Home Blog Page 21

புத்தர் பிறந்த நேபாளத்தில் இரத்தம் ஓடும் அவலம்..! : பா.அரியநேத்திரன்

புத்தபகவான் பிறந்த நேபாளத்தில் தற்போது வன்முறைகள் அதிகரித்து போராட்டம் வெடித்து கலவரத்தால் இரத்தம் ஓடும் அவலம் தொடர்கிறது..

நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன கலவரக்காறர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை முதல் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எல்லாம் பதவி விலகியுள்ளனர், பதவிவிலகினாலும் அவர்களை அடித்து துரத்தி ஆற்றில் வீசப்படும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டுள்ளது.
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலாநாத் காநலின் மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ராகர் நேற்று (09/09/2025) செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்களால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

புத்தரின் போதனைகள் அன்பு, அகிம்சை, அமைதி மற்றும் துன்பத்தைத் தவிர்ப்பதை மையமாகக் கொண்டுள்ளன. ஆசை அல்லது பற்றுதான் துன்பத்திற்குக் காரணம் என்று அவர் போதித்தார். நான்கு உயர்ந்த உண்மைகளை வெளிப்படுத்தினார்: துன்பம், துன்பத்திற்கானகாரணம் (ஆசை), துன்பத்தை நீக்குதல், மற்றும் துன்பத்தை நீக்குவதற்கான வழி (எண்மடங்கு பாதை). புத்தர், அன்பு மற்றும் கருணை, அகிம்சை, எளிமையான வாழ்க்கை, தர்மம், தியானம், மற்றும் உலக இன்பங்களை விட்டுவிடுதல் போன்றவற்றை தனது போதனைகள் மூலம் உலகிற்கு வழிகாட்டினார்.

புத்தர் போதித்த தர்மத்தை நேபாளத்தில் அதர்மமாக காட்சி தருகிறது. புத்தபகவான் பிறந்த மண்ணில் இவ்வாறு அதர்மம் தலை தூக்கியது. பௌத்த மதத்தை அரச மதமாக கொண்டுள்ள இலங்கை நாட்டுக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது என்பது உண்மை.

பத்தர்பகவானின் போதனை வெறும் ஏட்டுச்சுரக்காயாக நேபாளத்திலும் மாறியதா என்று சிந்திக்க வைக்கிறது.

இளவரசர் சித்தார்த்தராக, இயற்பெயருடன் பிறந்த புத்தர் கி. மு. 563ஆம் ஆண்டு பிறந்தார் எனக் கருதப்படுகிறது. புத்தர் பிறந்த, நேபாளநாட்டில் சாக்கிய இராச்சியத்தில் உள்ள லும்பினியானது நேபாளத்தின் லும்பினி பகுதியின் தற்போதைய ரூபந்தேஹி மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கு இலங்கை விமர்சனம்

மனித உரிமைகளில் தங்களின் உள்நாட்டு முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறும் பிளவுகளை ஆழப்படுத்தும் வகையிலான தண்டனை வழிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொது விவாதமொன்றில் உரையாற்றிய இலங்கை பிரதிநிதி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதுடன் பல நாடுகள் களத்தில் செய்யப்பட்ட உறுதியான முன்னேற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானம் 60/251 ஐ நினைவூட்டிய அவர், களத்தில் வெளிப்படையான முன்னேற்றத்தை பல நாடுகள் ஒப்புக்கொள்வதை இலங்கை பாராட்டுகிறது என்று பிரதிநிதி கூறினார்.

“நாடு சார்ந்த சூழ்நிலைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், மேலும் கணிசமான முன்னேற்றங்களை அடைந்த நாடுகளுக்கு பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேற ஒரு பாதை உருவாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடு மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தினால் நிறுவப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் இலங்கை பிரதிநிதி விமர்சித்துள்ளார்.

இத்தகைய வழிமுறைகள் உள்நாட்டு சட்ட செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், இறையாண்மையின் கொள்கைகளை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் உள்நாட்டு வழிகள் மூலம் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தமிழரசு கட்சி கண்டனம்

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமை ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் கடந்த 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிக்கைக்கு, பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த கட்சி இதனைத் தெரிவித்துள்ளது.

‘தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ள போதிலும் எளிதில் செய்யக்கூடிய முயற்சிகள் கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை’ என்று தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடை சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.

அதற்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்று இலங்கை தமிழரசு கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் இலங்கை தமிழரசு கட்சி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 240 என்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக உள்ளதுடன் இங்கு கிடைக்கப்பெற்ற சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை.
இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை. மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது.

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இலங்கை தமிழரசுக்கட்சி இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறது என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி 150 மேலதிக வாக்குகளால் குறித்த  சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வட மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் – ஆளுநர் வேதநாயகன்

தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை  (10) இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை தெரியப்படுத்தியுள்ளனர். அவர்கள் இங்குள்ள நிறுவனங்கள் ஊடாகவே தமது முதலீட்டை மேற்கொள்வதற்கு விரும்புகின்றனர்.

இங்குள்ள இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான தொழிற் பயிற்சியை இங்குள்ள தொழிற் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் ஊடாக வழங்குவதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

எனவே அவர்கள் இங்கு எவ்வகையான முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் ஆராய்வதற்காகவே கலந்துரையாடல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்னரும் மீள்குடியேற்றம் தவிர்க்கப்படுவது ஏன்?

நாட்டில் போர் முடிவடைந்து  16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? என பாராளுமன்ற உறுப்பினருமான  சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பினார்.

மேலும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தை அண்மித்துள்ள நிலையில்,  வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது  நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் 13 கிராம அலுவலர் பிரிவுகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள், பலாலி இராணுவ முகாம் இராணுவத்தினரின் வருகை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 1990.06.15ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்தார்கள்.

