பிரான்ஸ் வாழ் அராலி அண்ணா விளையாட்டுக் கழகம், மக்களின் பண உதவியின் மூலம் முதல் கட்டமாக ஒரு மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் யாழ் மாவட்டம் அராலியில் வாழும் அனைத்து மக்களுக்கும் (சுமார் 950 குடும்பங்களுக்கு) வழங்கியிருக்கின்றது.
கோவிட்-19- லண்டனில் இளம் தமிழ் ஊடகவியலாளர் பலி
கொரோனா தொற்றில் பல தமிழர்களும் அடுத்தடுத்து இறந்து வருகின்ற நிலையில் இலண்டனில் முதல் தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒருவரும் இன்று ஏப்ரல் 09, 2020 வியாழக்கிழமை பலியாகியுள்ளார்.
இவர் பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் (வயது 30) ஆவார்.
இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் என்பதோடு TTN தமிழ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.
பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர குடியுரிமை பெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய காரணத்தால் இலண்டன் சென்ற நிலையிலேயே இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி இறந்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இவரின் தாயார் மரணமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் ரம்யமான காட்சி- மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு
பௌர்ணமி தினமான கடந்த செவ்வாய்க்கிழமை(7) மிகப் பிரகாசமான பெரிய சந்திரனை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு தென்படாத போதிலும் கிழக்கு மாகாணத்தில் மிகப் பிரகாசமான சந்திரனாக செம்மஞ்சள் நிறத்தில் தென்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை(8) மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை கிழக்கு மாகாணத்தின் பெரிய நீலாவணை ,மருதமுனை ,கல்முனை ,சாய்ந்தமருது ,நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று ,பகுதிகளில் மிகப்பிரகாசமாக சந்திரன் தென்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இவ்வருடத்தின் மிகப் பிரகாசமான சந்திரனாக இது தென்படும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ´சுப்பர் பிங்க் மூன் என´ இது அழைக்கப்படுகிற சந்திரன் தென்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரன் தனது சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகாக வரும்போது இந்த ´சுப்பர் பிங்க் மூன்´ தோன்றும் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.
ஏப்ரல் மாதத்தில் வரும் சுப்பர் பிங்க் மூன் ஆனது. எக் மூன், பிஷ் மூன் எனவும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்களில் எவரும் இல்லை ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !!
கொரோனா வைரஸ் காரணமாக சிறிலங்காவின் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது சிறிலங்கா அரசாங்கம் ‘ஓர் இனநாயக அரசு’ என்பதனை மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருந்தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, கடந்த மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை 2961 பேர் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாரகங்களுக்கான அமைச்சு, சிறிலங்கா அரசு என்பது ஓர் கட்டமைக்கப்பட்ட பௌத்த பேரினவான இனநாயக அரசு என்பதனை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்தில் சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டியிருந்தது.
தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே தமிழ்மக்கள் மீது அடக்குமுறையினையும், பாகுபாட்டையும், பாரிய மனிதஉரிமை மீறல்களையும், இனப்படுகொலையினையும் சிறிலங்கா அரசாங்கம் செய்திருந்தது.
‘பொருளாதார நலன்களை முன்னிறுத்தியதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்’-பேராசிரியர் சொம்ஸ்கி
‘பொருளாதார நலன்களை முன்நிறுத்தி எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டதே தற்போதைய அனர்த்தத்திற்கான காரணம்’ என தத்துவவாதியும், மசாசுற்றி பல்கலைக்கழகத்தின் மொழியியல் பேராசிரியரும், 120 இற்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியவருமான பேராசிரியர் நோம் சொம்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
Truthout என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தற்போது அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள தீவிர கொரோனா நெருக்கடி பற்றி அவர் கூறிய கருத்துக்களின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறோம்:
தற்போதைய கொரோனா வைரசின் தாக்கம் என்பது அதிர்ச்சிகரமானது, அதனை கையாள்வதில் அமெரிக்கா மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இவ்வாறான நோய்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் கடந்த பல வருடங்களாக எச்சரித்து வந்திருந்தனர். 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் நோய் கூட கொரோனா வைரசின் ஒரு வகை தான்.
