வவுனியாவில் இடம்பெறும் ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களில் பொதுஜன பெரமுனவின் தமிழ் பகுதிக்கான இணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக செயற்பட்டு கூட்டத்தினை அவரே நடத்துவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்புகுழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தினவுடன் வருகை தந்த அவரின் இணைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் தமிழ் பகுதிக்கான இணைப்பாளருமான நபர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமரும் இடத்தில் இருந்து கூட்டத்தினை நடத்தியமை அரச அதிகாரிகளை அவமதிக்கு செயல் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை அதன் தலைவர் நடத்த வேண்டிய போதிலும் வவுனியாவில் இடம்பெறும் கூட்டங்களை தலைவரின் இணைப்பாளரே நடத்துவதாகவும் அவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக முன் மேடையில் அமர்ந்திருப்பதாகவும் விசனம் தெரிவித்தினர்.
ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு மொழி பெயர்ப்பு தேவையேற்படின் ஒலிவாங்கியூடான மொழிபெயர்ப்பு செய்ய கூடிய வசதிகள் இருந்தபோதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக அவர் முன்மேடையில் இருந்து அரச அதிகாரிகளை கட்டுப்படுத்துகின்றமை தொடர்பில் ஒருங்கிணைப்புகுழு தலைவர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிறைவான கிராமம்” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மக்களின் அபிலாசைகளையும், அவர்களது தேவைகளையும் நிராகரிப்பதாக அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
இந்த அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு அதன் பிரகாரம் ஒவ்கிவொரு கிராமசேவகர் பிரிவிற்குமான ஐந்து மில்லியனில் முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ஒதுக்கப்பட்டு அதனடிப்படையில் மக்களின் தெரிவுகளின் அடிப்படையில் திட்டங்கள் முன்னுரிமைப் படுத்தப்பட்டன.
அத் திட்டங்களில் இருந்து மக்களால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களை உரிய வகையில் நிர்வாக பொறிமுறைகள் ஊடாக பின்பற்றாமல் அரசியல் தலையீடுகள் காரணமாக திட்டங்கள் பின்தள்ளப்பட்டு மக்களால் முன்னுரிமை அளிக்கப்படாத அதே நேரம் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் தமது அரசியல் தனிப்பட்ட சுயலாபங்களுக்கும் ஏற்ற திட்டங்கள் முன்னுரிமை படுத்தப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இது மக்களின் பங்கேற்பு அபிவிருத்தியையும் அவர்களது அபிவிருத்தி மீதான தேவையையும் புறம் தள்ளுவதாக அமைந்துள்ளது.
மக்களின் முன்னுரிமைப் படுத்தலுக்கு மாறாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக அண்மைய நாட்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் விவாதங்கள் நடைபெற்று அந்த விவாதங்களின் பிரகாரம் இத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
இவ் இழபறிநிலையினால் சிலமாதங்களில் நாடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலைமையில் குறித்த வேலைகள் தடைப்படுவதற்கும் நிதி திரும்பிச் செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் உள்ளமையால் மக்களின் விருப்பங்களுக்கு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அடையாளப்படுத்தப்பட்ட தேவைகள் சார்ந்த திட்டங்களை இதய சுத்தியுடன் நிறைவேற்றப்படவேண்டும்.