இந்த இடப்பெயர்வு நிகழ்ந்து 35 வருடங்கள் கடந்தும். நாட்டில் போர் முடிவடைந்து 16 வருடங்கள் நிரம்பிய பின்னரும் இன்றுவரை மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ள அந்த மக்கள், இந்த நாட்டுக்குள்ளேயே இடைத்தங்கல் முகாம்களிலும்,உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் ஏதிலிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 2700 ஏக்கருக்கும் அதிக விஸ்தீரணமுடைய காணிகளைக் கொண்ட மயிலிட்டி, பலாலி, வசாவிளான்,கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், தையிட்டி, ஊறணி,தோலகட்டி உள்ளிட்ட பல பேரூர்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்தக் காணிகளில் குடியேறும் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே இன்றும் வாழ்கிறார்கள்,ஆட்சி மாற்றங்கள்,அரசு மாற்றங்களின் பின்னும் அவர்களது மீள்குடியேற்றம் சாத்தியப்படுத்தப்படாமை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரதும், அவர்களது பிள்ளைகளினதும்,  அடுத்த தலைமுறையினதும் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள  13 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்தும் கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, இன்றுவரை சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாது இந்த நாட்டுக்குள்ளேயே ஏதிலிகளாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் எத்தனை என்பதை அமைச்சர் அறிவாரா?

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், இந்த மக்களுக்குச் சொந்தமான எத்தனை ஏக்கர் காணிகள் இன்றளவும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், குறித்த காணிகள் ஏன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இந்த நாட்டில் போர் முடிவுற்று 10 ஆண்டுகளின் பின்னரும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன் என்பதையும்? இதனால் சொந்த மண்ணில் குடியேறி வாழ முடியாதவர்களாக அந்த மக்கள் படும் அவலங்கள் எத்தகையவை என்பதையும் அமைச்சரால் இச்சபைக்கு அறிவிக்க முடியுமா?

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தை அண்மித்துள்ள நிலையில், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இதுவிடயமாக,தங்கள் அமைச்சினால் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது சாத்தியமாகும் என்பதை இச்சபையில் பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா? அத்தகைய நடவடிக்கைகள் எவையேனும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனின் மேற்குறித்த மீள்குடியேற்ற விடயம் காலதாமதமாவதற்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? எனக்கேள்விகளை எழுப்பினார்.

இலங்கையின் பொறுப்புக்கூறலில் “உறுதியான முன்னேற்றத்திற்கு” பிரித்தானியா அழைப்பு

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலில் “உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கு” பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் சர்வதேச தரநிலைகளின்படி மனிதபுதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மீதான ஊடாடும் கலந்துரையாடலின் போது பிரித்தானியா இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையை பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் (Eleanor Sanders) முன்வைத்தார்.  இலங்கையின், “உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தின்” அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துதல் மற்றும் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்தல் உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் குறித்து அவர் கவலைகளை எழுப்பினார்.

இலங்கை அரசாங்கம் சில சட்டத்தை ரத்து செய்ய பொது உறுதிமொழிகளை அளித்த போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்து எலினோர் சாண்டர்ஸ் கவலை தெரிவித்தார்.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ஒழிக்க பொது உறுதிமொழிகள் இருந்த போதிலும், அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து அது பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இழப்பீடுகள் மற்றும் காணாமல் போனவர்களை மையமாகக் கொண்ட உள்நாட்டு நிறுவனங்களின் பணிகளை மீண்டும் ஊக்குவிக்குமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகள் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பங்கேற்பு மற்றும் நம்பிக்கையை, உள்ளடக்கியதாகவும், விரிவானதாகவும், சர்வதேச தரங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் அனுமதி

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தை நாளைய தினம் (10) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை (10) முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை இந்த விவாதத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் ஏற்பாடாக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணைகளுக்கு மையக் குழு அழைப்பு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மையக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. கனடா, மலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியாவுடன் இணைந்து மையக் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் உரிமைகள் பேரவையின் பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் முன்வைத்துள்ளார்.

நீடித்த சவால்கள் மற்றும் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகள் ஆகிய இரண்டையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் ரெக் (Volker Turk) அடிக்கோடிட்டுக் காட்டியமைக்கு இதன்போது குமார் ஐயர் தனது நன்றியைப் பகிர்ந்துள்ளார்.

சட்டவிரோதக் கொலைகள், கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல், பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே ஆவணப்படுத்தியுள்ளமை தொடர்பிலும் அவர் இதன்போது நினைவு படுத்தியுள்ளார்.

கடந்த காலத்திலிருந்து விடுபட்டு, பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைத் தொடர்ந்து பாதிக்கும் ஆழமான வடுக்களைக் குணப்படுத்த இலங்கைக்கு ஒரு வாய்ப்பு காணப்படுவதாகவும் குமார் ஐயர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றில் அதன் உறுதிமொழிகளை அர்த்தமுள்ள நடவடிக்கைகளாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு நீதித்துறை செயல்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கு, குற்றவாளிகள் நீண்டகாலத் தண்டனையிலிருந்து விடுபடாமல் இருப்பது அவசியம் என்றும் குமார் ஐயர் வலியுறுத்தியுள்ளார்.

முழுமையான சுதந்திரமான மற்றும் பயனுள்ள பொது வழக்கு தொடுநர் அமைப்பை அவர் ஆதரித்துள்ளார்.
அத்துடன், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதும் மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமாக பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் ஐயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுநாள்..

Unknown சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுநாள்..

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 – 09 ஆம் திகதி வரையான நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் எனப் பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை.