித்த போதிலும் இவ் அறிக்கை வெளிவரும்வரை 11 மாதங்கள் எதுவும் நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குறித்து தாயகத்திலும் வெளிநாடுகளிலும் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திலும், அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்களும் மறுவாழ்வும் ஆணையக சரணடைந்து அல்லது கைதுசெய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரதநிதிகள் பிரதநிதிகள் அமர்விலும் தொடர்ச்சியாக முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த முயற்சிகளின் வழி மார்ச் 2018இல் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டாலும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உண்மைகளைத் தேடும் முயற்சிக்கு கடந்த பத்தாண்டாக சிறிலங்கா அரசாங்கம் பெரிதளவில் ஊக்கமளிக்காதிருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிப்புற்று குடும்பங்களில் பெண்களே தங்களுக்கான உண்மைகளை வெளிப்படுத்தும்படியும் நீதியை வழங்குமாறும் மறுவாழ்வை சீரமைக்குமாறும் முன்னணிப் போரட்டங்களை சனநாயக வழிகளில் நடத்த வேண்டிய நிலை இலங்கையில் காணப்படுகிறது என நோர்வேயின் மனிதஉரிமை பாதுகாப்பு ஆய்வுத்திட்டத்தில் இலங்கை நிலை குறித்த ஆய்வாளராக யோலண்ட் போஸ்டர் தனது “ சிறிலங்காவில் காணாமலாக்கப்பட்டோரின் நீண்டகால நிழல்கள்” (The Long Shadow of Disappearences in Sri Lanka) என்னும் களஆய்வுக் குறிப்பில் தெரிவித்துள்ளதுடன் இப்பெண்கள் பாலியல் ரீதியாகவும் படைபல ரீதியாகவும் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு போராட வேண்டியுள்ளதால் கூட்டுச் செயற்திட்டம் (Collective Action) ஒன்று அவர்களுக்குப் பக்கத்துணையாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தற்பொழுது யாழ்ப்பாணத் தாய்மார் முன்னணியும் தென்னிலங்கைத் தாய்மார் முன்னணியும் சிலவிடயங்களில் இணைந்து குரல் எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, மாடன்கேணி, வவனியா முதலதக பகுதிகளில் 2018ம் ஆண்டு பெப்ருவரி முதலாகத் தொடராகவும் சுழற்சி முறையிலும் நடைபெற்று வரும் காணாமலாக்கப்பட்டோர் குறித்த உண்மைகளை கண்டறியவும் நீதிவிசாரணைகளை நடாத்துவிக்கவும், வாழ்வின் கட்டமைப்புக்களை மறுசீரமைக்கவும் நடாத்தப்பட்டு வரும் தாய்மார்களின் இப்போராட்டம் 900 நாட்களைத் தாண்டிய நிலையிலும் ஆண்களும் பெண்களுமாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20 பேருக்கு மேல் தங்கள் பிள்ளைகளைக் கணவரைக் குறித்த விபரங்களை அறியாமலே மரணித்து விட்ட நிலையிலும் இவர்களது இந்த உண்மைக்கான நீதிக்கான கோரிக்கை உலகின் கவனத்தை உரிய முறையில் பெறவில்லை என்பதை இன்று அனைத்துலக வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் மிகுந்த கவலையுடன் உங்கள் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் தலைவி மிசல் பக்லட் (Michelle Bachelet) அவர்கள் “ பெரும் குழப்பநிலையை உருவாக்குகிறது” என 19.08.2019 இல் குறிப்பிடும் அளவுக்கு, யுத்தக்குற்றச் செயல்கள் பலவற்றுக்கும் மற்றும் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் பலவற்றுக்கும் பொறுப்பாளர் எனப் பல ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கைகளால் கருதப்படும் சிறிலங்கா இராணுவ 58வது பிரிவுக்குப் போரின் இறுதிக்காலத்தில் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவை சிறிலங்கா இராணுவத்தளபதியாக சிறிலங்காவின் அரச அதிபர் நியமித்துள்ளமை சிறிலங்கா காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உண்மைகளை வெளிப்படுத்தும் பொறுப்புக்கூறலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்கலையோ செய்யாது என்பதையும் அனைத்துலக வழிகாட்டல்கள் எதற்கும் தலைசாய்க்காது என்பதையும் தற்போது மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட மக்களாக உள்ள தமிழ்த்தாய்மாருக்கும் தந்தைமாருக்கும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களால் இயன்ற உதவியினை உடன் செய்யுமாறு அனைத்துலக வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டோர் தினமாகிய இன்று மனிதாயத்தின் பேரால் பணிவன்பாக வேண்டுகின்றோம்.
கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மனித உரிமை ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் ஆகியோரிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் கையளிக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலைக்காக கலந்துகொண்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் தமது ஆதங்கங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினர் .