யாழ். மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளை தேசிய கட்சிகளுக்கு தாரைவார்த்துவிட்டு தற்போது புதிய அரசாங்கத்தில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான அதிகாரத்தை பெற்றுவிட்டு அதை மக்களுக்கு சாதமாக அவர்களின் விருப்பிற்கும் முன்னுரிமைக்கும் ஏற்றாற்போல் பயன்படுத்தாமல் தமது அரசியல் சுய இலாபத்திற்காக பயன்படுத்துவதை மக்கள் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை இந்த திட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் விரைவாக ஒரு கவனத்தினை செலுத்தி இந்த திட்டங்களை மீள திரும்ப விடாமல் இந்த பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்த பிரதேசங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இதனை உரிய சீர்திருத்தங்களுடன் மாற்றியமைக்க வேண்டும் அத்தோடு இந்த அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெற்றுள்ள சீர்கேடுகளை உரிய வகையில் விசாரணை செய்து அதற்காக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காலதாமதங்கள் போன்றவற்றிற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எமது மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படுகின்ற அபிவிருத்திகள் என்றவகையில் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக அவர்களது பிரதேசங்களை மேம்படுத்த கூடியதாக அமைய வேண்டுமே தவிர தனி நபர்களுடைய அல்லது கட்சிகளுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதாக அமையக்கூடாது. இந்த வேலைத்திட்டங்கள் மக்களின் வரிப்பணத்தில் தான் இடம்பெறுகின்றனவே தவிர ஆட்சிக்கு வரும் எவருடைய தனிப்பட்ட பணத்திலும் அபிவிருத்தி நடைபெறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் இப்போதுதான் உள் நுழைகிறது. வெகு வேகமாகப் பரவுகிறது. இதுவரை 25 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்திருக்கிறது. இதில் 99% பேர் சீனர்கள்தான். நோயின் கொடுங்கரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாடுபடுகிறது சீனா. இந்த வைரஸைக் காட்டிலும் வேகமாகப் பரவும் விஷயங்கள் இரண்டு: வதந்தியும் சீனாவின் மீதான வன்மமும்.
ஜனவரி தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவு இது: ‘இந்த கரோனா வைரஸின் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில், இது சீனாவில் தயாரிக்கப்பட்டது.’ கூடவே, பொங்கிச் சிரிக்கிற மஞ்சள்நிற வட்ட முகச் சித்திரங்கள் இரண்டு. அதாவது, இது நகைச்சுவை என்றறிக என்கிறார்கள் இதை எழுதியவர்களும் அனுப்பியவர்களும். இதேரீதியிலான இன்னொரு பதிவு: ‘சீனர்கள் கண்டதையும் தின்றதால்தான் அங்கே கரோனா வைரஸ் பரவியது என்கிறார்கள். சீனர்கள் கண்டதையும் தின்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் நான்கு கால்கள் உள்ளவற்றில் ஒன்றையும் பறப்பனவற்றில் ஒன்றையும் தின்பதில்லை. அவை முறையே நாற்காலி, விமானம்.’ இதற்குக் கீழேயும் நகைக்கும் சித்திரங்கள்.
தமிழர்களும் விதிவிலக்கு அல்ல
மேலே சொன்ன பகடிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அயல் நாடுகளில் உருவானவை. தமிழ்ப் பதிவர்களும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் அல்லர். ஒரு பதிவு இப்படி ஆரம்பிக்கிறது: ‘சீனா இதற்கு முன் பல முறை இதே போன்ற கொடிய நோய்த்தொற்றால் அவதிப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் தமிழ்ச் சித்தர்களான போகரும் போதிதர்மரும் நம் நாட்டிலிருந்து அங்கு சென்று மூலிகை வைத்தியம் செய்து சீன தேசத்தையே உயிர்ப்பித்தனர்.’
பதிவரின் உத்தேசம் பகடியல்ல என்பது தொடர்ந்து வரும் வரிகளால் தெரிகிறது. ‘இந்த வைரஸுக்கு மருந்தே இல்லை என்று சொல்கிறது உலகம். ஆனால், நமது சித்த வைத்தியம் எப்பேர்ப்பட்ட வைரஸையும் குணமாக்கும். பீர்க்கங்காய் பிஞ்சு ஒன்றைச் சிறு துண்டுகளாக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து தேவைக்கேற்ப உப்பும் ஒரு டம்ளர் தண்ணீரும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகவும். பத்தியமெல்லாம் கிடையாது.’ அமெரிக்க விஞ்ஞானிகள் கோவிட்-19-ன் மரபுக் கட்டமைப்பைக் கண்டறிந்து, முறிவைக் கண்டுபிடிக்க மூன்று மாத காலத்தை இலக்காக நிர்ணயித்துக்கொண்டிருக்கிறார்கள். 2003-ல் இதேபோன்ற ‘ஸார்ஸ்’ எனும் தொற்றுநோய் தாக்கியபோது முறிவைக் கண்டடைய 20 மாதங்கள் வேண்டியிருந்தன. இதோடு ஒப்பிடும்போது, விஞ்ஞானிகள் இப்போது நிர்ணயித்துக்கொண்டுள்ள இலக்கு எத்தனை சவாலானது என்று ஊகிக்கலாம்.
