பாராளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும்.
5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.
அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது.
அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடப்படு என தெரிவிக்கப்படுகின்றது.
19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய, பாராளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
அதன்படி நேற்று (01) நள்ளிரவு பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்துள்ள நிலையில் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்புத் தலைமைகளுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரவீந்திரன் உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக தமிழரசுகட்சி தலைமைகளுடன் தனித்தனியாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததாக மட்டக்களப்பு சிரேஷ்ட ஊடகவியலாளர் சாமித்தம்பிரவீந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று 01/03/2020 தமதுதொலைபேசிமூலமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர்மாவை.சேனாதிராசா, பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், இலங்கை தமிழரசு கட்சி சிரேஷ்டதலைவர்களான பொ.செல்வராசா, சீ.வி.கே.சிவஞானம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சீ.யோகேஷ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சிதலைவருமான பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மண்முனை தென் எருவில்பிரதேச தமிழரசு கட்சி தலைவர் மா.நடராசா ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி மூலமாக இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் தேர்தலில் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கு தமிழரசு கட்சி மூலம் மட்டக்களப்பில் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் தெரிவை பொறுத்தே அது அமையும் எனவும் குறித்த ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் வேட்பாளர்கள் கடந்த காலத்தில் உறுதியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காக செயல்பட்டவர்களாகவும் உறுதியானவர்களாகவும் சோரம் போகாதவர்களாகவும் இருக்கவேண்டும் என தான் அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
கடந்த 2012, மகாணசபைதேர்தல், 2015, பொதுத்தேர்தல்களில் பேரினவாத கட்சிகளில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்கள், அரசாங்க கட்சி அமைப்பாளர் பதவிகளை வகித்தவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்புவேட்பாளர்களாக யாரும் நிறுத்தப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் மட்டுமே பெறக்கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கருத்துக்களை அவதானமாக செவிமடுத்த சம்பந்தன், மாவைசேனாதிராசா, சுமந்திரன், துரைராசசிங்கம், சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தெரிவு முற்றுப்பெறவில்லை பல விண்ணப்பங்கள் மட்டக்களப்பில் இருந்து தமக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் மட்டக்களப்பில் உள்ளதமிழரசு கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்பே வேட்பாளர் விபரங்களை வெளியிட முடியும் எனவும்தாம் கூறிய ஆலோசனைகளை கவனத்தில் எடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்ததாக ஊடகவியலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ரெலோ சார்பாக இருவரும், புளட்சார்பாக ஒருவரும் ஏற்கனவேநியமிக்கப்பட்ட நிலையில் தமிழரசு கட்சி சார்பாக ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர் இவர்களில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட சீ.யோகேஷ்வரன், ஞா.ஶ்ரீநேசன் ஆகிய இருவருடன் இன்னும் மூன்று வேட்பாளர்கள் நியமிக்கப்பட வுள்ள நிலையில்13, விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் இன்று மாலை பிரமாண்ட விழா நடாத்தப்பட்டது.கல்லடி காலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் இந்த நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டது.
வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் ஒளவை விழாவாக சிறப்பாக நடைபெற்றது.
கதிரவன் பட்டிமன்ற பேரவையின் தலைவர் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவச்சாரியார்,அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் அழைத்துவரப்பட்டு தமிழ் பாட்டி ஒளவையின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் யோகாசன நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் ஒளவை விழாவினையொட்டி நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிவுகளும் வழங்கப்பட்டன.
மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் சேவா கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படைவசதிகள் இன்றியும் காணி உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படாத நிலையிலும் சொந்த வீடுகளிலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2012 ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டித்திட்டத்தின் அடிப்படையில் யுத்ததால் பாதிக்கப்பட்ட, கணவனால் கைவிடப்பட்ட, விதவைகள், ஊணமுற்றோர்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளிக்குக் காட்டுப் பகுதி ஒன்றை துப்பரவு செய்து இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டது.
இருப்பினும் வீடுகள் ஒழுங்கான முறையில் அமைக்கப்படாத காரணத்தால் தற்போது அனேகமான வீடுகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அது மாத்திரம் இன்றி அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீதிகள், வைத்தியசாலை என எதுவுமே 10 வருடங்கள் கடந்த நிலையிலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரத்தினை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு மாகாண காணி ஆணையாளரினால் கடிதம் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை வீடுகளுக்கான காணி ஆவணங்களோ உறுதி பத்திரங்களோ பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை எனவும் இவை தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் மக்களை மதிக்காது செயற்படுவதாகவும் இந்தியன் வீட்டு திட்டம் கணேசபுரம் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாகவும் மக்களுக்கான காணி உரிமைகள் தொடர்பாகவும் இன்றைய தினம் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளரும் காணி தொடர்பான நிபுணத்துவ ஆலோசகரும் காணி விசேட மத்தியஸ்தக சபையின் மட்டக்களப்பு மாவட்ட தவிசாளருமான K.குருநாதன் ஊடாக விசேட விளக்கமளிக்கும் கூட்டம் இடம் பெற்றது.
இதன்போது மக்களின் பிரச்சினைகளை தொடர்சியாக அலட்சியம் செய்யும் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு பதிவு செய்வது தொடர்பாகவும், அதே நேரத்தில் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாகவும் மக்களின் முடிவும் பரிசீலிக்கப்பட்டது.
40,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள தேசிய தேர்தல் ஆணையம் பொது நிர்வாக அமைச்சகத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தபால் சேவை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சுமார் 42,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பட்டதாரி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏற்கனவே சுமார் 15,000 நியமன கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டநிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
ஆனால் தமது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்பு திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்படவுள்ளது .
குறித்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவரால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் கடந்த 14 ஆம் திகதி அனுமதி கிடைத்தாக அரசாங்கம் அறிவித்தது.
இதேவேளை சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1500 ரூபா அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் நேற்றுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் சீனாவில் இன்று கொரோனா தாக்கி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 573 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 888 ஆகவும், வைரஸ் பரவியுள்ளோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. அந்நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண்ணுக்கு வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன் பெண் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்ட புதிய அனைத்துலக விமான நிலையம், தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றபோதும், அது தமிழ் மக்களிடம் அதிக பணத்தை அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானப் பயணம் ஒரு மணி நேரமும், 20 நிமிடங்களும் கொண்டது அதற்கான கட்டனம் 24,531 ரூபாய்கள், ஆனால் 33 நிமிடங்கள் எடுக்கும் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை 32,823 ரூபாய்களாகும்.
சிறீலங்கா அரசினதும், அதிகாரிகளினதும் இந்த பாரபட்ச நடவடிக்கையினால் தமிழ் மக்கள் கொழும்பு சென்றே சென்;னைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கையானது யாழ் விமானநிலையத்தை விரைவில் மூடும் நிலைக்கு கொண்டுவரும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, பலாலி அனைத்துலக விமான நிலையத்தை மேலும் தரமுயர்த்தும் நடவடிக்கைக்கு 300 மில்லியன் ரூபாய்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட விரும்புவதாக வடமாகாணத்தின் முன்னள் ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேட்பாளர்கள் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு ராகவனிடம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இன்று (01) வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும் கூட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அவர்களின் கடந்த நான்கு வருட செயற்பாடுகள் தொடர்பில் எம். ஏ சுமந்திரன் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.