அதில் 10 வருடங்களாக போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றோம். இதுவரை 35 பேருக்கு மேல் எம்மோடு இணைந்து வெயில் பனி மழை பாராது தமது உறவுகள் இன்று வருவார் நாளை வருவார் எதிர்பார்போடு உயிரை விட்டுள்ளார்கள்.
நாம் அரசிடம் நேரடியாக சந்தித்து மகஜர் கையளித்தோம் பல போராட்டங்களை முன்னேடுத்தோம் எதையும் அரசு செவிசாய்ப்பதாக இல்லை எமக்கான நீதி அரசாங்கம் மூலம் கிடைக்கவில்லை.
நாம் வீதிகளில் நின்று கத்தும் ஒலி சர்வதேசத்திற்கு கேக்கவில்லையா? அரசியல் தலைவர்களின் மாற்றங்களினால் நாங்கள் கூட காணாமல் போவதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. அரசாங்கம் மாற முதல் சர்வதேசம் கவனத்தில் கொண்டு எங்களுடைய உறவுகளை மீட்டுத்தர முயற்சி செய்ய வேண்டும்.
இன்று வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் போராட்டம் இடம்பெற்றது. அனைத்து தமிழ் உறவுகள், பொது அமைப்புகள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பேரணியில் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டவர்களால் வெள்ளைவானில் கொண்டு சென்றவர்கள் எங்கே? பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய் கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? கையில் கொடுத்த எங்கள் பிள்ளைகள் எங்கே? எம் உறவுகளை கொலை செய்தவர்கள் கடத்தியவர்களுக்கு பதவியை வழங்குவதுதான் நல்லாட்சியா? போன்ற வாசகங்களை அடங்கிய பதாதைகளை கையில் தாங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான இன்று (30)வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பன்றிகொய்தகுளம் விநாயகர் ஆலயத்தில் ஆரம்பித்த ஒமந்தை இராணுவச்சாவடி வரையிலும் முன்னெடுக்கப்பபடுகிறது.
கல்முனை – தரவளை பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பித்து கல்முனை தமிழ் பிரதேச செயலகம் வரையும் குறித்த பேரணிகள் ஆரம்பமாகியுள்ளது.
ஏராளமான உறவுகள் இணைந்து இப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
“சிறீலங்கா அரசே உண்மையை மறைக்காதே. ஒரு நாள் உண்மை நிச்சயம் வெளிவரும்” எனக் கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமாகிய இன்று (வெள்ளிக்கிழமை), மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலக்ததிற்கு முன் குறித்த போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள்,குறித்து அரசாங்கம் உரிய பதிலை இன்னும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள், அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வலர்கள், மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டோர், ‘நிலைமாறுகால நீதி எங்கே?’, ‘இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் உண்மை வெளிவரும்’, ‘இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அக்கறையில்லையா?
‘உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல இவர்கள் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்’ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி கண்ணீருடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக சென்றனர்.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் கவன ஈர்ப்பு போராட்டமும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து காணாமல்போன உறவினர்களினால் கவன ஈர்ப்பு பேரணியொன்று காந்திபூங்கா வரையில் நடைபெற்றது.
இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் காணாமல்போன உறவுகளின் படங்களை ஏந்தியிருந்ததுடன் சர்வதேச சமூகம் தமது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
வலிந்து காணாமல்போன உறவுகளின் இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தமது ஆதரவினை வழங்கியிருந்ததுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கவன ஈர்ப்பு பேரணியானது காந்திபூங்காவினை வந்தடைந்ததுமன் அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு அனுப்புவதற்கான மகஜர் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைத்தலைவியான மதனா பாலகிருஸ்ணராஜாவினால் வாசிக்கப்பட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அஸீஸிடம் வழங்கப்பட்டது.
காணாமல்போன தமது உறவுகள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான ஏமாற்றத்தினை தந்துவரும் நிலையில் சர்வதேச சமூகம் தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.
காணாமல்போன உறவுகளை தேடிதேடி மனநோய்க்கும் பல்வேறு நோய்களுக்கும் உறவுகள் உள்ளாகிவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் அக்கரையற்ற நிலையில் இங்கு இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கப்படும் இந்த வேளையில் தாயகத்திலும் பன்னாடுகளிலும் பேரணிகளும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஆதரவுடன் ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் தலைமையில் சென்னையில் உள்ள ஜ.நா. அலுவலகத்தில் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.
இன்று காலை 11 மணியளவில் தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர் தலைமையில் தமிழக உணர்வாளர்கள் ஜ.நா அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடு கோரிக்கை மனுவையும் கையளித்துள்ளனனர்.