டிசம்பர் மத்தியில் சீனாவின் வூகான் நகரின் மீன்களும் விலங்கு இறைச்சியும் விற்கிற பிரதானச் சந்தையிலிருந்து நோய்த் தொற்று தொடங்கியிருக்க வேண்டும் என்று கணித்திருக்கிறார்கள். தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சந்தைக்கு வந்துபோகிறவர்களாக இருந்தார்கள். விரைவில், இந்த வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றக் கற்றுக்கொண்டிருந்தது. ஜனவரி முதல் வாரத்தில் நேர்ந்த மரணங்களுக்கு இந்த வைரஸே காரணம் என்று கண்டறியப்பட்டது. ஜனவரி மூன்றாம் வாரத்தில் வூகான், புறவுலகிலிருந்து துண்டிக்கப்பட்டது. விரைவில், வூகானைச் சுற்றியுள்ள பல நகரங்களுக்கான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுமார் 6 கோடி மக்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இது வரலாற்றில் முன்மாதிரி இல்லாதது. 2003-ல் ‘ஸார்ஸ்’ ஹாங்காங்கின் அமாய் தோட்டம் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பில் பரவியது. இது கண்டறியப்பட்டபோது, ஹாங்காங் அரசு அந்தக் குடியிருப்பில் வசித்தவர்கள் அனைவரையும் நகருக்கு வெளியே அழைத்துச் சென்றுத் தனிமைப்படுத்தியது. தனிமைப்படுத்துவது என்பது அப்படித்தான் நடக்கும். இப்படி ஒரு மாநிலத்தின் பெருவாரி மக்களை மொத்தமாகத் தனிமைப்படுத்துகிற துணிவும் சக்தியும் உலகில் வேறு எங்கும் சாத்தியப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.
இரண்டு வாரக் கெடு விதித்துக்கொண்டு 2,300 படுக்கைகள் கொண்ட இரண்டு பெரிய மருத்துவமனைகளை வூகான் நகரில் கட்டி முடித்திருக்கிறது சீன அரசு. என்றாலும், அவையும் போதுமானதாக இல்லை என்கின்றன அங்கிருந்து வெளியாகும் செய்திகள். இந்த யுத்தத்தில் எதிரியோடு முகங்கொடுத்துப் போராடும் மருத்துவர்களும் தாதியர்களும் களப்பலி ஆகிறார்கள். இது தெரிந்தும் வைரஸின் கொடுங்கரம் நீண்டிருக்கும் இடங்களுக்கு மருத்துவர்கள் அழைக்கப்படுகிறார்கள்; வருகிறார்கள் லியூ யூ மருத்துவர் ஷாங் சி நகரிலிருந்து வூகான் வந்திருக்கும் 137 மருத்துவர்களில் ஒருவர். லியூ பேரிடர் பணிகளுக்குப் புதியவர் அல்லர். 2003-ல் ‘ஸார்ஸ்’ தாக்குதலின்போதும், 2008 வென்சுவான் நிலநடுக்கத்தின்போதும், 2010 யுஷூ நிலநடுக்கத்தின்போதும் மீட்புப்பணி ஆற்றியவர்.
நாடு முழுவதும் ஓரணியில்
நோயாளிகளும் அவர்தம் குடும்பத்தினரும் துப்புரவுப் பணியாளர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் ராணுவ வீரர்களும் விஞ்ஞானிகளும் பத்திரிகையாளர்களும் மருத்துவர்களும் தாதியர்களும் அரசு ஊழியர்களும் ஒற்றைக் கட்டாக நின்று போரிடுகிறார்கள். இந்த வேளையில்தான் சீனாவுக்கு எதிரான வன்மமும் வதந்தியும் பரப்பப்படுகிறது.
