Home Blog Page 2423

பல்வேறு கோரிக்கைகளுடன் ஆரம்பித்த சக்கரநாற்காலி பயணம் வவுனியாவில் முடிவுற்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரண்டாம் திகதி காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்த சற்கர நாற்காலிபயணமானது இலங்கையின் பல பகுதிகளிற்கு சென்று இன்று(18) வவுனியாவில் முற்றுப்பெற்றது.

இந்நிலையில் வவுனியா பொது அமைப்புகளால் அவர்களிற்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொகமட்அலி மற்றும் ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்திர(தவிர்க்க முடியாத காரணத்தால் இடைவழியில் பயணத்தை முடித்துகொண்டவர்) ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்தி இலங்கை முழுதுமான சுற்றுபயணத்தை சக்கரநாற்காலி மூலம் மேற்கொண்டிருந்தனர்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழிசமைக்க வேண்டும். நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொதுமலசலகூடங்கள், பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டிடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகலதுறைகளிலும் அணுகுவசதி ஏற்படுத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழில் ஆரம்பித்த குறித்த பயணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிற்கு சென்றிருந்துடன் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளமை குறிப்பிடதக்கது.

நேற்றயதினம் வவுனியாவில் தமது பயணத்தை முடித்துகொண்ட அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வாடிவீட்டில் இடம்பெற்றது. இதன்போது பயணத்தை மேற்கொண்ட இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாவது அவமானம்: மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குச் செல்வது எனக்கு அவமரியாதை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்ற போதிலும் மக்களின் வாக்குகளில் நாடாளுமன்றத்துக்கு வரத் தான் தீர்மானித்துள்ளேன். தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குச் செல்வது எனக்கு அவமரியாதை. பொலனறுவை மக்கள் தொடர்பாக எனக்கு பலத்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

மார்ச் 2 இல் கலைத்தால் ஏப்ரல் 25 இல் தேர்தல்; ஆணைக்குழு தகவல்

நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 11ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

அத்துடன், பொதுத் தேர்தலின் பின்னர் 9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் மே மாதம் 12ஆம் திகதி நடைபெறும் எனவும் அறியமுடிகின்றது.

மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் எனச் சட்டமா அதிபரும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தடை போதாது; விசாரணையும் வேண்டும்: சவேந்திர விவகாரம் குறித்து சிவாஜி

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரம் போதுமானதல்ல என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, இலங்கை சம்பந்தமாக பொறுப்பை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஊடாக, பாதுகாப்புச் சபைக்கு அனுப்பி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குறறம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றச் சாட்டுக்களை விசாரிக்க வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பலவந்தமாக காணாமல் போக செய்தமை போன்ற பல குற்றங்களை செய்துள்ளனர். தற்போதைய இராணுவ தளபதியே இராணுவத்தின் 58 வது படைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை அரசு மேற்கொண்ட தமிழ் இனஅழிப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இலங்கை அரசின் அனுசரணையில் இராணுவம் செய்த இந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நீதியை நிறைவேற்றுமாறு நாங்கள் நடந்த 10 ஆண்டுகளாக சர்வதேசத்தை வலியுறுத்தி வருகின்றோம். இலங்கை அரசிடம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எவ்வித நம்பிக்கையும் இல்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த பின்னர், இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 30/1 என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உள்நாட்டு பொறிமு றைக்குள்போர் காலத்தில் நடந்தவை குறித்து விசாரிப்பதற்காக இந்த யோசனை கொண்டு வரப்பட்டது.

எனினும் இதனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸில், யோசனையைச் செயற்படுத்த இலங்கை அரசுக்கு இரண்டு முறை, தலா இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கியது. அதனை தவறான செயலாக நான் காண்கின்றேன். இப்படியான நிலைமையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பாராட்டப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும், போர் குற்றங்கள், மனித உரிமைகளை மீறி எமக்கு செய்த அநியாயத்திற்கு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னால் நியாயமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது எமது கோரிக்கை” என்றார்.

பொதுத் தேர்தலில் ‘மொட்டு’ தனியாகவா கூட்டாகவா? மார்ச் 19 இல் முடிவு என்கிறார் பசில்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி என்ற கூட்டணியில் போட்டியிடும்போது பங்காளிக் கட்சிகளைச் சேர்த்தா, தனித்தா போட்டியிடுவது என்பதனை தீர்மானிக்க மார்ச் 19 ஆம் திகதி வரை பொறுத்திருக்குமாறு அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ கேட்டுள்ளார்.

ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரக் கட்சியின் சார்பில் இதில் கலந்துகொண்டார்.

அப்போதே இந்த விடயத்தை பஸில் தெரிவித்துள்ளார். அதற்குள் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார் . இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தொண்டமான் சில இடங்களில் கூட்டாகவும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுவது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஆளுங்கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் சில இடங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாமெனத் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா இங்கு குறிப்பிட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும் பான்மை ஆதரவு தேர்தலில் சில சமயம் கிடைக்காத பட்சத்தில் தனியே கேட்கும் பங்காளிக் கட்சிகளை இணைத்து தேசிய அரசொன்றை அமைக்கலாமெனவும் அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் ஈ.பி.டி.பி. மற்றும் சில கட்சிகளை இணைத்து தேசிய அரசமைக்கலாமெனவும் பிரதமர் மஹிந்த இங்கு தெரிவித்தார்.

தொழிலற்ற ஒரு லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது குறித்து இங்கு பேசப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இவற்றை வழங்க வேண்டுமென ஒரு தரப்பும் தேர்தல் முடிந்தகையோடு இவற்றை வழங்கலாம் என இன்னொரு தரப்பும் இங்கு கூறியமையால் அதனை ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டது.

சவேந்திர மீதான தடையை வரவேற்பது தேசத் துரோகம்: விக்கி மீது தயாசிறி பாய்ச்சல்

நிரூபிக்கப்படாத போர்க் குற்றச்சாட்டுகளைக் காரணங்காட்டி இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை வரவேற்கின்றார் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை தேசத்துரோகக் கருத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “புலம்பெயர் தமிழர்களைப் போன்று விக்னேஸ்வரன் போன்றோர் உள் நாட்டிலிருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தம் போதுமானதாக இருக்கவில்லை: பிரித்தானிய எம்.பி.க்கு சம்பந்தன் விளக்கம்

இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சம்பந்தன் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இடம்பெறும் வரையில் தமிழ் மக்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கவில்லை என தெரிவித்த சம்பந்தன், எவ்வாறெனினும் அரசியலமைப்பின் 13வது திருத்தசட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தனி நாட்டு கொள்கையை தமிழ் மக்கள் கைவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

13வது திருத்தச்சட்டம் ஒரு முன்னேற்றகரமான ஒரு படியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அதிகாரபரவலாக்கத்திற்கு அது போதுமானதாக இருக்கவில்லை, இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் 13வைத்து திருத்த சட்டத்தையும் தாண்டிய ஒரு அதிகாரபரவலாக்கத்திற்கு அடிகோலும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. பல வரைபுகள் முன்வைக்கப்பட்டாலும் இன்று வரை ஒரு தீர்வினை நாம் கண்டுகொள்ளவில்லை எனவும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

சிறீலங்கா அரசிடமிருந்து 2100 மீனவர்கள் 381 படகுகள் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு தகவல்

இந்திய வெளியுறவு அமைச்சின் தீவிர முயற்சியால், 2014ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட 2100 மீனவர்களும் 381 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மறுவாழ்விற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரின் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மீனவர்கள் மறுவாழ்விற்காக தமிழக அரசிற்கு கடந்த 5 ஆண்டுகளில், வழமையாக வழங்கப்படும் 184 கோடியே 93இலட்சம் ரூபாயுடன் 300 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடித்தல் உதவி என்னும் பெயரில் பாரம்பரிய மீனவர்களுக்கு உதவியாக மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ், சிறீலங்கா அரசால் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை, சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்ட 2100 மீனவர்களும் 381 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவியுடனான திட்டங்களுக்கு மத்திய மாகாணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது

மத்திய மாகாணத்தில், இந்திய அரசின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இவரின் பொறுப்பிலேயே இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடு என்ற முறையில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை இலங்கைக்கு செய்து வருகின்றது. அதன்படி ஹட்டன் பகுதியில் ஒய்யா தோட்டப் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமானத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ரமேஸ் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 14ஆயிரம் வீடுகள் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இதேநேரம் தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்திற்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த பயிற்சி மையம், இந்திய அரசு நிதியுதவியாக வழங்கிய 199 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது. அத்துடன் இந்த பயிற்சி மையத்திற்கு தேவைப்படும் இயந்திரங்கள், புதிய படிப்புகளுக்கான இயந்திரங்கள், தளபாடங்கள், வாகனங்கள் ஆகியவையும் இந்திய அரசின் நிதியுதவியில் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி மையத்தின் மூலம் எண்ணற்ற இலங்கை இளைஞர்கள் தொழில் பெற்று தங்களுக்கு ஏற்ற ஒரு துறையில் நுழைந்து தங்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற உதவும்.

இந்தியா 560 மில்லியன் அமெரிக்க டொல்கள் வரையான நிதியை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இதன்படி இலங்கை இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, தொழிற் திறன், பயிற்சி அளிக்கும் வகையில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

வவுனியாவில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்.

வன்னிமாவட்டத்தின் வனவள திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும், வனவிலங்குகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, தீர்க்கும் விதமான கலந்துரையாடல் ஒன்று வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது வனவள திணைக்களத்தினால் காணிகள் விடுவிக்கப்படாமையினால் பல்வேறு காணிகளிற்கான அனுமதி பத்திரங்களை பொதுமக்களிற்கு வழங்கமுடியாமல் இருப்பதாக பிரதேச செயலாளர்களால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

DSC 0804 2 வவுனியாவில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்.

DSC 0805 2 வவுனியாவில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்.

DSC 0806 2 வவுனியாவில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்.

குறிப்பாக வவுனியா வடக்கு காஞ்சூர மோட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் மீளக்குடியமர்ந்த நிலையில் அவர்களது 400 ஏக்கர் அளவிலான காணிகள் வனவளதிணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்டகாலல்தின் பின்னர் மீளத்திரும்பிய மக்கள் தமது காணிகளை அடையாளப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக பொது அமைப்புகளால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

போரால் பொதுமக்கள் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் அவர்களது காணிகளில் காடுகள் வளர்ந்துள்ளமையால் அவற்றை வனவள திணைக்களம் எல்லையிட்டுள்ளதாகவும், எமது காணிக்குள் பழைய கட்டடங்கள், கிணறுகளின் எச்சங்கள் இருக்கும் நிலையிலும் அவை தொடர்பில் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கிராம பொது அமைப்புகளால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவை தொடர்பாக தொடர்புடைய திணைக்களங்களின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரிய அமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி இவ்விடயங்களில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால, வன்னிமாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.