அப்போது அதற்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் அதன் பரிசோதனை இடையில் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரம் தான் நாம் எம்மை இந்த அனர்த்தத்திற்கு எதிராக தயார்படுத்தியிருக்க வேண்டும். இந்த வைரசுக்கு எதிராக ஆரம்பகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால் விஞ்ஞான விளக்கங்கள் குறைவாகவே அன்று இருந்துள்ளது. யாராவது ஒருவர் இதனை முன்னெடுத்திருக்க வேண்டும்.
ஆனால் பொருளாதார நலன்களால் இந்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது. அதாவது எதிர்கால அனர்த்தத்தை தடுப்பதற்கான தயாரிப்புக்கள் மூலம் அவர்களுக்கு தற்போது லாபம் கிடைக்காது என்பதே சந்தை வாய்ப்பின் நிலை.
அரசு அதனை முன்னெடுத்திருக்க வேண்டும் ஆனால் ஆளும் அரசியல் கட்சிகளால் அது தடுக்கப்பட்டது. முடிவெடுக்கும் அதிகாரத்தை நாம் வியாபார உலகத்திடமே விட்டு விடுகிறோம். அவர்களில் இலாபத்தில் தலையிடும் உரிமையை பொதுநலவாதிகளுக்கு நாம் கொடுப்பதில்லை என முன்னர் அமெரிக்க அரச தலைவர் றொனால்ட் றீகன் சிறிய சிரிப்புடன் எமக்கு கூறியது தற்போதும் நினைவில் உள்ளது.
அன்றில் இருந்து புதிய தாராளவாத கொள்கை முதாலளித்துவத்திற்கு ஊட்டப்பட்டு அது சந்தை வாய்பாக மாறியது. அதன் விளைவு என்னவெனில் நாடகக்கரர்கள், படுகொலையாளிகள் மற்றும் தோல்வியுற்றவர்கள் என நாம் மாறியுள்ளோம். செயற்கை சுவாச உபகரணங்களின் (ventilators) பற்றாக்குறையே தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது.
ஆனால் இந்த பிரச்சனையை முன்னரே உணர்ந்த சுகாதர சேவைகள் திணைக்களம், செலவு குறைந்த, இலகுவாக பயன்படுத்தக்கூடிய செயற்கை சுவாச உபகரணங்களை தயாரிக்கும் பணியை ஒரு சிறிய நிறுவனத்திடம் வழங்கியது.
ஆனால் அங்கும் முதலாளித்துவம் தலையிட்டது.
கோவிடியன் என்ற பெரிய நிறுவனம் அந்த சிறிய நிறுவனத்தை வாங்கியது. ஆதன் பின்னர் செயற்கை சுவாச உபகரணங்களின் தயாரிப்பால் தமக்கு இலாபம் இல்லை என கூறி 2014ஆம் ஆண்டு அதன் உற்பத்தியை நிறுத்தியது. தமது இந்த திட்டத்தை அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
வியாபாரிகளின் புதிய தாராளவாதக் கொள்கைகள் தான் தற்போது அரசுகளை வழிநடத்துகின்றன. அவர்கள் தமது சந்தைகளை பாதுகாக்கின்றனர். அதுவே தற்போதைய பேரனர்த்தத்திற்கு காரணம். ஜே.பி மோர்கன் எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரும் வங்கியின் இரகசிய ஆவணம் என்ன கூறுகின்றது என்றால், மனிதாபிமானத்தை தக்கவைப்பது எமது கொள்கைகளுக்கு ஆபத்தானது என்று. இதில் வங்கி வைத்திருக்கும் எரிபொருள் முதலீடுகளும் உள்ளடக்கம். எனவே தான் செவ்ரோன் என்ற அமெரிக்காவின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனம் இலாபம் தரும் எரிபொருள் தயாரிக்கும் பணிகளை நிறுத்தி அதிக இலாபம் தரும் உலகில் உள்ள உயிர்களை அழிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
அதிக விலை கொடுத்தும், வறிய மக்களை பலி கொடுத்து கோவிட்-19 இல் இருந்து நாம் தப்பினாலும், பனிக்கட்டிகள் உருகி காலநிலையில் ஏற்படும் மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவை மிகப்பெரும் ஆபத்தாகவே உள்ளன.
தற்போதைய அனர்த்தம் தொடர்பில் அமெரிக்க அரசுக்கு முன்னரே தெரியும். எனவே தான் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் உயர் மட்டங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர்கள் இலபத்தையே அதிகம் பார்த்தனர் உயிர்களை அல்ல. அதாவது வரலாற்றில் மிகப்பெரும் குற்றம் இது.
இந்த நோய் தொடர்பில் டிசம்பர் 31 உலக சுகாதர நிறுவனத்திற்கு சீனா தெரிவித்திருந்தது. பின்னர் ஜனவரி 7 ஆம் நாள் இது கொரோனா வைரஸ் எனவும், அதன் பரம்பரை அலகை தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனை ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் டொனால்ட் டிறம்பினிடம் தெரிவிக்க அமெரிக்காவின் புலனாய்வுத்துறை முயற்சிகளை எடுத்தது ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அவர் எதுவும் செய்யாமல் இருக்கவில்லை. இது ஒரு சாதாரண இருமல் எல்லாம் எமது கட்டுப்பாட்டில் உள்ளன என மக்களுக்கு தெரிவித்தார். ஆனால் அவருக்கு இது ஒரு உலகை அச்சுறுத்தும் நோய் என்பது தெரியும். பொய்களால் உண்மையை மறைத்தனர்.
பெப்ரவரி 10 ஆம் நாள் அமெரிக்காவுக்குள் நோய் பரவியது. ஆனால் அந்த மாதம் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கான நிதி குறைக்கப்பட்டு படைத்துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டிருந்தது.
எனவே தான் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்யும் அளவு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருக்கின்றது. மிகத்தரமான வைத்தியசாலைகளில் கூட அடிப்படை உபகரணங்கள் இல்லை.
எனவே தான் கொரோனா நோயின் மையப்புள்ளியாக தற்போது அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளது.அமெரிக்காவின் தற்போதைய அனர்த்தத்திற்கு நாம் ட்ரம்ப் ஐ குறைகூறுவதை விட அவரை பதவிக்கு கொண்டு வந்த தகுதியற்ற சமூகத்தை தான் நாம் குறை கூறவேண்டும். அதனால் தான் எதிர்காலத்தில் அனர்த்தங்களை தவிர்க்க முடியும். ஏனெனில் இந்த சமூகம் 40 வருடமாக வேரூன்றிய புதிய தாராளவாதக் கொள்கைகளால் உருவாக்கப்பட்டது.
இது றீகன், மாக்கிரட் தச்சர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. முதலாளிகளின் வரியை விலக்கி அதனை மக்கள் மீது திணிப்பதே அன்று தொடக்கம் இன்றுவரை உள்ள அரசுகளின் கொள்கை. அதன் மூலம் தான் பங்குச்சந்தை முதலாளிகளை காப்பாற்ற முடியும். எனவே தான் இந்த உலகில் உள்ள 20 விகிதமான செல்வத்தை 0.1 விகித செல்வந்த மக்கள் கொண்டுள்ளனர்.
தமிழில்- ஆர்த்திகன்
கொரோனாவை அரசியலாக்க வேண்டாம்; டிரம்பிடம் உலக சுகாதார நிறுவனம்
கோவிட்-19 நோய்த்தொற்று விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான உலக சுகாதார நிறுவனத்திற்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்தவது குறித்து சிந்தித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, இது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் என்று சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.
முன்னதாக உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக உள்ளதாக அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். அதனை மறுத்த டெட்ரோஸ், “நாங்கள் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இருக்கிறோம். எந்த வித்தியாசமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதியுதவி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்கா அளிக்கும் நிதி, உலக சுகாதார நிறுவனத்தின் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதம் ஆகும்.