சீனா உயிர்க்கொல்லி வைரஸ்களைச் சோதனைச்சாலைகளில் உற்பத்திசெய்கிறது என்றொரு வதந்தி காற்றில் பரவியபடி இருக்கிறது. சீனர்களின் உணவுப் பழக்கத்தைக் கிண்டலடிக்கும் பதிவுகளுக்கும் குறைவில்லை. நம்மிடையே சைவ உணவு சாப்பிடுகிற சிலர், தாங்கள் அசைவ உணவுக்காரர்களைவிட மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆட்டுக்கறி சாப்பிடுகிற சிலர் மாட்டுக்கறி சாப்பிடுகிறவரைக் கீழானவராகக் கருதிக்கொள்கிறார்கள். இரண்டும் சாப்பிடக்கூடிய ஒருவருக்குப் பன்றியிறைச்சி தாழ்வானதாக இருக்கிறது. உணவு என்பது அவரவர் தேர்வு. அவரவர் பண்பாட்டையும் நிதி நிலையையும் சூழலையும் பொறுத்து அமைவது. இதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் சரியாகுமா?
சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
அதுபோலவேதான் சீனத் தயாரிப்புகள் விரைவில் காலாவதியாகும் என்கிற நையாண்டியும். இப்படிப் பகடிசெய்கிறவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். சீனா உலகின் தொழிற்சாலையாக விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள வணிகர்கள்தான் இன்ன தரத்தில் பொருட்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது, பொருட்களின் தரத்தை நிர்ணயிக்கிறார்கள். வணிகர்கள் கேட்கிற தரத்தில் அதற்கேற்ற விலையில் பொருட்களை உற்பத்திசெய்கிறது சீனா. அவற்றுள் தரமான பொருட்களும் இருக்கும். தரம் தாழ்ந்தவையும் இருக்கும். இரண்டுக்கும் வெளிநாட்டு வணிகர்களே பொறுப்பு. இந்தியா போன்ற மனிதவளம் மிக்க நாடுகள் தொழில் துறையில் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, நையாண்டி செய்வது, அதுவும் சீனா புண்பட்டு நிற்கிற இந்த வேளையில், நாகரிகமாகாது.
சீனா முகம் தெரியாத அரக்கனோடு போரிடுகிறது. அரக்கனின் கரங்கள் சீனாவுக்கு வெளியேயும் நீள்கின்றன. நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில், நமது நல்லெண்ணத்தையும் சீனர்கள்பால் அருள வேண்டும். அதன் முதல் படி வன்மத்தையும் வதந்தியையும் பரப்புவதை நிறுத்திக்கொள்வதுதான்.
– மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.தொடர்புக்கு: [email protected]உணவு என்பது அவரவர் தேர்வு. அவரவர் பண்பாட்டையும் நிதி நிலையையும் சூழலையும் பொறுத்து அமைவது. இதில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் சரியாகுமா?
பிரிட்டன் புதிய நிதியமைச்சராக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார், இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக நியமித்துள்ளார்.
டிசம்பர் 2019 தேர்தல் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித் ராஜினாமா செய்தது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சாஜித் ஜாவித் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் தனது 5 ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நிபந்தனை வைத்தார், ஜாவித் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தது பிரிட்டன் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஹாம்ப்ஷயரில் பிறந்த ரிஷி சுனக்கிற்கு வயது 39. யார்க்ஷயர் ரிச்மோண்ட் எம்.பி.யாக ரிஷி 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். உள்நாட்டு அரசில் அவர் ஜூனியர் அமைச்சராக இருந்தவர் கடந்த ஆண்டு கருவூல தலைமைச் செயலராகப் பதவி உயர்வு பெற்றார்.
ரிஷி சுனக், இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவைத் திருமணம் செய்து கொண்டார். ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட்டை பெருமளவு ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ படைவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும் அங்கிருந்து படை தலைமையகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இன்று முற்பகல் 10.00 மணியளவில் குறித்த மாணவர்கள் இராணுவ தலைமையகம் நோக்கி
சிறப்பு பேருந்து மூலம் வீடுகளுக்கு அனுப்பிவையப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
அங்கு படைத்தளபதி தளபதி சில்வாவை சந்தித்த பின்னர் தமது வீடுகளை நோக்கி செல்லவுள்ளனர்.
