தடை போதாது; விசாரணையும் வேண்டும்: சவேந்திர விவகாரம் குறித்து சிவாஜி

இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரம் போதுமானதல்ல என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, இலங்கை சம்பந்தமாக பொறுப்பை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஊடாக, பாதுகாப்புச் சபைக்கு அனுப்பி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குறறம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்றச் சாட்டுக்களை விசாரிக்க வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பலவந்தமாக காணாமல் போக செய்தமை போன்ற பல குற்றங்களை செய்துள்ளனர். தற்போதைய இராணுவ தளபதியே இராணுவத்தின் 58 வது படைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை அரசு மேற்கொண்ட தமிழ் இனஅழிப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இலங்கை அரசின் அனுசரணையில் இராணுவம் செய்த இந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நீதியை நிறைவேற்றுமாறு நாங்கள் நடந்த 10 ஆண்டுகளாக சர்வதேசத்தை வலியுறுத்தி வருகின்றோம். இலங்கை அரசிடம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எவ்வித நம்பிக்கையும் இல்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த பின்னர், இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 30/1 என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உள்நாட்டு பொறிமு றைக்குள்போர் காலத்தில் நடந்தவை குறித்து விசாரிப்பதற்காக இந்த யோசனை கொண்டு வரப்பட்டது.

எனினும் இதனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸில், யோசனையைச் செயற்படுத்த இலங்கை அரசுக்கு இரண்டு முறை, தலா இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கியது. அதனை தவறான செயலாக நான் காண்கின்றேன். இப்படியான நிலைமையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பாராட்டப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும், போர் குற்றங்கள், மனித உரிமைகளை மீறி எமக்கு செய்த அநியாயத்திற்கு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னால் நியாயமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது எமது கோரிக்கை” என்றார்.