இந்நிலையில், புதன்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ, “உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்துவரும் நிதியுதவி மறுபரிசீலனை செய்யப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
“அமைப்புகள் முறையாக தங்களது பணியை செய்ய வேண்டும். அவர்களது நோக்கம் என்னவோ அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத் தலைவரின் ஆலோசகர் கூறுகையில், நோய்த் தொற்றின் ஆரம்ப கட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சீனாவுடன் நெருக்கமாக பணி செய்வது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
“உலக அளவில் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம். அமெரிக்கா, சீனாவிடம் இருந்து நேர்மையான தலைமை வேண்டும்,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார்.
“உலகின் சக்தி மிகுந்த நாடுகள் வழிநடத்த வேண்டும். இதனை அரசியலாக்காதீர்கள்” என புதன்கிழமை அன்று பேசிய அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக செவ்வாயன்று பேசிய டிரம்ப், உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு மிகுந்த ஆதரவாக, ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து ட்வீட் செய்திருந்த டிரம்ப், “அதிக நிதியுதவி செய்வது அமெரிக்கா என்றாலும், உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. நாங்கள் இதுகுறித்து நிச்சயம் நன்றாக சிந்திப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த, டெட்ரோஸ், தொடந்து தங்கள் அமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதியுதவி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
முன்னதாக உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவாக ஐநாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேசியிருந்தார்.
வைரஸ் தொற்று பரவலை “எதிர்பாராத ஒன்று” என்று விவரித்த அவர், இது எவ்வாறு கையாளப்பட்டது என்பதை எதிர்காலத்தில்தான் மதிப்பிட முடியும் என்று தெரிவித்தார்.
“தற்போது சர்வதேச சமூகம் சேர்ந்து ஒற்றுமையோடு வைரஸ் பரவலை தடுக்க பணியாற்ற வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங்கும், உலக சுகாதார நிறுவனத்திற்கு தன் ஆதரவை தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் தளர்வின்போது வவுனியா நகர் நிலவரம்.
கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை வவுனியாவில் 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் நகரசபையினால் நகரை அண்டிய பகுதிகளிலும், காமிணி மகா வித்தியாலய மைதானத்தினுள்ளும் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையினால் மக்கள் சுமுகமான முறையிலே பொருட்களை கொள்வனவு செய்தனர்.
வழமையைவிட இன்றைய தினம் நகரை நோக்கி வருகை தந்த மக்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்பட்டதை அவதானிக்ககூடியதாக இருந்தது.
மேலும் மருந்தகங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
நியூயோர்க்கில் அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி
கொரோனா வைரசின் தாக்கத்தினால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நாள் ஒன்றிற்கு ஏறத்தாக 2000 மரணிக்கின்றனர்.
இதுவரையில் அமெரிக்காவில் 14,800 பேர் மரணித்துள்ளனர். அங்கு நேற்று (8) மட்டும் 1973 பேரும் அதற்கு முன்தினம் 1939 பேரும் மரணித்துள்ளனர். எனினும் நியூயோர்க் நகரமே அதிக பாதிப்புக்களை சந்தித்து வருகின்றது அங்கு தினமும் 700 இற்கு மேற்பட்டவர்கள் மரணமடைகின்றனர்.
இந்த நிலையில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அமெரிக்க கொடியை அரைக்கம்பத்தில் தனது நகரத்தில் பறக்கவிடுமாறு ஆளுநர் உத்தரவுட்டுள்ளார்.
இதுவரையில் அமெரிக்காவில் 432,000 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 150,000 மேற்பட்டோர் நியூயோர்க்கில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை .
சித்திரைப்புத்தாண்டின் போது, பண்டிகை கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்த விசேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை. அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்துகள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் விவசாயம், சிறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் தமது தொழிலை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய பயணங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் 89 பேருக்கு கொரோனா பரிசோதனை!
உலகை உலுக்கும் கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்காவால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் தற்போதுவரை 189 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றுவரை 89 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவபீட பீடாதிபதி ரவிராஜ் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.