கொவிட் – 19 வைரஸ் தொற்று ஆரம்பமான சீனாவின் வுஹான் நகரில் தங்கி கல்வி கற்றுவந்த குறித்த 33 இலங்கை மாணவர்களும் இம்மாதம் முதலாம் திகதி சிறப்புவிமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதன் பின்னர், தியதலாவை படைவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மெட்டேரி தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையைக் கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசு மாசற்ற எரிசக்திக்கு ஆதரவளிப்பதால் நீண்டகால நடவடிக்கை ஊடாகவே இவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று இலங்கையில் அணு சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரு அரசுகளுக்கும் இடையிலான ஒற்றுமையையும், பொருளாதார வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று பரபரப்பான சூழ்நிலையில் இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 அளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, சமகால அரசியல் நிலைவரம், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான புதிய கூட்டணி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இடம் பெற்றது. இதன்போது, கூட்டணியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கச் செயற்குழுவின் அனுமதி வழங்கியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனைப் பகுதியில் நேற்று(12) மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டதாக அறியப்படுகின்றது.
மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்களை கொன்று இங்கு புதைத்திருக்கலாம். சிறீலங்கா அரசு இதை மூடிமறைக்கவோ அல்லது பலநூறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் எலும்புகள் தான் கிடைத்துள்ளன என திசை திருப்பவோ முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன என தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதேவேளை மனித எலும்புகள் காணப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார், எலும்புக்கூடுகளை ஆய்வுக்குட்படுத்தி, இறந்தவர்களின் காலத்தை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பணியில் வரலாற்று மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆய்வு முடிவு வரும்வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பகிடிவதை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.
யாழ். மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மறைத்து சென்ற அடையாளம் தெரியாதோரால் நேற்று இரவு (12) பத்து மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வீட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வரப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை நேற்று ஆவாக்குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல் இல் செயற்பட்டு வரும் இளைஞர்கள் தங்கள் முகநூலில் “தமிழர்களின் அடையாளமாகக் காணப்படும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடத்தப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது செயற்பாடுகள் இடம்பெறும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர்கள் தமது அரசியல் பெருவிருப்பினை சுதந்திரமாக முன்வைப்பதனை தண்டனைக்குரிய குற்றமாக கொள்கின்ற சிறிலங்காவின் ஆறாம் திருத்தச்சட்டத்தினை சமீபத்தில் மறைந்த முன்னாள் யாழ் முதல்வர் ராஜா விசுவநாதன் நிராகரித்திருந்ததோடு, அதன் மீது சத்தியப்பிரமாணம் எடுக்க மறுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக இருந்துள்ளதோடு, தனது பதவிக்காலத்தில் சிறிலங்காவின் பிரதமர் ஒருவரை வரவேற்க்க மறுத்த நெஞ்சுரம் கொண்ட துணிச்சல்மிக்க ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமரர் ராஜா விசுவநாதன் தொடர்பில் அன்றை காலகட்டத்தில் வெளிவந்த முக்கியமான ஆங்கிய பத்திரிகையொன்றின் பத்தியொன்று பின்வருமாறு கூறுகின்றது :
ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவர் அதே நேரத்தில் வெற்றிகரமான மேயராகவும் இருக்க முடியுமா? முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிரதமர் யாழ் நகரத்துக்கு வருகை தந்த போது அவருக்கு நகராட்சி சார்பில் வரவேற்புக் கொடுக்க மறுக்கும் நெஞ்சுரம் கொண்ட நகர மேயர் ராஜா விசுவநாதனைப் போன்ற ஒரு மேயர் நகர மேம்பாட்டுக்குச் சிறிதாவது அரசின் ஆதரவும் நிதியுதவியும் கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
1979 ஜூன் மாதம் மேயராகப் பதவிப் பொறுப்பேற்ற போதே திரு விசுவநாதன் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஊழலுக்கு எள்முனையளவும் இடந்தராதவர் என்று பெயர்பெற்ற சட்டத்தரணியும் மேயருமான அவர் தம் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் வேறொரு கசப்பான உண்மையை உணர்ந்திருக்கிறார். மெய்யாகவே ஈழக் குறிக்கோளில் நம்பிக்கை கொண்ட ஒருவராக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நகராட்சி அரசியலில் வெகுவாக முன்சென்று விட முடியுமென எதிர்பார்ப்பதற்கில்லை என்பதே அந்தக் கசப்பான உண்மை.
திரு விசுவநாதனின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதக் காலம்தான் உள்ளது என்ற நிலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உயர்தலைமை அவரைக் கைகழுவக் காரணம் அவர் யாழ் நகரத்துக்கு நல்லதொரு நிர்வாகம் வழங்கத் தவறி விட்டார் என்பதாக இருக்குமானல் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈழச் சிக்கலில் உறுதியான நிலையெடுத்து விட்டுக்கொடுக்காமல் நின்றார் என்பதால் நகராட்சி அரசியலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமைக்கு ஒத்துவராதவராகிப் போனதே காரணம் என்றால் இரங்கத்தக்க நிலைதான் என்பது உறுதி.
ஓராண்டுக்கு மேலாயிற்று, 1982 மார்ச்சு 13 சாட்டர்டே ரெவ்யூ இதழ் அதன் பின்பக்கத்தில் ‘அமைச்சருக்குத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மரியாதை, யாழ் மேயர் புறக்கணிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. காணிவளத் துறை அமைச்சர் காமினி திசநாயகா கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வருகை புரிந்தது பற்றிய செய்தி அது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதுபெரும் தலைவரும் மாவட்ட வளர்ச்சி மன்றத் தலைவருமான நடராஜா அமைச்சருக்கு மாலைமரியாதை செய்வதற்காக கிளிநொச்சிக்கே சென்றார், மற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ ஒரு வகையில் அமைச்சர் வருகையில் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டார்கள் என்னும் அதே நேரத்தில் மேயர் விசுவநாதன் மட்டும் விலகிநின்று பெருமை பெற்றார். சுப்ரமணியம் பூங்காவில் காற்றாலை நிறுவப்பட்டது தொடர்பான வரவேற்பு விழாவில் கூட அவர் பங்கேற்க மறுத்து விட்டார். அவருக்குத் தெரியாமலே இந்த விழா நடத்தப்பட்டு, அதற்குச் சற்றொப்ப 4,000 ரூபாயும் செலவிடப்பட்டது. நாம் வெளியிட்ட செய்தி, பாவம், அந்த மேயருக்குச் சங்கடத்தையே ஏற்படுத்தியது என்று அந்த நேரம் இந்த இதழின் ஆசிரியருக்குத் தகவல் கிடைத்தது.
மேயரின் உள்ளத்தில் நியாயமாகவே கசப்புண்டாகக் காரணம்: தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வெளிப்படையாக அறிவித்துள்ள கொள்கைப்படி நிலையெடுத்தமைக்காக அவர் பழிசுமந்து நின்றார் என்பதே. தலைமையமைச்சர் யாழ் வருகையின் போது அவரைப் பெருமைப்படுத்த நகராட்சி வரவேற்பு நல்க திரு விசுவநாதன் மறுத்து விட்டார் என்றால், சரி, அதுதான் கட்சி வகுத்துக் கொடுத்த கொள்கைவழி. எங்கள் மேயர் கட்சிக் கட்டளைப்படியே செயல்படுகிறார் என்று தலைமையமைச்சரிடம் சொல்ல தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்குத் துணிவுண்டா? இல்லை என்றே வேண்டியுள்ளது.
‘பிரதமரை வரவேற்க மறுத்து அவருக்கு வருத்தமளித்த பின் அவரிடமிருந்து சலுகைகள் கிடைக்கும் என்று மேயர் எதிர்பார்க்க முடியாது.’ சாட்டர்டே ரெவ்யூ இது குறித்துக் கேட்ட போது மேயர் ஆதங்கப்படுகிறார்:
‘உள்ளாட்சி அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது நிதி வழங்குவதாக உறுதியளிப்பார்கள், ஆனால் பிறகு வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடிய வில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி விடுவார்கள். நீர் வழங்குவதில் யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோரின் தேவைகளை நிறைவு செய்ய நிதி வழங்குவதாகத் பிரதமர் உறுதியளிக்கிறார். திட்டத்தைச் செயலாக்க அதிகாரிகள் கால அவகாசம் கேட்கிறார்கள். யாழ்ப்பாணத்து வரி செலுத்துவோருக்குப் போதிய மின்சாரம் வழங்கக் கிட்டத்தட்ட எட்டு மின்மாற்றிகள் தேவை. கம்பிகள் பழசாகி விட்டன, அவற்றுக்கு மாற்றாகப் புதிய கம்பிகள் பொருத்த வேண்டும், ஆனால் உள்ளாட்சித் துறையிடமிருந்து தேவையான நிதி கிடைக்காத நிலையில் இந்தத் திட்டங்களைச் செயலாக்க வழியில்லை என்று மின்பொறியாளர் சொல்கிறார்.
மருத்துவமனைச் சாலையின் நிலையை மேயர் எடுத்துக்காட்டினார். தருவதாக உறுதியளித்த தார்ப் பீப்பாய்களை அவர் எடுத்துக் கொள்ள விரும்பிய போது, உறுதியளித்த தார் கண்டிக்குத் திருப்பி விடப்பட்டதாகக் கூறிவிட்டனராம். யாழ்ப்பாணத்துக்கான மூடிய கழிப்பறைத் திட்ட்த்தைச் செயலாக்கத் தேவையான நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லையாம்.
‘ஆக்கிரமிப்பு’ செய்யப்பட்ட தமிழ் நகரம் யாழ்ப்பாணத்தையும், ஈழம் பற்றிப் பேசும் அதன் மேயரையும் பொறுத்து சிறிலங்க அரசதிகாரிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு குறித்து மேயருக்குள்ள இக்கட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விசுவநாதனுக்குப் பிடிபடாமல் இருப்பதும் அவரைக் காயப்படுத்துவதும் அவரது சொந்தக் கட்சியின் உயர் தலைமையும் நிர்வாகிகளும் கூட ஒத்துழைக்கவில்லை என்பதே. யாழ்ப்பாணம் கடைத் தெருவில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சிற்றுந்து நிலையத்தை அஞ்சலகம் எதிரில் யாழ் மைதானத்துக்கு மாற்றலாம் என்ற அவரது கருத்துக்கும் கூட அவர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
துரையப்பா அரங்கம் சரிவரப் பராமரிக்கப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அதனை உலங்கு வானூர்திகளின் தரையிறக்கத்துக்குப் பயன்படுத்தும் போது. பராமரிப்பது எப்படி?
வரிசெலுத்துவோர் சிலரின் தரப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியில் காலஞ்சென்ற திரு ஆல்பிரெட் துரையப்பா மேயராக இருந்த போது செய்த பணியை ஒப்புநோக்கும் போக்கு காணப்படுகிறது. திரு துரையப்பா ஆளும்கட்சியின் தீவிர உறுப்பினராகவும் உள்ளூர்ப் பிரதிநிதியாகவும் இருந்தார், கொழும்புவில் அதிகார பீடங்களோடு உடனுக்குடன் நேர்த் தொடர்பில் இருந்தார் என்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. கொழும்புவிலிருந்து அரசியல் சலுகைகள் எதிர்பார்க்க முழு உரிமை படைத்தவராக இருந்தார், இறுதியில் அதற்கு விலையாக உயிரையே தந்து விட்டார். எல்லாம் சேர்ந்து புகட்டும் நீதி ஒன்றே ஒன்றுதான்: தமிழ்த்தேசம் முழுவதன் உரிமைகளை விட்டுக்கொடுப்பதன் மூலமே நகரத்தின் வரிசெலுத்துவோருக்கு நன்மைகள் பெற்றுத்தர இயலும். ஒருபுறம் தமிழர்களிடம் ஒரு பகிரங்கத் தோற்றமும், மறுபுறம் ஆட்சியாளர்களிடம் அந்தரங்கமாக வேறு தோற்றமும் காட்டத் தயாரில்லை என்றால் எந்த மேயரும் இந்த அரசியல் தர்மசங்கடத்துக்கே முகங்கொடுக்க வேண்டியிருக்கும். திரு விசுவநாதன் தம் சொந்தக் கட்சியின்பால் கசப்பும் கடுஞ்சோர்வுமான உணர்வுடன் பதவிக்காலத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருப்பது இரங்கத்தக்க நிலைதான் – ஆனால் இப்போதும் அவர் அக்கட்சியின் உண்மையுள்ள உறுப்பினராகவே இருந்து வருகிறார்.
இவ்வாறு அப்பத்திரிகை அன்றைய காலகட்டத்தில் மறைந்த அமரர் ராஜா விசுவநாதன் பற்றி எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
ஒளிப்படம் :
நிழல்படம் : யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களது இசை நிகழ்ச்சியின் போது அவரை வரவேற்று உரையாற்றிய வேளையில் எடுக்கப்பட்டது.